Translate this blog to any language

திங்கள், 15 ஜூலை, 2013

என் செய்வாய் நீ இறைவா....? (கவிதை)




மெல்லிய பூஞ்சாரலாய்

இறங்கிவந்த இறைவன் ஒருநாள்

தனித் தனியே எம்மையணுகி

என்ன வேண்டுமென

அன்பில் வினவினான்!



எனது முறையும் ஆங்கு வர

'எதுவும் வேண்டாம்' என்றேன் யான்!

ஒராச்சர்யக் குறியாய் நிமிர்ந்த இறைவன்

'ஏனென உரக்கக் கேட்க

'அப்படி மேன்மையாய் யாதொன்றையும்

தருவதற்கான சாத்தியம்

இல்லையே உன்னிடம் !

என்றேன் யானும்!


புரியுமாறு எனைப் பேசப் பணித்தான்!

பேசலானேன்:

'அண்டம் படைத்த அன்பனே-அய்யா!

"நரை-திரை-பிணி-மூப்பு-சாக்காடு

இவையெலாம் என்னை

அண்டமுடியாமல் செய்திடுவாயா?

என் மழலைநாட்களின் மகிழ்ச்சி யாவையும்


ஒரு பையில் போட்டு கையளிப்பாயா?

என் அன்புக்குரியோர்க் கதுவே செய்து

என்னுடன் வசிக்கும் பரிசளிப்பாயா?

நன்னீர் உணவு உறைவிடம் தந்து

வெள்ளம் வறட்சி நிலமழியாவொரு

நிலை செய்வாயா?"


என்ன செய்திட முடியும் உன்னால்...?" 


இப்படி கேட்டதும் அதிர்ந்த இறைவன்

இளித்தவாறே இறைஞ்சலானான்!

"இழிவு படுத்தாதே; எதையாவது கேளேன்!

ஒரு பொருளோ பதவியோ உயரிய பரிசோ

ஏதோ ஒன்று கேட்டால் மகிழ்வேன்;

கேட்டுதான் தொலையேன்!


"ஒன்றுமே வேண்டாம் இறைவா!

உன்னைக் கண்ட மகிழ்ச்சியே

இன்றைக்குப் போதுமே!

உன்னைக் காணாத போதும்

அப்படியே இருந்தேன்!

இன்பதுன்பமாம் இருமைகள் தம்மை

நீநினைத்தாலும் நிறுத்த முடியாதென

எனக்குத் தான் தெரியுமே!


வெற்று இன்பம் திகட்டும் தினத்-தேன்!

துன்பம்-பனிமலை உருகிக் கரையும்!

ஆசைக் குரங்கு பற்றும் பலகிளை

வேசை மனத்தால் ஆசை நிற்குமா?

இரவு பகலென வரட்டும் இரண்டுமே!

நடுவில் நின்றிடும் நாடகம் அறிவேன்!

நீயே படைத்த பிரபஞ்ச வெளியில்

நிதமும் குழப்பம்... போயதைப் பாரேன்!

வணக்கம் இறைவா! வருகிறேன்" என்றேன்!


மூலையில் கிடந்த மானிடன் ஒருவன்

முண்டியடித்து என்னிடம் வந்தான்!

'விட்டுவிடாதே அரிய வாய்ப்பிது

போனால் வராது....!

நோபெல் பரிசும் பிரதமர் பதவியும்

கேட்டு வாங்கென" காதில் ஓதினான்!


சிரித்தேன் சிரித்தேன்...

அழுகை வரும்வரை விடாது சிரித்தேன்!

கடலில் நுரைக்கும் குமிழிகள் நினைத்தும்..

நோபெல் பரிசில் பிரதமர் பதவியில்

இன்பம் இருப்பதாய்

நினைக்கும் மானுடர்

நினைப்பை நினைத்தும்...

சிரித்தேன் சிரித்தேன்....

அழுகை வரும் வரை விடாது சிரித்தேன்!

-yozenbalki

சனி, 9 பிப்ரவரி, 2013

பெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது!



பெயரொன்று வைத்தானதால்

வந்த பீழை இது!


வரிஎன்றும் வார்த்தைஎன்றும்

அறிவென்றும் பெரிதென்றும்


இறுமாறும் 'வெளிஞானம்'

உயர்வென்று தடுமாறுது!


விஞ்ஞானம் பெயர் வைக்கும்

நீருக்குள் நெருப்பிருக்க


வழியில்லை என்றெண்ணும்!

பின்னோர் நாள் 'ஆம்' ஆனால்


நெருப்பின்னை 'தொருப்பென்னும்!

வேறென்ன சொல்லி விடும்?


அலங்காரப் பொருள் செய்யும்

அதுபோதும் என்றெண்ணும்!


உயர் வாழ்வையோ தள்ளும் 

வேறென்ன செய்து விடும் ?


அண்டத்தில் பிண்டமுள

பிண்டத்தில் அண்டமுள


என்றவனை பரிகசித்து

நீர் நெருப்பில் பெருவெடிப்பில்


பனியுருகும் பரிதவிப்பில்

"விஞ்ஞானச் சிற்றெறும்பு"


பொந்துக்குள் புலம்பி அழும்!

அருவொன்று உருவாகும்


உருவொன்று திடமாகும்

திடம் நீராய் காற்றாகி


மறைந்தங்கு மீண்டுவரும்!

பெயர் மாறும் அதற்கென்றும்


ஒலிக்கின்ற பெயரில்லை !

இதழ் சப்தம் பெயராமோ?


இயற்கை ஓர் பெரும் வியப்பு!

ஆதியந்தம் அற்ற வழி!


பிரபஞ்ச சமுத்திரத்தில்

சின்னதொரு சிப்பிகள் நாம்!


பெயரொன்று வைத்தானதால்

வந்த பீழை இதாம்!

திங்கள், 28 ஜனவரி, 2013

Never take anyone for granted

When we are in danger of losing a thing it becomes precious and when it is around us, it seems in tedious abundance and then we take it for granted as if we are going to live forever, which we are not.

-John McGahern

ளிதில் கிடைக்கும் எதையும் நாம் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்!
அது கைதவறி அல்லது கைமாறிப் போகும் வாய்ப்பை அறியாமலே மதிப்புள்ள சிலவற்றை விரைவில் இழந்தும் விடுகிறோம். வாழ்வு சிறியது என்பதை நாம் சிறிதும் உணர்வதில்லையே!










-YozenBalki

செவ்வாய், 1 ஜனவரி, 2013

Gone very far : வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்!!


   

பேராசை உருவாக்கும் பெருந்துயர்கள் என்சொல்வேன்!
நூறாசை கொண்டலையும் நரிக்குணங்கள் பெருகுதையோ!

வெறித்தனங்கள் வீணாசை அலங்காரப் பெருவாழ்வு 
தடித்தமனம் திகிடுதத்தம் அகங்கார பேயாட்டம் 

பரபரப்பு பழிகூறல் தீயறிவின் பிணவாசம் 
மரமரத்த நல்லுணர்வு தன்னனலத்துப் புழுவாழ்வு 

நாளும் வளர்க்கின்ற  சூழலிலே கிடக்கின்றோம்  
மேலும் தீவினையே எந்நாளும் புரிகின்றோம்!

நல்லோர் கூட்டுறவில் நாட்டமெதும் கொள்ளாமல்
அல்லவை சேர்ப்போரை அண்டியே பிழைக்கின்றோம்!

பணம்பொருளை பெருக்குதற்கே சிந்தனை செய்கின்றோம்
விதவிதமாய் வித்தகங்கள் பொய்யையே விற்கின்றோம்!  

வேதிப் பொருள்கூட்டி ஓராயிரம் பண்டம் 
தீதுதர இராப்பகலாய் உற்பத்தி பண்ணுகிறோம்!

அண்டமுள ஒருபூமி உருண்டை ஒழிப்பதற்கு
யாண்டும் பேய்களென திட்டங்கள் தீட்டுகிறோம்! 

'வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்'
பக்கமுள பந்தமின்றி 'பேசியிலே'  யாருக்கோ ஈசுகிறோம்!

புன்மை விஞ்ஞானம் அருளழித்துப் பொருள் பெருக்க 
உண்மைகளை உதறிவிட்டு பொய்யுடனே வாழுகிறோம்!

அய்யகோ! அழிக்கின்றோம் அன்னைஇயற்கை தனை 
உய்யவழியில்லை உதிரும்  இனிமனிதம்  தான்!