Monday, October 8, 2012

அணு உலையா? ஐயோ வேண்டவே வேண்டாம்! ? We don't need Nuke danger!நண்பர்களே! 

அணு உலைகளால் கிடைக்கும் அபாய- மின்சாரம் நமக்குத் தேவை இல்லை!
அணுஉலை வெடித்துச் சிதறி ஏற்பட்ட கோரமான பேராபத்துக்கள்
உலகில் பல!

எனினும், மக்கள் விரோத அரசுகள் மக்களுக்கும், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கும் அதில் துளியும் விருப்பம் இல்லாத போதும், சில பல மறைமுக சுயநல காரணங்களால், அணுஉலைகளை ஏமாந்த மக்களின் தலையில் கட்டுவதையே வாடிக்கையாக கொண்டு இருக்கின்றன. இத்தனைக்கும், அணுஉலைகள் வழியாக வரும் 'அபாய'-மின்சாரம் நமது நாட்டில் 4%-க்கு மேல் கிடையாது. மிச்சமுள்ள 96% 'அபய'- மின்சாரம் அனல், புனல், காற்று, சூரிய ஒளி போன்ற பிற வழிகளில்தான் நமக்குக் கிடைக்கிறது.

மேலும், அணுஉலைகளில் உண்டாகும் அணுக்கழிவுகள் பத்திரமாக பலநூறு ஆண்டுகள் சேமித்துவைக்கப் படவேண்டும். இந்தியர்கள் நாம் அதை ஒழுங்காய்ச் செய்வோமா-நம்பிக்கை உள்ளதா ? தெருக்களில் இருக்கும் குப்பைக் கழிவுகளையே நாம் ஒழுங்காய்க் கையாளுவதில்லையே! அப்படியிருக்க அணுக்கழிவுகளில் கசிவு ஏதேனும் ஏற்பட்டால் அது பல லட்சம் வருடங்களுக்கு கதிர்வீசும் அபாயமும், அதனால் புல்பூண்டுகள் கூட அழிந்துபோகும் நிலையும் உள்ளதை நாம் தெளிவாய் அறியவேண்டும்! 

எதையும் கவனமாய் அழகாய்ச் செய்யும் ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளே அணு உலைகளால் மரண அடிபட்டுக் கிடக்க, ஒன்றையும் உருப்படியாய் இதுவரை செய்யாத நமது அரசுகளின், மற்றும் நம்மைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு உள்நாட்டுத் தொழிலதிபர்களின் உதட்டளவு உறுதிமொழியை யார் நம்புவது? (ஒன்று தெரியுமா? புக்குஷிமா பேரழிவுக்குப் பிறகு ஜப்பான் பயந்துபோய் தனது அணு உலைகளை இயங்கவிடாமல் நிறுத்தி வருகிறது)

http://www.youtube.com/watch?v=SUy-iPvd4lc

சரி! ஒருவேளை ஏதேனும் அப்படி கூடங்குளத்தில் அணுஉலை விபத்து ஏற்பட்டால் பாதிக்கப் படும் பொது மக்களுக்கு இழப்பீடு தருவது பற்றிகூட இதுவரை மத்திய அரசு பேச தயாராயில்லையே! இது என்ன நியாயம்?

ஆக, அப்படிப்பட்ட அபாயமான அணுஉலைகளை நல்லறிவும் நியாய உணர்வும் உள்ள நாம் எல்லோரும் நம் குழந்தைகளின்/சந்ததிகளின் நலன் கருதி பலமாய் எதிர்க்கவேண்டும். இதில் தேவையில்லாமல், 'மதம்' அது-இது என்று வீண் பேச்சு பேசி குழப்புவது அறியாமை ஆகும். சமீபத்தில் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் மற்றும் கேஜ்ரிவால் போன்றோர் இதேபோன்று ஊழலை எதிர்த்த போதும், அவர்களை ஒரு காங்கிரசை எதிர்க்கும் இந்துமத வெறியர்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று விமர்சனம் செய்து அவர்களது பொது-நோக்கத்தை கொச்சைப் படுத்திப் பேசியதை நினைத்துப் பாருங்கள். பொது விஷயங்களை நாம் எப்போதும் பொதுவாகவே பார்க்கவேண்டும். அதில் மதச் சாயம் பூசக்கூடாது. ஏனென்றால்...

அணுஉலை விபத்து ஏற்படும்போது எந்த மதத்தின் கடவுளும் அந்த மதத்துக் காரர்களை மட்டும் தனியாக வெளியில் எடுத்து கைதூக்கி காப்பாற்றிவிட மாட்டார்? அப்படி ஏதாவது உலக வரலாற்றில் நடந்துதான் இருக்கிறதா? 
மத விஷயங்கள் வேறு, பொது விஷயங்கள் வேறு!அழிவு என்று ஒன்று வரும்போது அது எல்லோருக்கும்தானே வரும்? வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள், காட்டுத்தீ, கொள்ளைநோய்கள் என்று வரும்போது அது 'ஜாதி-மதம்' பார்ப்பதில்லை. நாம் எல்லோரும்தான் மொத்தமாக பாதிக்கப் படுகிறோம்! இதுவும் அதுபோலத்தான். நம் எல்லோரின் பாதுகாப்பு பற்றித்தான் இந்தப் போராட்டம்.

வெடிக்கும்போது ஏற்படும் விபத்தினால் பல கிலோமீட்டர் தூரம் கிராமங்கள் நகரங்கள் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் கிடக்க, கடலில் அணுஉலையின் நச்சு கலந்துவிட்டால் அது உலகம் முழுவதும் சிறுக சிறுக பல லட்சம் வருடங்களுக்குப் பரவி உயிர்களைக் கொல்லாதா? இது போன்ற விஷப்-பரிட்ஷை நமது சந்ததிகளுக்குத் தேவையா?
________________________________________________

சில கேள்விகளுக்கு பதில்கள்:

திடீர் போராட்டம் ஏன்?
பதில்: கூடங்குளம் அணு உலைக்கு பூஜை போட்ட காலம் தொட்டு அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஜப்பானில் உள்ள புக்குஷிமா (Fukushima Nuclear Power Plant) அணு உலை போன வருடம் 11th March 2011-இல் சுனாமி அலையால் பெரும் அழிவை ஏற்படுத்தியதற்கு பிறகு அதைக்கேள்விப்பட்ட கூடங்குளம் அதன் சுற்றுப்புறத்து மக்கள், மேலும் பயந்து போராட்டத்தைத் தீவிரப் படுத்திவிட்டனர். ஒரு வருடத்துக்கும் மேலாக தற்போது நடந்துவரும் தொடர் போராட்டம் வழியாக அணு உலை எதிர்ப்பு நிலை என்பது இப்போதுதான் உலகத்தின் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.

அத்தனை கோடி ரூபாய் வீணாகி விட்டதே?
பதில்: யாரைக் கேட்டு ஆரம்பித்து இப்படி வீணாக்குகிறீர்கள்? முன்பு எதிலுமே அப்படி அமைச்சர்கள்நீங்கள் மக்கள் பணத்தை வீண் ஆக்கியதில்லையா? வெளிநாடுகளில் பதுக்கப் பட்ட பணம், உள்நாட்டு மெகா கொள்ளைகள், தவறான பொருளாதாரக் கொள்கைகள், இதிலெல்லாம் வீணானது மக்கள்-எங்களது வரிப்பணம்தானே? எங்கள்பணம் வீணாவது பற்றி உங்களுக்கு என்ன திடீர் அக்கறை? "கணக்குப் பிள்ளைகளுக்கு "போலிக் கரிசனம் எதற்கு? எங்களின் உயிரைவிட எங்களது வரிப்பணம் வீணாவதொன்றும் பெரிதில்லை என்று 'கணக்குப் பிள்ளைகள்' உங்களுக்குத் தெரியாதா? எங்கள் சந்ததிகளின் "உயிரை அடகு வைத்து" மின்சாரம் எடுத்து, அதை உடனே இப்போது எங்களுக்குத் தாருங்கள் என்று நாங்கள் உங்களிடம் எப்போதாவது கையேந்திக் கெஞ்சினோமா? 
____________________________________________

எனவே நண்பர்களே! உங்களுக்காகவும் நம் எல்லோருக்காகவும் போராடும் சிற்சில போராட்டங்களையாவது, அவை பொதுவான போராட்டம் என்று உங்கள் இதயத்தால் அறியுங்கள்! நியாயத்துக்காக போராடும் அவற்றில்எல்லாம் 'மதம்' 'ஜாதி' என்று வழக்கமான அசிங்கமுத்திரை குத்தி, அதுபோன்ற போராட்டங்களை நசுக்கப் பார்க்கும் தீயசக்திகளுக்கு நீங்கள், அதில்உள்ள சூதறியாமல் ஒருபோதும் துணை போகாதீர்கள்.

என்றைக்குமே தர்மம்தான் வெல்லும்!

-யோஜென் பால்கி 
________________________________________

Thousands of fishermen from 40 villages around the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu have surrounded the area from about 500 metres in the sea and are shouting slogans to protest against the plant. This is a token seige of the plant, since they will not be allowed by policemen to get any closer. Activist SP Udhayakumar, who is spearheading the anti-plant protests, today said in their next action, protestors would lay siege to the Tamil Nadu Assembly in Chennai on October 29, 2012.

http://www.youtube.com/watch?v=iZnh8EWaluo

No comments:

Post a Comment

You can give here your comments: