Translate this blog to any language

வெள்ளி, 7 ஜனவரி, 2011

The 'Wheel' Will Rotate On!! குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!






















சிறியதை பெரிதும் பெரியதை சிறிதும்
செய்பவன் ஒருவன் அவன்பேர் இறைவன்!

"மாற்றமுடிந்தவை முடியாதன"  என
மாநிலம் உள்ளதை மறந்தவர் பலபேர்!

பெரியதும் அவனால் சிறியதும் ஆகும்-
சிறியதும் அதுபோல் மலையென மாறும்!

தினந்தினம் வேகம் வேறு திசைகளில் 
மனமது அடங்காதோடி விரைகையில்

சிறிதினில் மறைபொருள் ஒளிந்த தறிவரோ?
அறிவினில் புதைந்த அறிவதும் அழுக்காம்!

'நாணான்' என்னும்  நாணமற்றதை
வண்ணான் ஆவியில் வெளுப்பது போலும்

வாழ்வின் இறைமை வெளுத்தே துவைக்கும்
ஆன்ம விளக்கம் 'அடங்கையில்' உணர்த்தும்!

இதுவும் அதுவும் உயர்ந்தவை யாவும்
பொதுவினில் வைத்தால் வெறுமையே மிஞ்சும்!

நிமிர்ந்த மலைகளை சாய்த்தோ சமநிலை?
தாழ்வறு பூமி தரணியில் உண்டோ?

உயர்ந்தவை அறுத்துப் பரப்பிய சிறுமை
சின்ன மனிதர்கள் செயற்கை அன்றோ?

உலகம் அதுவாய் அழகாய் இருக்கையில்
உள்ளம் நம்முள் எரிந்தே கிடக்கும்!

சிறிது பெரிதென-பெரிது சிறிதென
செப்புதல் மனமே- மனமே நோயாம்!

இன்றைய இரவு நாளை விடிந்து
விடியல் இரவாய் மாறுதல் இயற்கை!

போனது திரும்பி - வந்தது போகும்
நாடுகள் அழிந்து பாலையும் ஆகும்!

பாலையும் ஒருநாள் நாடுகள் ஆயின;
"இருமை" இறைவன் லீலையே அன்றோ?

பொறுத்தவர் புண்ணியர் வழிதோறும் வாழ்வர்
தேதி குறிப்பவர் சேதிகள் அறியார்!

இருப்பது கொண்டு நலமுடன் வாழும்
திருப்பதம் பற்றிய அடியவன் துறவி!

கடமை செய்திடும் கண்ணியர் உயர்வர்
சோம்பிக் கிடக்கும் கயவர் அழிவர்!

இருப்பினும் இறைவனை குத்திக் குடைதல்
பிறந்த ஒர்சிசு 'இணையக்' கேட்பதாம்!

அறிவறியாத குழவிகள் போன்றே
அழிவது யாவும் தனக்கென வேண்டும்;

அழுது புலம்பியே வாணாள் தேய்க்கும்;
குரங்குப் புண்ணாம் அறிவினை என்செய?

பிறவிக் குற்றமோ பெருமான் விதியோ? 
உறுத்து வந்த ஊழ்வினைப் பயனோ?

"அவனருளால்தான்" அவன் தாள் வேண்டி
அவனியில் அமைதி பெற்றிடலாகுமாம்!

ஆன்ம ஞானிகள் அன்றே அருளினார்!
அகத்துள் அண்டம் மறையும்-திரியும்!

அடங்கா மனதை அடக்கும் ஞானியின்
அன்பில் அடங்குதல் அதுவுமே அறியார்!

எல்லாம் 'இங்கே' 'இக்கணம்' இருக்க
ஏங்கித் திரியுமாம் சின்னப் பறவை!

கோடி வார்த்தைகள் கூறியும் என்ன?
குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!

yozenbalki

செவ்வாய், 21 டிசம்பர், 2010

Onion - Eye watering price-rise! "வெங்காயம்"... என்று நினைத்தாலே கண்ணீர் வருகிறது!!




'வெங்காயம்'. அதை உரித்தால் தான் கண்ணீர் வரும்!

இன்றோ "வெங்காயம்" என்று நினைத்தாலே நடுத்தரக் குடும்பங்களில் கண்ணீர் வருகிறது! 

ஒரு கிலோ வெங்காயம் விலை, மொத்த விலை கடைகளில் Rs.50/ - Rs. 60/- என்றும் அதுவே சிறு கடைகளில் Rs. 90/- Rs.100/- என்றும் போய் கொண்டிருக்கிறது. 
ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும், இது போன்ற அநியாய விலைகள் அவ்வப்போது அத்யாவசியப் பொருட்கள் மீது ஏற்றப் படுவதும், மக்கள் கொஞ்ச நாள் அதைப் பற்றி பொருமுவதும், பிறகு அதைப் பொறுத்துக் கொண்டு போவதும் சகஜமாகி விட்டது!'

அத்யாவசியப் பொருட்கள்:
1. அரிசி
2. கோதுமை
3. துவரம் பருப்பு  (வட நாட்டில் 'தால்' என்பர் )
4. உளுத்தம் பருப்பு
5. உப்பு
6. சர்க்கரை.
7. வெங்காயம்
8. தக்காளி
9. உருளைக் கிழங்கு
10. எரி வாயு /மண் எண்ணெய்/ அல்லது விறகு
11. மக்கள் போக்குவரத்துக்கு பயன்படும் டீசல் / பெட்ரோல்
12. பால்
13. மக்கள் அடிக்கடி பருகும் டீ/ காபி 
இது போன்ற ஒரு பத்து-பதினைந்து பொருட்கள்தான் இன்றியமையாதன; மக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதனவாகும் !!


ஆனால், ஒவ்வொரு முறையும் இவை போன்ற அனைத்துப் பொருட்களும் காரணமின்றி விலை ஏறுவதற்கு என்ன காரணம்? 
வெங்காயம் விலை ஏறி, மக்கள் கோபப் பட்டு ஆட்சி கவிழ்ந்து விடுமே என்ற கவலையில் இன்று சரத் பவார் அறிக்கை விடுகிறார்..."வெங்காய ஏற்றுமதிக்குத் தடை என்று! ". இப்போது நமக்குப் புரிகிறது! எங்கே தவறு நடக்கிறது என்று!

* ஆட்சியாளர்கள் முதலாளிகளுக்குச் சலாம் போடுகிறார்கள்!
*தரகு முதலாளிகள் இந்தியாவில் விளையும் எல்லா அத்யாவசியப் பொருட்களையும் கப்பலேற்றி பணம் பார்க்கிறார்கள்!
*முதல் தர/இரண்டாம் தரப் பொருட்கள் யாவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று விடுகிறது; அந்நியச் செலாவணி பணம் பெரு முதலாளிகளுக்கு டாலர்களில் வந்துக் குவிகிறது!
* மூன்றாம் தரப் பொருட்களை இந்தியாவிலேயே குப்பை போல போட்டு அதையும் விற்றுக் காசாக்கிக் கொள்கிறார்கள்!
* வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களின் போதும்    உள்நாட்டு மக்களின் தேவையைப் பற்றிக் கவலைப் படாமல், கப்பல் ஏற்றுவது நடந்து கொண்டே இருக்கிறது!
* உழைக்கும் விவசாயிக்கு உரிய விலை போகாமல் இடைத் தரகர்களுக்கும், பதுக்கல் காரர்களுக்கும் பத்து பங்கு கொள்ளை லாபம் போய்க் கொண்டிருக்கிறது.
* பொது மக்கள் தலையில் தேவையின்றி ஒரு செயற்கை தட்டுப் பாடு, விலை ஏற்றம் சுமத்தப் படுகிறது.
* பதுக்கல் காரர்களை கடுமையாக தண்டித்ததாக இந்தியாவில் எங்கும் தகவல்கள் இல்லை.
* ஒரு டன் தானியம் விளைந்தால் அதில் 80% இந்தியர்களுக்குத்தான் சொந்தம்-மீதி வேண்டுமானால் ஏற்றுமதி-செய்து கொள்' , என்பது போன்ற மக்களுக்கான இறுக்கமான சட்டங்களும் இங்கு இல்லை எனத் தெரிகிறது!
* அத்யாவசியப் பொருட்கள் நமது இந்திய மக்களுக்கு தினமும் இவ்வளவு தேவைப் படுகிறது-அதை எக்காரணம் கொண்டும் விலை ஏற்றக் கூடாது என்ற நல்ல புத்தி, எந்த ஆட்சியாளருக்கும் கிடையாது!
* உதாரணமாக இந்த வருடம் 2010-ஆம் ஆண்டு மட்டும் பெட்ரோல் விலையை மத்திய அரசு  8 முறை ஏற்றி உள்ளது. விளைவு! போக்குவரத்துச் செலவுகளைக் காரணம் காட்டி எல்லாப் பொருட்களும் விலை ஏறிக் கொண்டே வருகின்றன! கீரைக் கார முனியம்மாள் கூட, மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் விற்ற கீரையை இன்று ஒரு கட்டு Rs.15/- க்கு விற்கிறாள்-கேட்டால் பேருந்து கட்டணம் ஒரு ரூபாய் ஏறி விட்டது என்கிறாள்!! ஒரு கட்டுக் கீரையை மட்டும் பேருந்தில் கொண்டு வந்தால் கூட போக-வர ரெண்டு ரூபாய் தானே ஏற்றி விற்க வேண்டும்? ஆனால் ரொம்ப விவரமாக அவளே சந்தோசமாக விலை ஏற்றிக் கொள்கிறாள்! படிக்காத முனியம்மாளே இப்படி என்றால் படித்த அறிவாளி வியாபாரிகளை  சொல்லவே வேண்டாம்!
எரி வாயுவின் விலை இன்னும் நூறு ரூபாய் ஏறப் போகிறதாம்!
* என்னைக் கேட்டால், பெட்ரோலுக்கு மானியம் தருவதை விட, பல அமைச்சர்கள் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கும் பணத்தை எவனாவது ஒரு நல்லவன் பிடுங்கி  மக்களுக்கே செலவு செய்து விட்டு, மக்களுக்கே ஆள் ஆளுக்கு ஒரு அஞ்சு/பத்து லட்சம் ரூபாய் செலவுக்குக் கொடுக்கலாம்! அவ்வளவு பணம் சுவிஸ் வங்கி போன்ற பிற நாட்டு வங்கிகளில் இந்திய மக்களின் வியர்வை-உழைப்பு, கள்ளப் பணமாய் பதுங்கிக் கிடக்கிறது! 

என்னமோ! காந்திக்குப் பிறகு ஒரு நல்லவனும் கண்ணில் படவில்லை!
(அவராவது வெள்ளைக்காரனை இந்தியாவை விட்டு விரட்டும் அளவுக்குத் தைரியம் கொண்டிருந்தார்!)

சில நல்லவர்கள்-நல்லவர்களாகவே இருப்பதிலும் ஒன்றும் பிரயோஜனம் தெரியவில்லை!

தைரியம் இல்லாத நல்லவனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப் போகிறது சொல்லுங்கள்?

yozenbalki___________________________________
பின் குறிப்பு:  
இதில் "பூண்டு" விடுபட்டுப் போய்விட்டது!
பூண்டு* விலை: தற்போது கிலோவுக்கு Rs.250/- என்று
கேள்வி !!!!

** இனிமேல் அதையெல்லாம் கண்ணில் பார்ப்பதற்கே காசு 
கேட்பார்கள் என்று தோன்றுகிறது!!!
____________________________________________
பிற்சேர்க்கை :

வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட ம.பி. முதல்வரின் மனைவி! click here: (மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானின் மனைவி சாதனா சிங்

________________________________________

Kitchens in India worried over Onion price: