Translate this blog to any language

வெள்ளி, 28 நவம்பர், 2008

கடந்து வந்த கால-உச்சிகள்!



மாமலை இடையில்
சிறு மரம் மீதில்
வாழ்ந்திடும்
வாலிபக் குரங்கு!

கொள்கைக் கிளைகளை
'அப்படி' 'இப்படி'
அடிக்கடி மாற்றி
சிரித்தும் பழித்தும்
பேசிக் கழித்து
மகிழ்ந்து தான் கிடக்கும்!

"இதுவே உச்சி"
"முடிந்த முடிவென"
தளர்ந்த முதுமைக்
குரங்கிடம் சென்று
தவறாமல் நின்று
தம்பட்டம் அடித்திடும்!

வயோதிகக் குரங்கோ
தன்வாலிபம் முழுதும்
உச்சியை அறிய
தேடித் தேடி
உழைத்துக் களைத்த
சோர்வில் சிரிக்கும் !

அதன் தேடல் என்றோ
முற்றும் முடிந்தது!

இதை விடப் பெரிய
அரிய மரங்கள் !
ஒன்றை ஒன்று
விஞ்சிடும் மலைகள்!
முடிவேயற்ற உயர உச்சிகள்
கண்டு விண்டு
கடைசியில் சோர்ந்து
'கண்டது கண்மணி அளவு'
காணாதது கற்பனை அளவென'
உணர்ந்து உள்வாங்கி
சின்னப் புள்ளியாய்
அடங்கிக் கிடக்கும்!

இளைய குரங்கின்
இனிய பிரதாபமோ
இன்னும் இன்னும்
பின்னும் தொடரும்...

முதிர்ந்த மலைக் குரங்கோ
ஏதும் பேசாது
மவுனமாய்
நகைக்கும்-

தானும் கடந்து வந்த
'கால உச்சிகளை'
எண்ணி
எண்ணி !

-மோகன் பால்கி

15th July 2000

from MBK Diary



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: