கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)
▼
புதன், 31 டிசம்பர், 2008
"மேற்க்காண்டைப்" பூரிப்போம்! 2009
காலமற்ற காலமிதில்
கணக்கொழிந்த விசும்பிதனில்
நொடிகளிது வருடமிது
எனநமது மனமிரையும்!
மனமற்ற 'மேற்பாழில்'
காலமிலை கணக்குமிலை!
மாற்றமொன்று தேவையென
தேறுகின்ற மாந்தமனம்
மாறிவிடும் தேறிவிடும்
வேறுவழி பார்த்துவிடும்!
ஊழ்தனையும் உட்பக்கம்
காண்டுவிடும் உள்வலியால்
மேதினியில் மேன்மைபல
"மெய்மையினால்" செய்திடுவோம் !
கடலுக்கு துவக்கமிலை
காற்றுக்கு முடிவுமிலை
காலத்தை அளப்பதற்கோ
"மின்மினிக்கு" வழியுமிலை!
நீளுகிறப் பெருவழியில்
இடைதோன்றி மறைமனுவின்
சிறுகணக்கு இதுவெனினும்
புத்தாண்டு வாழ்த்திநிற்போம் !
ஒன்றிரண்டு அச்சடித்த
பழந்தாள்கள் முடிவுபெற்று
புதுத்தாள்கள் புறப்படட்டும்
தவறில்லை முயற்சிக்கு-
ஆரம்பம் ஓரிடத்தில்
அமைத்திடுதல் அறிவுடைமை !
உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
முதற்கல்வி குறள் சொல்லும் !
உலகத்தார் போற்றுகின்ற
"மேற்க்காண்டைப்" பூரிப்போம்!
-மோகன் பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: