Translate this blog to any language

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

"நாங்கள் இந்தியர்களில்லை"- மனுஷ்யபுத்திரன் கவிதை


எங்களுக்கு இந்தி தெரியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் வடக்கத்தி தெய்வங்களை
வணங்குவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களது குழந்தைகள்
காய்ந்த சப்பாத்தியை
உப்பைத்தொட்டுக்கொண்டு
பள்ளியில் சத்துணவு சாப்பிடுவதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் கிராமங்களுக்கு
எப்போதோ மின்சாரம் வந்துவிட்டது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

மாட்டு மாமிசம் உண்பவர்களை
இங்கே யாரும் அடித்துக்கொல்ல முடியாது
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் காந்தியை 
கொலை செய்யவில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மதக்கலவரங்களில்
கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுவை
கீறி எடுத்ததில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
எங்கள் ஆண்கள் அனைவரும் படிக்கிறார்கள்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்களிடம் தொழிற்சாலைகள் இருக்கின்றன
எங்கள் நிலங்கள் தரிசாகக் கிடப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் ஊர்கள் அனைத்தும் 
சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
பேருந்துகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

இறந்த உடலை சுமந்துகொண்டு
இங்கே யாரும் முப்பது மைல்
நடக்க வேண்டியதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் பெயர்களுக்குப்பின்னே
சாதிப்பெயர்கள் இல்லை
சாதிப்பெயரைச் சொல்லி 
யாரும்அழைத்தால் 
நாங்கள் செருப்பால் அடிப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வேலையே இல்லாவிட்டாலும்
நாங்கள் பட்டினியாக இருக்கவேண்டியதில்லை
ரேஷன் அரிசியை சமைத்துத்தின்றுவிட்டு
தன்மானத்துடன் அரசியல் பேசிக்கொண்டிருப்போம்
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

நாங்கள் மருத்துவம் படிக்கிறோம்
கணிப்பொறி படிக்கிறோம்
ஆங்கிலம் படிக்கிறோம்
பல்லாயிரம் மைல் கடந்து
உலகெங்கும் திரவியம் தேடிச் செல்கிறோம்
எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு
வடக்கு நோக்கி கூலித்தொழிலாளிகளாய்
எங்கள் இளைஞர்கள் செல்வதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் குழந்தைகள் 
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறப்பதில்லை
எங்கள் பெண்கள் பிரசவத்தில் இறப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

எங்கள் தெய்வ நம்பிக்கைகள் தனி
எங்கள் சித்தாந்தங்கள் தனி
இரண்டையும் நாங்கள் ஒருபோதும் கலப்பதில்லை
ஆகவே நாங்கள் இந்தியர்களில்லை

வடக்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இருண்ட இந்தியா
அதில் நாங்கள் ஒருபோதும்
குடிமக்களாக இருந்ததில்லை

தெற்கே ஒரு இந்தியா இருக்கிறது
அது இரவிலும் சூரியன் உதிக்கும் இந்தியா
அதை அவர்களால்
ஒரு போதும் புரிந்துகொள்ளவியலாது

11.8.2020
காலை 9.54
மனுஷ்ய புத்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: