
ஏனிந்த மவுனம் ஏமாளித் தமிழா
எதற்காம் நமக்கு அரசியல் பேச்சு !
வாழ்நிலம் கொள்ளை போவதும் அறியாய்
வாழ்ந்த சரித்திரப் பெருமையும் தெரியாய்
அடிமைகள் ஆர்ப்பதும் ஆட்ட பாட்டமும்
குடிமை வழக்கம் உலகினில் இல்லையாம்!
கொத்துக் கொத்தாய் என்குலமது சாகையில்
செத்தவன் போலொரு சித்தம் மறந்தே
சிரித்துக் கிடந்து கவலை மறந்து
மரித்த பிணத்தை கொறிக்கும் கழுகாய்
தேறும் சில்லறை கடைக்கண் வைக்கும்
'தேராத்' தலைவர்கள் மரத்த உலகினர்!
கழுவாக் குறையாய் காலை நக்கி
பிழைப்பார் அறியார் உழைப்பார் நோவு!
ஆண்ட இனத்தவர் பூமிப் பந்தில்
அகதிகளாய் இன்றலையும் இழி நிலை!
வெளுத்தது நம்பி அன்னியப் பதர்களை
உள்ளே விட்டு உறங்கிய தீமை!
சிங்களக் காடையர் 'ஹிந்திய' வஞ்சகர்
சேர்ந்து வகுத்த தமிழினத் துடைப்பு!
துரோகிகள் காட்டில் பெய்த பெருமழை;
பெருகி ஓடிய 'முப்பது வெள்ளிகள்'!
'முள்ளி வாய்க்கால்' மறக்க முடியுமா?
உள்ளில் பழியாய் உறங்காச் சின-நதி!
எமது மழலைகள் அன்னை தந்தையர்
மகளிர் இளைஞர்கள் ஆநிரை மரங்கள்!
அடியோடு எரித்த அதிகார நிலைகள்
அந்நியன் செய்த பாலியல் வினைகள்!
நெஞ்சில் நெருப்பாய் என்றும் கிடக்கும்!
வினைக்கு எதிர்வினை அறிவியல் பாடம்!
பகைவனுக்கருளவும் தொழுத தமிழர் யாம்
சிங்கள பவுத்தமோ 'கருப்பை' கிழித்தது!
ஒன்றே குலமென உலகைப் பார்த்தவர்
எங்கள் தமிழர் உயர்ந்த பண்பினர்!
கீழைத் திசைகளில் புலிக்கொடி பறவா
தேயமில்லையாம் இமயமும் வென்றோம்!
இற்றை நாளில் வஞ்சக நெஞ்சினர்
விரித்த வலைகளில் சிக்கிக் கிடக்கிறோம்!
ஒருநாள் தங்க சிங்களன் வந்தான்
'சென்னையில் இன்று வடவர்கள்' போன்றே!
நம்பிக் கிடந்தோம் நமது நாடென
ஒட்டக மூக்கின்று ஆமையின் வீடு!
வந்தவன் வளர இருந்தவன் தேய
பிச்சைக்கு வந்தவன் பெருமான் ஆனான்!
உலக சரித்திரம் அப்படித் தானே!
நம்பிக் கிடந்தார் தாய்நாடு இழந்தார்!
பிழைக்க வருபவர் திண்ணையில் படுத்து
திரும்பித் தன்னூர் விரைதல் இயற்கை !
நாடு பிடிக்கும் சிங்கள வஞ்சமோ
தம்மினம் சேர்த்து தமிழரைச் சாய்த்தது!
திரைகடல் ஓடி திரவியம் செய்தவன்
திரும்பி வருகையில் சிங்கள பூமி!
தமிழினி இல்லை எங்கும் சிங்களம்
முக்கியத் துறைகள் சிங்களர் கென்றார்!
வருத்தம் - கோபம் - கூட்டம் - 'செல்வா' ;
அமைதிப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தன!
சிங்களக் காடையர் பவுத்த வெறியர்கள்
எங்கணும் ஆடிய கோரத் தாண்டவம்;
எந்த மொழியிலும் சொல்வதற் கில்லை!
சொந்த மண்ணிலே அகதிகள் ஆயினர்!
இழவு விழாத வீடுகள் இல்லை
இழிவு படாத பெண்டிரும் சொற்பமே!
இனியும் பொறுத்திட இயலா நிலையில்
பிறப்பவை தாமே விடுதலை போர்கள்?
கோழைகள் மட்டுமே 'கொண்டவள்' தந்து
கொடிய பகைவனை சமரசம் செய்வார்!
குலுக்கும் நட்பை வெட்டும் கைகளை
'யுத்த பூமியில்' முத்தம் தருவமோ ?
எமது தளிர்களை கருக்கிய தருக்கரை
நொடியும் மறவோம் திருப்பித் தருவோம்!
உலகெலாம் பரந்த எந்தமிழ் மாந்தர்
உள்ளம் பதிக்க ஒன்று சொல்வேன்!
தீமைகள் தொடர்ந்த சரித்திரம் இல்லை!
எல்லா இரவும் ஒருநாள் விடியும்!
-மோகன் பால்கி





_____________________________________
எல்லா இரவும் ஒருநாள் விடியும்!

யோஜென் பால்கி
yozenbalki