Translate this blog to any language

திங்கள், 28 செப்டம்பர், 2026

என் நினைவலைகளில் ஹைதராபாத் சினிமா வரலாறு: 14-15 வயதில் நான் கண்ட அரிய காட்சிகள்!

வணக்கம் நண்பர்களே,

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத, அதே சமயம் தென்னிந்திய சினிமா வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடைய சில சுவாரசியமான பக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.


இன்றைக்கு ஹைதராபாத் என்றாலே பிரம்மாண்டமான சினிமா ஸ்டுடியோக்களும், ஹைடெக் சிட்டியும் நம் கண்முன்னே வந்து போகும். ஆனால், நான் சொல்லப் போகும் கதை 1975-76 காலகட்டத்தைப் பற்றியது.


அப்போது எனக்கு வெறும் 14 அல்லது 15 வயதுதான் இருக்கும். அந்தச் சிறு வயதில், தெலுங்குத் திரையுலகின் இருபெரும் துருவங்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ் (ANR) மற்றும் என்.டி. ராமராவ் (NTR) ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டுடியோக்கள் உருவானதை மிக அருகில் இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.


இதற்கெல்லாம் காரணம், என் தாய் மாமா திரு. T.J. பலராமன் அவர்கள் தான். அவர் 'பாலாஜி ஃபேப்ரிகேட்டர்ஸ்' (Balaji Fabricators) என்ற நிறுவனத்தை சென்னையில் வைத்து நடத்தி வந்த ஒரு திறமையான ஃபேப்ரிகேஷன் காண்ட்ராக்டர். SSL நிறுவனத்தில் 1972 வரை மார்க்கராக பணியாற்றியவர். எனது தாய் வழி தாத்தா திரு. T.P. ஜெயராமன் அவர்கள் திருநின்றவூரில் வாழ்ந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ஆவார். அவரது பெயரில் ஜெயா கல்லூரி அருகில், கிழக்கு பக்கம் நான் போட்ட "ஜெயராம் நகர்" என்ற லேஅவுட் உள்ளது. 
தாத்தா அவர்கள் செய்த அரசியல் மற்றும் சமூகத் தொண்டுகள் பற்றி பின்னொரு சமயம் எழுதுவேன்.

அந்த காலத்தில் சென்னை, பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் SSL (Southern Structurals Limited) என்ற அந்த Vagon Shop இயங்கி வந்தது. அதை அங்குள்ள கிராம மக்கள் "வாயின் ஷாப் கம்பெனி" என்றுதான் குறிப்பிடுவார்கள். அதன் தலைமை அலுவலகம் ராஜா அண்ணாமலைபுரத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி அவர்களின் பங்களாவுக்குள், தற்போது அங்கு ஒரு புட்டபர்த்தி சாய்பாபா கோவில் உள்ளது, அங்கு இயங்கி வந்தது. SSL நிறுவனம் ஏதோ நஷ்டம் காரணமாக 1972-ல் மூடப்பட்டு மீண்டும் சில காலம் கழித்து திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டு அந்த இடத்தில் தான் இப்பொழுது Tidal Park, என்ற பெயரில் தமிழக அரசு நிறுவியுள்ள 21 மாடிகள் கொண்ட நிறுவனம் சுமார் 6000 பேருக்கு வேலைகள் தந்து இயங்கி வருகிறது. 

(பட்டாபிராம் டைடல் பார்க் (TIDEL Park Pattabiram) உருவானதற்கு அதிமுக முதலிலும் (AIADMK) பிறகு திமுக (DMK) ஆகிய இரு ஆட்சிகளுமே வெவ்வேறு காலகட்டங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்தத் திட்டம் இருவேறு ஆட்சிக் காலங்களின் தொடர்ச்சி மற்றும் கூட்டு முயற்சியால் 2020-ல் துவங்கி 2024-ல் முழுமையடைந்தது)


1972ல் அந்த SSL நிறுவனம் மூடப்பட்ட போது பல்வேறு தொழிலாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த போது, என்னுடைய மாமாவும் அப்படி ஹைதராபாத்துக்கு வேலை விஷயமாக இடம் பெயர வேண்டி வந்தது. 

வெறிச்சோடிய பாறை நிலமும் எங்களின் ஜீப் பயணமும்:

1975-ஆம் ஆண்டு காலகட்டத்தில், இன்றைய ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியெல்லாம் மனித நடமாட்டமே இல்லாத ஒரு வெறிச்சோடிய காடாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் தார்ச் சாலைகளோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ அன்று கிடையாது. எங்குப் பார்த்தாலும் வெறும் பிரம்மாண்ட பாறைகளும், ஆங்காங்கே சிறிய சிறிய புதர்ச் செடிகளும் மட்டுமே நிறைந்த பகுதியாக அது இருந்தது.

சாதாரண வாகனங்கள் அங்குச் செல்லவே முடியாது. அதனால், அந்தப் பகுதிக்கு நாங்கள் போய் வர எப்போதுமே ஜீப் (Jeep) வாகனத்தைத்தான் பயன்படுத்தினோம். அந்தப் பாறைகளுக்கு நடுவே ஜீப் குலுங்கிக் குலுங்கிச் சென்ற அந்தப் பயணங்கள் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. சினிமா உலகம் மெட்ராஸிலிருந்து ஹைதராபாத்திற்கு மாறத் தொடங்கிய அந்த நேரத்தில், அங்கு முதன்முதலில் தனக்கு சொந்தமாக ஒரு பிரம்மாண்ட ஸ்டுடியோவை உருவாக்க  திரு. நாகேஸ்வர ராவ் அவர்கள் திட்டமிட்டார்.
அந்தக் கரடுமுரடான பாறை நிலத்தில், சிவில் கட்டுமானத்துக்கு மேலாக பிரம்மாண்டமான இரும்பு மற்றும் கூரை ஷெட்களை அமைக்கும் (Structural Fabrication) மிக முக்கியப் பொறுப்பை என் மாமா திரு. ஜெ. பலராமன் அவர்கள் தான் ஏற்றிருந்தார். 

அவரது கடுமையான உழைப்பில் [அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் (Annapurna Studios)](https://en.wikipedia.org/wiki/Annapurna_Studios) கம்பீரமாக உருவானது.

சிகரெட்டும், பகுத்தறிவும்: ANR-ஐ நேரில் சந்தித்த அந்த நாள்!

அந்த ஸ்டுடியோவில் முழுமையாகப் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் திரைப்படம் 'செகரட்டரி' (Secretary - 1976). அந்தப் படத்தின் முதல் காட்சி (First Shot) படமாக்கப்பட்ட போது, 14/15 வயது சிறுவனாக நான் அங்கே, அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் நேரில் நின்று கொண்டிருந்தேன்! அவர் அந்தப் படத்தில் ஒரு பங்களாவின் உள்புற படிக்கட்டில் இருந்து இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதுதான் முதல் காட்சியாக எடுக்கப்பட்டது. 

அங்கு நான் கண்ட ஒரு காட்சி என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. நடிகர் நாகேஸ்வர ராவ் அவர்கள் தீவிரமான பகுத்தறிவுச் சிந்தனையாளர் (நாத்திகர்). ஸ்டுடியோவின் முதல் நாள் பூஜைகள் தொடங்கி நடந்தபோது, அதில் தனக்கு உடன்பாடில்லை என்பதால் அவர் அப்படியே அமைதியாக வெளியே வந்துவிட்டார். வெளியில் வந்து அவர் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றார்.

அந்த கால கட்டத்தில் நானும் பெரியாருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவன் என்பதால் அவரது அந்தப் பகுத்தறிவுத் தோற்றம் எனக்குள் ஒரு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. எனக்கும் அப்போது கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதால், அவரிடம் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. உடனே அவரிடம் சென்று, எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் ஏதோ பேசினேன். அந்த மாபெரும் நடிகர், ஒரு சிறுவனான என் பேச்சை மிகவும் எளிமையோடு ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்பின், அந்த ஸ்டுடியோவின் முதல் ஷாட் படமாக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மாடிப் படிக்கட்டில் இருந்து, நாகேஸ்வர ராவ் அவர்கள் கம்பீரமாக வசனம் பேசிக்கொண்டே இறங்கி வருவார். அந்த வரலாற்றுத் தருணத்தை நேரில் பார்த்த சாட்சிகளில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு இன்றும் பெருமையே!

அடுத்த பிரம்மாண்டம்: நாச்சாரத்தில் 
NTR-இன் ராமகிருஷ்ணா ஸ்டுடியோஸ்
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பணிகள் முடிந்த கையோடு, 1976-இன் பிற்பகுதியில் என் மாமாவிற்கு அடுத்த பெரிய வாய்ப்பு தேடி வந்தது. அது மக்கள் திலகம் என். டி. ராமராவ் (NTR) அவர்களின் அழைப்பு.

ஹைதராபாத்திற்கு அருகில் உள்ள நாச்சாரம் (Nacharam) என்ற பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், புராண மற்றும் வரலாற்றுப் படங்களுக்கான பிரம்மாண்டமான நிரந்தர செட்களை அமைக்க NTR திட்டமிட்டார். அதற்குப் பெயர்தான் [ராமகிருஷ்ணா சினி ஸ்டுடியோஸ் (Ramakrishna Cine Studios)](https://en.wikipedia.org/wiki/Ramakrishna_Cine_Studios). 

தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றாக்குறை இருந்த அந்த காலகட்டத்தில், அன்னபூர்ணா ஸ்டுடியோஸை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய என் மாமாவின் 'பாலாஜி ஃபேப்ரிகேட்டர்ஸ்' தான் இந்த ஸ்டுடியோவிற்கும் முக்கிய காண்ட்ராக்டராகச் செயல்பட்டது.
இந்த ஸ்டுடியோவில் தான் பின்னாளில் NTR-இன் பிரம்மாண்ட காவியமான 'தான வீர சூர கர்ணா' (1977) திரைப்படம் உருவானது. பிற்காலத்தில் NTR அரசியல் கட்சி (TDP) தொடங்கியபோது அதன் முக்கியக் கூட்டங்கள் நடந்ததும் என் மாமா கட்டிய இதே வளாகத்தில் தான்!

வரலாற்றின் மௌனப் பக்கங்கள்:

இணையத்திலோ அல்லது சினிமா வரலாற்றுப் புத்தகங்களிலோ என் தாய் மாமா திரு. ஜெ. பலராமன் அவர்களின் பெயரோ, பாலாஜி ஃபேப்ரிகேட்டர்ஸ் நிறுவனத்தின் பெயரோ பெரிய அளவில் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்.

ஆனால், ஆந்திரா மற்றும் தென்னிந்தியச் சினிமா வரலாற்றைத் தீர்மானித்த இருபெரும் தூண்களின் (ANR & NTR) கனவுக்கோட்டைகளைத் தன் உழைப்பால் எழுப்பிய பெருமை என் மாமாவையே சாரும். 

14 வயதுச் சிறுவனாக அன்று ஜீப்பில் சென்று பார்த்த அந்தப் பாறை நிலமும், அந்தப் படிக்கட்டுக் காட்சியும், ANR-இன் எளிமையும் இன்றும் என் நினைவலைகளில் அப்படியே பசுமையாக இருக்கின்றன!

அதேபோல, நந்தனத்தில் இருந்து சேமியர்ஸ் சாலை (Chamiers Road / Pasumpon Muthuramalinga Thevar Road) வழியாக கோட்டூர்புரம் நோக்கிச் செல்லும்போது அடையாறு நதியின் குறுக்கே வரும், கோட்டூர்புரம் பாலம் (Kotturpuram Bridge) 1987-ல் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான காங்கிரீட் படுக்கை வசமான தூண்களை தாங்குவதற்கான Structurals Steel Buckets செய்யும் பணிகளை SSL நிறுவனம் ஏற்று இருந்தது. 

அதை வேறு ஒரு காண்ட்ராக்டருக்குக் கொடுத்து அவர் செய்ய முடியாமல் விட்டுவிட, அந்த வேலையை மாமாவிடம் ஒப்படைத்து அவர் அதை திறம்பட செய்து முடித்து ஜெர்மன் தொழில்நுட்ப அறிஞர்கள் மற்றும் தமிழக மேலதிகாரிகள் பலரின் பாராட்டுதல்கள் பெற்றதை நான் நேரில் கண்டிருக்கிறேன். அந்த வேலைக்கான தற்காலிக செட்டுகள், வெல்டிங், கட்டிங் போன்ற பணிகள் தற்போது அங்கு பூங்காவாக மாறி உள்ள இடத்தில் தான் அப்போது நடைபெற்று வந்தன.

அந்த புதிய கோட்டூர்புரம் பாலத்தை கடக்கும் பொழுதெல்லாம் அந்த  நினைவுகளும் எனக்குள் வரும்!

வரலாற்றை மீண்டும் நினைவு படுத்தி பார்ப்பதில் மனிதர்களுக்கு மகிழ்ச்சி உண்டு தானே? அதைப் பதிவு செய்வதில் எனக்கும் மகிழ்ச்சி!

-Yozen Balki 🍀

இதை எழுதி முடிக்கும் பொழுது வேறொருவர் இது பற்றி ஒரு ஆங்கில கட்டுரை எழுதி இருக்கிறார்:

https://www.gulte.com/movienews/366528/there-was-no-road-to-annapurna-studios-50-years-ago/amp
அதையும் படிக்கவும்! 

அவருடைய வலைத்தளத்தில் இருந்து புகைப்படங்கள் பதிவிட்டு இருக்கிறேன்!!

சனி, 26 செப்டம்பர், 2026

கூகுள் ரேட்டிங், வணிகத்திற்கு வரமா அல்லது சாபமா? டிஜிட்டல் உலகத்தின் இருண்ட பக்கம்!!

புதிய யுகத்தின் நுகர்வோர் தர்மம்:
Google Ratings 

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனித குலத்தின் அன்றாட பழக்கவழக்கங்களை மட்டுமன்றி, உலகளாவிய வர்த்தகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. அதன் வீச்சம் பற்றி உணராதவர்கள் ஐயோ பாவம் தான்!


ஒரு காலத்தில் நேர்மையும் நாணயமும் மட்டுமே ஒரு வணிகத்தின் மூலதனமாக இருந்த நிலை மாறி, இன்று இணையப்பக்கத்தில் தோன்றும் சில எண்களும் (Ratings) நட்சத்திரங்களும் (Stars) ஒரு நிறுவனத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன. 

'கூகுள் ரேட்டிங்' என்ற இந்த டிஜிட்டல் பிம்பம் நவீன நுகர்வோருக்கு ஒரு வரப்பிரசாதமாகத் தோன்றினாலும், அதன் மறுபக்கம் பாரம்பரிய சிறு குறு வணிகர்களுக்கு ஒரு தீராத சாபமாகவும், டிஜிட்டல் உலகத்தின் இருண்ட பக்கமாகவும் உருவெடுத்து வருகிறது.

அந்தக் காலத்து வணிகம்: 
வாய்மொழி பரிந்துரையின் (Word of Mouth) மகத்துவம்!

இணையமும் ஸ்மார்ட்போன்களும் இல்லாத அந்தப் பொற்காலத்தில், சிறு குறு கடைகளும் நிறுவனங்களும் முற்றிலும் மனித உறவுகளின் நம்பிக்கையின் மீதே இயங்கி வந்தன. ஒரு ஊரில் இருக்கும் தையல்காரரோ, மளிகைக் கடைக்காரரோ அல்லது ஒரு மருத்துவ நிபுணரோ தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நேர்மையான சேவையின் மூலமே பிரபலமடைந்தனர். ஒரு நபர் ஒரு கடையில் திருப்தி அடைந்தால், அவர் தன் சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் 'அந்தக் கடைக்குச் செல்லுங்கள், அவர் ஏமாற்ற மாட்டார்' என்று நேரடியாகப் பரிந்துரைப்பார். 


இந்த நேரடி வாய்மொழி ரெஃபரன்ஸ் (Word of Mouth) என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஏனெனில், இதில் எந்தவிதப் போலியான விளம்பரங்களும் கலக்க வாய்ப்பில்லை.

இந்த முறையில் வணிகம் மெதுவாகவே வளர்ந்தாலும், அதில் ஒரு ஆழமான பிணைப்பும் நிரந்தரமான விசுவாசமும் (Client Loyalty) இருந்தது. தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தினர் ஒரே கடைக்குச் செல்லும் பழக்கம் இதன் மூலமே சாத்தியமானது. நேர்மையும் தரமும் மட்டுமே ஒரு தொழிலின் வெற்றியைத் தீர்மானித்தன, எந்தவொரு புற விளம்பரமும் அங்கு தேவைப்படவில்லை.

இன்றைய இளைஞர்களின் உலகம்: 80% முதல் 100% கூகுள் ரேட்டிங் ஆதிக்கம் தான். 

அதனால், இன்று உலகளாவிய நுகர்வோர் கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக, தற்போதைய இளம் தலைமுறையினர் (Gen Z மற்றும் Millennials) முற்றிலும் செல்ஃபோன் திரைகளின் வழியே உலகைப் பார்க்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். 

ஒரு தெருவின் வழியாக அல்லது சாலையின் வழியாக நடந்து அல்லது ஏதோ ஒரு வாகனத்தில் செல்லும் காலத்து இளைஞர்கள் அல்லது இளம்பெண்கள் கடையின் முகப்பில் வைத்திருக்கும் கடை பற்றிய பெயர்களை அண்ணாந்து பார்ப்பது அறவே கிடையாது. அவர்கள் கையில் இருக்கும் செல்ஃபோன் வழியாகத்தான் அவர்களது முதல் நடவடிக்கையே துவங்குகிறது.

உதாரணமாக ஒரு பொருள் அல்லது சேவை பற்றிய தேவை ஒரு இளைஞருக்கு எழுந்தால் அவர்  தன்னுடைய நெருங்கிய நண்பர்களை கூட அவர் கேட்கவே மாட்டார். உடனே google பிரவுசரில் அந்தப் பொருள் அல்லது ஏதோ ஒரு சேவை பற்றி டைப் அடிப்பார். அவர் இருக்கும் ஊரில் உள்ள அவர் தேடும் பொருள் அல்லது சேவை பற்றிய தரவுகள் வரிசையாக வரும்.

அதில் அதிகபட்ச கூகுள் ரேட்டிங், 5 நட்சத்திரம் அல்லது 4.5 ஐந்துநட்சத்திரம் ரேட்டிங் உள்ள கடை அல்லது சேவை மையத்தின் செல்போன் நம்பரை உடனே தொடர்பு கொள்கிறார். வியாபாரம் அந்த இடத்துக்கு தான் போகிறது. google கடைக்கண் பார்வையில் விழாத கடைகள் கீழே விழுந்து விடுகின்றன.

இது உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா முதல் இந்தியாவின் கிராமப்புறங்கள் வரை இன்று 80% முதல் 100% இளைஞர்கள் எந்தவொரு பொருளை வாங்குவதற்கு முன்பும் அல்லது ஒரு சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பும் கூகுள் ரேட்டிங்கைப் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்கிறார்கள்.

ஒரு புதிய உணவகத்திற்குச் செல்வதோ, ஒரு மருத்துவரை அணுகுவதோ, அல்லது ஒரு சலூனுக்குச் செல்வதோ எதுவாக இருந்தாலும், ஸ்மார்ட்போனை எடுத்து 'Near Me' என்று தேடுவதே அவர்களின் முதல் வேலையாக இருக்கிறது. கூகுளில் 4.5 நட்சத்திரங்களுக்கு மேல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே அவர்களின் தேடல் பட்டியலில் முதன்மையாகத் தோன்றும். 

வெறும் எண்களைப் பார்ப்பது மட்டுமன்றி, பிறர் பதிவிட்ட புகைப்படங்கள், மெனு கார்டுகள் மற்றும் கருத்துரைகளை (Reviews) வாசித்த பின்னரே அவர்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிடத் துணிகிறார்கள். உளவியல் ரீதியாக, மனித மனம் தனிப்பட்ட தேடலை விட, சமூகத்தின் ஒட்டுமொத்த சான்றை (Social Proof) நம்பத் தொடங்கியதன் விளைவே இது.

டிஜிட்டல் ஓட்டத்தில் காணாமல் போன பாரம்பரிய மனிதர்கள்:

இந்த அசுர வேக டிஜிட்டல் ஓட்டத்தில், தொழில்நுட்ப அறிவு இல்லாத பழைய காலத்து நேர்மையான மனிதர்கள் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். முப்பது நாற்பது வருடங்களாகத் தரமான சேவையை வழங்கி வரும் ஒரு மூத்த நிபுணருக்கோ அல்லது சிறு கடைக்காரருக்கோ தங்களது கடையை கூகுளில் பதிவு செய்யத் தெரிவதில்லை. ஆனால், நேற்றே தொழில் தொடங்கி, எவ்வித முதிர்ச்சியும் இல்லாத ஒரு நபர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்களை வைத்து மிரட்டியோ அல்லது காசு கொடுத்தோ நூற்றுக்கணக்கான 
5-ஸ்டார் ரேட்டிங்குகளைத் தன் பக்கத்தில் குவித்து விடுகிறார்.

இதன் விளைவாக, உண்மையான தகுதியும் நேர்மையும் கொண்ட பழைய மனிதர்களின் கடைகள் கூகுள் வரைபடத்தில் காட்சிப்படுத்தப்படாமல், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. புதிய தலைமுறை வாடிக்கையாளர்களின் வரத்து முற்றிலும் குறைந்து, அவர்கள் மெல்ல மெல்லத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, சந்தையை விட்டே காணாமல் போகும் அவல நிலை ஏற்படுகிறது. 

திறமையை விட ஆன்லைன் பிம்பமே ஒருவரது வெற்றியைத் தீர்மானிக்கும் இந்தச் சூழல், பாரம்பரிய வணிகர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

டிஜிட்டல் உலகத்தின் இருண்ட பக்கம்:
போலி மதிப்பீடுகளும் பிளாக்மெயிலும்!

கூகுள் ரேட்டிங் முறையின் மிகப்பெரிய சாபம் என்னவெனில், அதன் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள்தான். இன்று தொழில் போட்டிக் காரணங்களால், ஒரு கடையின் வளர்ச்சியைத் தடுக்க போட்டி நிறுவனங்கள் திட்டமிட்டு போலி கணக்குகளை (Fake Accounts) உருவாக்கி 1-ஸ்டார் ரேட்டிங்குகளை அள்ளித் தெளிக்கின்றன. இதனால் நல்ல நிலையில் இருக்கும் ஒரு வணிகத்தின் ஒட்டுமொத்த ரேட்டிங் ஒரே நாளில் சரிந்து, வியாபாரம் முடங்குகிறது.

மேலும், சில மோசமான வாடிக்கையாளர்கள் தங்களுக்குக் கடைகளில் கட்டணச் சலுகை அல்லது இலவசச் சேவை கிடைக்கவில்லை என்றால், 'உன் கடைக்கு 1-ஸ்டார் ரிவியூ போட்டு கடையை மூடிவிடுவேன்' என்று கடையின் உரிமையாளர்களை நேரடியாகவே ஆன்லைன் பிளாக்மெயில் (Review Blackmailing) செய்யும் கலாச்சாரமும் உலகளவில் அதிகரித்து வருகிறது. 

சிறு வணிகர்கள் தங்களின் பெயருக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்ற பயத்திலேயே இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து போக வேண்டியுள்ளது.

சமநிலையின் தேவை:

கூகுள் ரேட்டிங் என்பது வாடிக்கையாளர்களுக்குப் புதிய இடங்களைக் கண்டறியவும், தரம் குறைந்த சேவைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கிடைத்த ஒரு வரம்தான், அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதே வேளையில் அது தகுதியான ஏழைகளின் உழைப்பை மறைக்கும் சாபமாகவும் மாறிவிடக் கூடாது. 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்றாலும், ஆன்லைன் பிம்பங்களை மட்டுமே நம்பிக் குருட்டுத்தனமாக முடிவெடுக்காமல், நம் மண்ணின் பாரம்பரிய நேர்மையான வணிகங்களையும் கண்டறிந்து ஆதரிப்பது நுகர்வோராகிய நம் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமையாகும். அப்போதுதான் டிஜிட்டல் உலகம் உண்மையான அர்த்தத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

- Yozen Balki 

The Mind Sculptor (Since 1992). Sculpting clarity, confidence & relationships 
without medicines.

www.yozenmind.com