குறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்!
_________________________________________
"குறளும் - நானும்" : தந்தை பெரியார் பேசிய உரை இது!
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று
கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.
ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால்
பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.
நான், 'இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை: அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.
அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்
கொண்டல்ல! 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்!" என்று கூறிவந்தேன்.
அதில் சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.
புராணக் கருத்துக்களிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக் கருத்துக்கள் ஆட்டம் கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு - பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால். இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன்,
குறளில் இப்படியிருக்கிறேதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்? என்று கேட்காதீர்கள், நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் - நான் குறளை ஆதரிக்கிறேன். அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ளமாட்டேன்,
உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார்; கொல்லாமையின்
உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக
நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்கமுடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான்
ஆதாரம் என்று சொல்லவில்லை.
குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள்
என்றுதான் கூறுகிறேன்,
ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும்
நாம் வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத் தேவையான சாமான்கள் மாத்திரம் தான் வாங்கிவருவோம்.
அதுபோலவே, குறளில் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன்,
குறளில் எதோ சில குறைகள் இருக்கலாம் இருக்கமுடியும். ஏனென்றால், அது இன்றிலிருந்து 1981 வருடங்கள் முந்தியது! அது
இன்றைய மாடல் அல்ல. அதாவது 2000 வருடத்திற்கு முந்தைய சங்கதி, திருவள்ளுவர் திரிகால முணர்ந்த
முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை.
மதவாதிகள் வேண்டுமானால், எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்' என்று பலரை
விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருசரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம்.
திருவள்ளுவர் நல்ல அறிவாளி. ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி கிடந்த மூட
எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும்.
ஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக - குறளே நம்முடைய மதமாக இருத்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கி விட்டார்கள். திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்காவிட்டாலும் அவருடைய பிறப்புப்பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள்,
வள்ளுவர் பிறப்பைப்பற்றி எழுதும்
போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம்
என்னவென்றால் - குறளைப் போன்ற நீதிநெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப்
போதிக்கத்தக்க தகுதியும் அறிவும் வள்ளுவருக்கு வந்ததற்குக் காரணமே, அவர் பார்ப்பானுக்குப் பிறந்ததால் தான்
என்ற கருத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்தப்படி பறைச்சியுடன் பார்ப்பான் கூடினான்
என்பது. பார்ப்பனர்களுக்கு தாயப்படி எவ்வளவு கேவலம் என்பதை மறந்துவிட்டார்கள். அக்காலத்தில்
அறிவாளிப் பாப்பான் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடத்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இந்தப்படியாக
முதல் எடுத்தவுடனேயே குறளையும், அதன் ஆசிரியரையும் இழிவுபடுத்திவிட்டார்கள்,
நாட்டில் புராணங்களைப்பற்றியும், இராமன் சீதை தொடர்பு பற்றியும், கந்தன் வள்ளி காதல் லீலைகள்
பற்றியும், கிருஷ்ணனின் பிள்ளை விளையாட்டு, கோபிகள் வீலைகள் பற்றியும் எல்லோருக்கும் - பாமரர்கள்,
பாட்டாளிகள், படிக்காதவர்கள், கூலிகள் முதற்கொண்டு பெரிய, பெரிய சீமான்கள் வரை தெரியும்;
தெரிந்திருப்பார்கள். ஆனால், குறள் பற்றிப் பெரிய பணக்காரர்களுக்கும் தெரியாது தெரிய வாய்ப்பும் இல்லை,
இந்தப்படியாக குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ மக்கள் மனத்தில் குறளின்
கருத்துக்கள் புகமுடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள் செய்து விட்டார்கள்.
நான், ஆரியக் கருத்துக்களெல்லாம் - அதன் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவைகளெல்லாம் ஒரு
கூட்டத்தின் உயர்வுக்கும், வேறொரு கூட்டம் வேதனைப் படவுமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன
என்று கூறி அவைகளை, ஆரியக் கருத்துக்களை அவைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற மதம், கடவுள் தன்மை, புராணங்கள் போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் புரிந்து வருவதால் எனக்கு வள்ளுவர்
உள்ளமும், அவர் நூலின் உண்மைக் கருத்தும் தெளிவாகத் தெரிகின்றது.
ஆகவேதான், நாம் திருவள்ளுவரை, அவர் இயற்றிய திருக்குறளைப் போற்றுகிறோம்.
திருவள்ளுவர் யார், எந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று நிச்சயமாய்க் கூற முடியாது. வள்ளுவர் ஆரியத்தை
எதிர்ப்பவர், ஆரியக் கருத்துக்களைக் கண்டிப்பவர், அவைகளை வெறுப்பவர் என்று தான் நமக்குத் தெரிகிறது.
அத்தோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை.
அவ்வளவு காலம் ஆரியக் கருத்துக்களை எதிர்த்து, அதற்காக துன்பங்கள் பல பட்டிருக்கும் சமணர்களும்
திருக்குறளை ஆதரிக்கிறார்கள், சைவ சமயத்தாரும், வைணவ மதத்தாருங்கூட திருக்குறளை மாபெரும் நூல்
என்று ஒத்துக்கொள்ளுகின்றனர். இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறிஸ்துவ மதத்தில் இருப்பவர்களும்
திருக்குறளைப் போற்றுகிறார்கள். இந்தப்படி எல்லோரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தை தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையியே கையாளவேண்டிய வழி வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது.
குறளாசிரியர் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை . இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஒரு
இடத்தியாவது 'இந்து' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், 1330 பாட்டுக்களிலும் ஒரு இடத்திலாவது இந்து' என்ற சொல் காணப்படவே இல்லை,
அது மட்டுமல்ல, குறளாசிரியர் கடவுளையும், மோட்ச நரகத்தையும் ஒத்துக்கொள்ளவில்லை . குறளில்
நீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர வீடு மோட்சம் பற்றி அவர் கூறி
இருப்பதாக இல்லை. அறம், பொருள், இன்பம் என்றுதான் முப்பிரிவுகளைக் கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை
விட்டுவிட்டார்.
திருவள்ளுவர் கடவுளைப்பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறினேன், திருக்குறளின் முதல்
அத்தியாயத்தில், 'கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கம் கொள்கைகள் இடம்
பெறவில்லை . போதும். இந்து மதக் கடவுள்களைப் பற்றிய புகழாரம் அந்தப் பத்துப் பாட்டுக்களிலும் கிடையாது.
சிலர் கூறுகிறார்கள், குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச்செருகல்
என்று, சிலர் அப்படியெல்லாம் இல்லை வள்ளுவர் பாடியதுதான் என்று கூறுகிறார்கள், நம்மைப்
பொறுத்தவரையில் கடவுள் வாழ்த்துப் பாக்களை வள்ளுவரே பாடினதாக வைத்துக்கொண்டாலும் ஒன்றும்
கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்காகவா வள்ளுவர்
வாழ்த்துக் கூறினார் இல்லை. கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப் பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர்
'கடவுள் என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த
என்பதாகக் கடவுளைக் குறிக்க கடவுள் என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது.
அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குரளில் கையாளவில்லை. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில்
கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல குறல் முழுவதிலுமே 1330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது
வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம் -
உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர், கடவுள் என்ற சொல்லை பயன்படுத்தவே இல்லை .
இரண்டாவது, கடவுள் வாழ்த்து என்பதே கேலிக்குரியது. மிகவும் தவறான சங்கதியாகும். சர்வ வல்லமையும் படைத்த, நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு கடவுள் வாழ்த்து' என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா?
வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய் இந்தப்படி கடவுள் என்று நாம் கருதுவதற்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா?
வள்ளுவர் வாழ்த்துப் பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக
நடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். சர்வ வல்லமையுடைய சர்வேசுவரனைப் பற்றிப் பாடுவதென்றால் இரண்டு, மூன்று பாட்டுக்களோடு குறளை
நிறுத்தியிருப்பார். அதை விட்டு அவ்வளவு பாட்டுக்கள் அவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நற்குணத்தைப் போதிக்கிறார் என்றால் என்ன பொருள், மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காதத்தான், வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துக்களை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
- தந்தைப் பெரியார்
விடுதலை' -- 30 - 05 -1950
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: