நான் மழை-மழை நான்!
தாயினும் சாலப் பரிந்தே ஊட்டும் வான் மழை!ஜடமென நினைக்கிறாய் மனிதா-என்னை!
கண்ட இடத்திலும் கணக்கின்றி பெய்வதாய்;
சில நாள் பொய்த்து மோசமும் செய்வதாய்
சிற்றறிவால் எனை சிறுமை செய்கிறாய்!
சிந்தனையற்ற சிறுமதியாளனே
சொல்வது கேளாய்!
கன்றுக்கு வைத்த முலைப்பால் தன்னை
எந்தப் பசுவும் மண்ணில் சொரியா!
உழைத்த பணத்தை நல்லான் ஒருவன்
வீணர்களுக்கு தானமும் செய்யான்!
"விண்ணில்-உலவும்-சிந்தனை" நான்!
உன் வறண்ட பூமியில் பொய்திடுவேனோ?
இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்துநீ
பாலை நிலங்களாய் மாற்றி வருகிறாய்!
ஏரி குளங்களை ஒழித்தும் பழித்தும்
உயர்ந்த 'சமாதிகள்' கட்டி வைக்கிறாய்!
ஒருசிறு செடியும் புழுவும் வாழா
சுற்று சூழலை வலிந்து செய்கிறாய்!
உன்னிடம் எனக்கென்ன வேலை-அற்பனே!
இன்னும் மேற்றிசை மேற்றிசை ஏகுவேன்!
வானோக்கி தவம்செய் காடுகள் மீதும்
"பச்சை பசுந்தரைப் புற்கள்" மீதுமென்
அன்பின் மிகுதியால் அளவாய்ப் பொய்வேன்!
நீ இருக்கும் மரங்களை இன்னும் வெட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: