கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)

சனி, 10 மார்ச், 2012

Tamil Poetry on Mosquitoes: வலிய முற்றுகை!

 

கலிரவு என்ற பேதமற்று

ஓயாத அவர்களின்

தொந்தரவும் சூழ்ச்சியுமே

சூழ்ந்த என்னுலகில்

ஆனவரை செய்தலுத்து

எஞ்சியதெல்லாம் வெறும்

கையறுநிலையின் மிச்சங்களே!


எல்லாவித எனதான நகர்வுகளையும்

அதிதீவிர போர்த்தந்திரங்களையும்

சகலவித போர்க்கருவிகளையும்

அவதானிக்கும் ஒரு

தேர்ந்த பகைமுனையில்

எவ்வித முன்னெச்சரிக்கையுமற்ற

போர்க்களச் சூழலில்

இழப்பின் வலியோடு

இடறித் தடுமாறியே

நகர்கிறது என் சுயம்!



உறக்கம் தொலைத்த இராத்திரிகளை

ஆங்கு அடிமைப்பட்ட கணங்களை

யாதொரு சிரமுமின்றி கச்சிதமாய்

நான் மறந்துவிடுகிறேன்...

எனக்கே உரித்தானதொரு

அசவுகர்ய காரணியால்

பிரதி நாளும் !



என் அதிதீவிர புரிதலில்

படர்ந்த நிம்மதி யாதெனின்..

அடியேன் ஒன்றும் தனியனில்லை-

என்னை யொப்பவே

இப்பூமி வெளிஎலாம்

வித்தகம் பேசும்

அறிவியல் மானுடர்

'விண்வெளி சென்று வீடுதிரும்பி

அணுவுலை மெச்சி

வாய்கிழித்த கையொடு

போர்வையில் சுருட்டிய

சவத்தைப் போன்றே

அடக்க-நித்திரை செய்கின்றார்கள்...

அந்தச் 'சின்னக் கொசுக்களின்'

முற்றுகைச் சிறையில்!



-யோஜென் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: