கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)

சனி, 18 ஜனவரி, 2020

இப்படியே போய்விடாதே காலமே!


இன்னும் செய்ய
ஆயிரம்
இருக்கையில்
முகநூலில் மூழ்கியும்
குறுந்தகவல்களில் குலைந்தும்
தூரத்து மின்மினிகளில்
இலயித்தும்
ஒரு சுனாமியின் பாய்ச்சலாய்
கடந்துபோய் கழிந்துவிடாதே!
என் புத்திக்குள் சக்தியேற்று!
வேண்டிய பலவற்றை
விடாது செய்யவும்
வேண்டாத சிலவற்றை
யான் விலக்கி வைக்கவும்
வீரிய விருப்பம்
என்னுள் திணித்துவை!

வெறும் "முப்பத்தாறாயிரத்து
ஐநூற்று சொச்சத்தை"
அடிக்கடி நினைவூட்டு;
சீர்வாழ்வின் வீணை மீட்டு!
இருந்தவர் மறைந்த
ஏழாயிரம் கதையளி!
இருப்பதில் சிறப்பது
எதுவெனத் தெளிவி!
உள்ளம் உடையாதிருக்க
காலத்தில் அருள்செய்!
'இருமை' கடந்தேக
இதமாய்க் கற்பி!
என்னுள் கிடக்கும்
ஏகாந்தம் உணர்த்து!

எளிய உயிர்களையும்
ஏற்று 'மதிக்கும்' இங்கிதம் தா!
ஆனபணிகளை ஆற்றும் போது
அடங்கிநிற்கும் உள்ளம் உதவு!
சிறிது பெரிதென பேதமொழித்த
சீரிய சமநிலை தவறாது அளி!
குழந்தைகள் போற்று !

கூடி வாழ்ந்திடும் கூடுகள் கொடு!
நிலாச்சோறுண்ட அற்றைநாட்களை
அப்படியே மீண்டும் கையளித்துப்போ!
வீதியில் முளைத்த மூங்கில் கட்டிலில்
முதியவர்கள் 'கதைக்க'
இளைஞர்கள் 'கலக்கும்'
கலகலப்பு காட்டு!
எங்கள் வானத்தில்
மகிழ்ச்சியின் பூரிதத்தை
தாய் மழையாக்கு !

அன்பின் தலைமையில்
அறிவின் "சிறுபண்டங்கள்"
தொல்லை தராமல்
இருந்து கொள்ளட்டும்!

-YozenBalki

(Will continue... sometime if destiny permits...)
**********
www.yozenmind.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: