கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)

திங்கள், 27 அக்டோபர், 2008

Eternal Slaves ! நிரந்தர அடிமைகள் !


நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்....
நிரந்தர அடிமைகளாய் நாம்!

ஐந்து முப்பதுக்கு எழுந்து
ஆறேகாலுக்குள் ஆயத்தமாகி
ஆறு இருபத்தைந்து
பேருந்து பிடித்து-
ஏழு பத்து ரயிலைப் பிடித்து
எட்டு நாற்பது பேருந்தை
மீண்டும் ஓடிப் பிடித்து
தொங்கியவாறு பயணம் செய்து
ஒன்பது மணிக்குள்
அலுவலகப் பதிவேட்டில்
கையெழுத்திட வேண்டும்!

இதற்குள் எல்லாம்
சரியாக
நடக்க வேண்டும்!

மீண்டும் ஐந்து மணிக்கே
அலுவலகம் முடிந்தாலும்
மேலே இருப்பவனின்
மெச்சுதல் வேண்டி
ஆறுக்கோ ஏழுக்கோ கிளம்பி
ஒன்பதுக்கோ பத்துக்கோ
வீட்டைச் சேர்கையில்
புறநகர் முழுதும்
மொத்தமாய் தூங்கும் !

வீட்டுப் பாடங்களை
முடித்து விட்டு
அப்பாவின் முகத்தைக் காண
ஆவலாய் காத்திருந்த
குழந்தைகள்
அரைத் தூக்கத்தில்
அரை குறையாய்ப் பேசும்!

அவற்றிற்கும்
அதனதன் கவலை!

காலையில் எழுந்து
மிச்ச சொச்ச பாடங்களை
முடித்து விட்டு
பள்ளிக்கு கிளம்ப வேண்டுமே!

இப்படியாக ஒவ்வொரு நாளும்...

நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்
நிரந்தர
அடிமைகளாய் நாம்!

"இந்தக் கணத்தில்"..1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: