Translate this blog to any language

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

எல்லையற்று விரிதலே - ஞானம்!


எல்லையற்று விரிதலே
ஞானமடைதல் ஆகும்-
சுருங்கி அடைபடுதல் அன்று!

காற்று அடைபட்டு நிற்பதில்லை-
அது
நிலங்களின் பெயர்களை
பொருட் படுத்துவதும் இல்லை!
ஐம்பூதங்களும் அவ்வாறே!

தத்துவ ஞான வார்த்தைகளில்
சிறை படாமல்
வாழ்வை
நடுவில் நின்று பார்த்தலே
தவம் எனப்படும்!

அப்படிப்பட்ட தவத்தின் பயனே
"ஞானம்" ஆகும்!

ஞானம் பிரிவுகள் அற்றது!

விழிப்பு, கனவு, உறக்கம் என்னும்
மூன்று நிலைகளிலும்
அதில்
ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்
"துரியம்" என்னும்
நிலையே அக் தாகும்!

அதனையே "துரிய மெய்ஞானம்"
என்று ஆன்றோர்கள்
குறிப்பால் உணர்த்துவர்!

-மோகன் பால்கி

புதன், 22 அக்டோபர், 2008

"கருத்துப் - பிழை"


என் நண்பனே !

எனது வலிகளை நீ
அறிந்திருக்க நியாயம் இல்லை தான்!

அம்மா கூட
ஆற்றுப் படுத்தலாம்
அவ்வளவே தவிர
உள்ளே கிடக்கும் இரணங்களை
உள்-நுழைந்து பார்க்க
யாரால்தான் இயலும்!

ஒருவர் வலியை
இன்னொருவர் அறிய
இங்கு
வழியே இல்லை!

காக்கையின்-பசி-வலியும்
எருதின்-புண்-வலியும் போல...!

எந்த வலி பெரிது
எது அதிக நியாயம் என்று
எந்த புத்தர் வந்து
உன்னிடம் விளக்கி
புரிய வைக்கப்போகிறார்!

இருப்பினும்,
நான்
இப்போது உணர்கிறேன்..

நீயும் நானும் ஒன்றே என்ற
சிறியதொரு
"கருத்துப் பிழையில்" தான்
வெடிக்கிறது என்
விவஸ்தையற்ற பெரும் கோபம்!

-மோகன் பால்கி