Translate this blog to any language

புதன், 26 ஆகஸ்ட், 2026

நேபாளத்தில் திடீர் வெள்ளம்: நமக்கு கற்றுத்தரும் பாடம்!

"உலகில் மழையின் அளவு குறைந்து வருகின்ற இந்த நாளில், வெள்ளம் ஏற்பட்டு ஊர்கள் நாசமாகும் காரணம்தான் என்ன?" 


என்று 2011-லேயே நாம் எழுப்பிய கேள்விதான், 


இன்று இமயமலைச் சரிவில் இருக்கும் நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைக்குப் பெரிய இயற்கைச் சீற்றங்கள் நடக்கும் போதெல்லாம், உலக நாடுகள் அனைத்தும் ஒற்றை வரியில் 'பருவநிலை மாற்றம்' (Climate Change) என்று பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்கின்றன. ஆனால், உண்மை அதுவல்ல! 'பருவநிலை மாற்றம்' என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது முற்றிலும் தவறு. 

இந்தத் திடீர் வெள்ளங்களுக்கும் பேரழிவுகளுக்கும் பின்னால் இருப்பது இயற்கையின் சீற்றம் அல்ல; மனிதர்களின் அடக்கமுடியாத பேராசை மட்டுமே!

 'பருவநிலை மாற்றம்' ஒரு ஏமாற்று வேலை!

கடந்த 100 அல்லது 200 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவா, மழையா இன்று பெய்துவிட்டது? அப்போதெல்லாம் வராத வெள்ளச் சேதங்கள், கடந்த 30, 40 ஆண்டுகளில் மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக நிகழ்கின்றன? அறிவியல் உலகம் 'திடீர் கனமழை', 'பனி உருகல்' என்று கதையளப்பதெல்லாம், மனிதன் செய்யும் தவறுகளை மூடிமறைக்கத்தான். இயற்கை எப்போதும் போலத்தான் இயங்குகிறது. ஆனால், அந்த இயற்கையைத் தாங்கும் திறனை நிலத்திற்கு இல்லாமல் செய்தது மனிதன் இழைத்த துரோகம்.

பேராசையும் பேரழிவும்: மூன்று பிரதான சான்றுகள்:

1. மலைகளைக் குடையும் கனிமவளக் கொள்ளை:

இமயமலைப் பகுதிகள் இயற்கையிலேயே மிகவும் இளமையான, எளிதில் உடையக்கூடிய பாறை அமைப்பைக் கொண்டவை. அங்கு கனிம வளங்களைச் சுரண்டுவதற்காகவும், கட்டுமானக் கற்களுக்காகவும் சக்திவாய்ந்த வெடிபொருட்களைப் (Dynamite) பயன்படுத்தி மலைகளைத் தகர்க்கிறார்கள். இந்தத் தொடர் அதிர்வுகளால் பாறைகளின் உட்புறத்தில் கோடிக்கணக்கான விரிசல்கள் விழுந்து, ஒட்டுமொத்த மலை அமைப்பின் ஸ்திரத்தன்மையும் குலைந்துபோய் உள்ளது.

2. காடழிப்பும் 'சேற்று நதி' உருவாக்கமும்:

சுரங்கங்கள் அமைப்பதற்காகவும், முறையற்ற சாலைத் திட்டங்களுக்காகவும் மலைச் சரிவுகளில் இருந்த அடர்ந்த காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. மரங்களின் வேர்கள் இல்லாததால், மண்ணை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும் சக்தி நிலத்திற்கு இல்லாமல் போய்விட்டது. இன்று லேசான மழை பெய்தால் கூட, வெட்டப்பட்ட தளர்வான மண் மற்றும் பாறைக் கழிவுகள் மொத்தமாகச் சரிந்து, தண்ணீரோடு கலந்து, சாதாரண வெள்ளத்தை ஆபத்தான "சேற்று வெள்ளமாக" (Debris Flow) மாற்றி, பாலங்களையும் சாலைகளையும் எளிதாக அடித்துச் சென்றுவிடுகிறது.

3. நீர்வழிப் பாதைகளை அடைத்த பேராசை:

நீரின் இயல்பு மேட்டில் இருந்து பள்ளத்துக்குச் செல்வது. மலைகளில் இருந்து ஓடைகள், ஆறுகள் வழியாக உபரி நீர் தங்கு தடையின்றிப் பாய்ந்து கடலுக்குச் சென்றடைய வேண்டும். ஆனால், கனிமக் கொள்ளையின் கழிவுகளையும், குவாரி மண்ணையும் ஆற்றுப் படுகைகளிலேயே கொட்டி ஆற்றின் ஆழத்தைக் குறைத்துவிட்டனர். போதாததற்கு, ஆற்றின் கரைகளிலேயே தங்கும் விடுதிகளையும், கட்டிடங்களையும் எழுப்பி நீர்வழிகளை அடைத்துவிட்டனர். நீர் போக வழியின்றி அலைபாயும்போது உள்கட்டமைப்புகள் அழியாமல் என்ன செய்யும்?

வெள்ளம் நமக்குக் கற்றுத்தரும் பாடம்:

"சில நூறு மனிதர்களின் பேராசைக்கு ஒரு நாகரீகமுள்ள பெரும் சமூகம் அழியத்தான் வேண்டுமா?" என்ற எனது அன்றைய கேள்வி இன்றும் நேபாளத்துக்கும் பொருந்தும், நாளை நமக்கும் பொருந்தும். நீர் வழிகளைச் சிதைத்து, மலைகளைக் குடைந்து லாபம் பார்க்கும் மனித பேராசைக்கு இயற்கை கொடுக்கும் பதிலடிதான் இது.

இனியாவது 'பருவநிலை மாற்றம்' என்ற போர்வையின் கீழ் நம் தவறுகளை ஒளித்து வைப்பதை நிறுத்துவோம். இயற்கையைக் காப்போம், நீர்வழி காப்போம், பேரழிவு தவிர்ப்போம்!

-Yozen Balki 

- யோஜென் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: