Tuesday, January 13, 2009

உதவியா பொழுது போக்கா ?

"உதவி" என்பது
நம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ
அல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்!

அது
நிறைய நேரம் இருக்கும் போது
பொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,
அல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக
அதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல!
மாறாக,
நமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக
நமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,
நம்மிடம் பணமே இல்லாத போதும்
உதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்
தன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்!

சுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்
தன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று
திட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று!
அது "தானம்" எனப்படும்!

அதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது!
அது "பொழுது போக்கு" என்க!

-மோகன் பால்கி

31st Jan 2004


Sunday, January 11, 2009

கலியுகத்தின் குற்றம்!


வசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்
இலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன!
அதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.
வேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் !

அதே போன்று,
தர்ம யுகத்தில் தேவைக்கு மேல்
செழிப்பும், செல்வமும் இருந்தது!
அதனால், பேராசைக்கும், பொறாமைக்கும்
அங்கு வேலையே இல்லாதிருந்தது!

இன்றோ கலியுகம்!
எல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே
எங்கும் வறுமை படர்ந்து வருகிறது!
இங்கு மனிதர்களும் அதிகம்
செயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-
ஆனால் கையிருப்போ அதி சொற்பம்!
அதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன!

இது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்?
இது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்!

-மோகன் பால்கி
22nd Jan 2004


இறைவா நீயும் வெளியேறு!
நான் இருந்த "வீட்டில்" கூட்டம் கூட்டமாய்
இன்று
யார் யாரோ!

நானும்
பெயருக்கு ஏதோ
ஓரமாய்...!

எனது தந்தை
"இவ்வீட்டைத்" தருகையில்
இந்தக் கும்பல்கள்
அன்றைக்கில்லை!

இன்றோ..
அரசியல் அண்ணன்கள்
மதம் முதிர்ந்த கிழடுகள்
கிரிக்கெட் மைத்துனர்
என்று
ஒரு ஊரே கிடந்து
என் "அறைகளில்"
சப்தமிடும்!

அது போதாதென்று
மூலைக்கு மூலை அமர்ந்து


சினிமா சீரியல்
அடுத்த வீட்டு கதை என்று
சிரித்தும் அழுதும்
அமைதி கெடுக்கும்
அக்காள் தங்கைகள்!

அதோடு நிற்காமல்
இவர்களைப் பார்க்க
எவர் எவர்களோ வந்து
அவர்களும் "உள்-நின்று"
ஓயாமல்
சப்தமிடுகிறார்கள் !

இடையிடையே
என் தந்தையும்
வந்து தங்கி
சப்தமிட்டுச் செல்கிறார்!

எப்படியோ!
சதா சப்தமிடும்
ஒரு
இயந்திரமாகிப் போனது-
என் "வீடு"!

என் தந்தையோடு
நான் மட்டுமே இருந்த நாளில்
கொஞ்சம் அமைதியும்
ஏகாந்தமும்
இருந்ததாய்
ஒரு ஞாபகம் !

ஒரு நாள்!
நான்
பெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;
அவரவர்களை
"அவரவர்களின்-சொந்த வீட்டிற்கு"
துரத்தியடிப்பது என்று!

ஒரு
சிம்ம கர்ஜனையில்
அவர்கள்
சிதறியோடினார்கள்!

அப்பா!
என்ன ஒரு ஆனந்தம்..
என்னவொரு ஏகாந்தம்!

இனி என் வீட்டில்
எனது "உள்-வீட்டில்"
அரசியல் மதம்
சினிமா கிரிக்கெட்
என்று
எதற்கும் இடம் இல்லை!
வெறேது பற்றியும்
உள்-வெளி
கூச்சல்கள் இல்லை!

இனி
எனது தலையும்
ஒரு
பஜனை மடம் அல்ல!
அது
சப்தமற்ற ஆகாயம்-
அலை நின்ற சமுத்திரம்!

ஆம்!
நான் இனி
என்னுடன் மட்டுமே
இருக்கப் போகிறேன்!

எனக்குள் இருந்து
என்னில் கரைந்து
அந்த ஏகாந்தத்தில் நான்
காணாமல் போவேன்!

எனவே - இறைவா !

என் - தந்தையே - நீயும்
வெளியேறு!

-மோகன் பால்கி
12th April 2004


வெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக!


அறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது.
எவ்வளவுதான் மிகச்சிறந்த அறிவானாலும்
அது
செயல்படும் மனிதனிடமே சிறப்படைகிறது!

மேலும்,
"அறிவு" செயல் படுவதற்கான சக்தியையும்
ஏதோ ஒரு "செயலே" தருகிறது!

அதாவது,
அமைச்சர்களுக்கும்,
"அறிஞர்களுக்கும் "
எந்தப் பெருமையும் அற்ற
ஏதோ ஒரு "அரசன்" சம்பளம் தருவது போல!

-மோகன் பால்கி

Saturday, January 3, 2009

Thursday, January 1, 2009

"பனி மலர்கள்" காத்துநிற்போம்!ஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை
பத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்!

புலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்
புண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்!

புவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்
புண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் !

தீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்
ஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை

ஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்
இன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்!

உயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்
இறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்!

மறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்
தருவோம் நம்இதயத்தை "பனி மலர்கள்" காத்துநிற்போம்!

-மோகன் பால்கி