Friday, April 20, 2012

Worst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் !பைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். 

வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்துசேரும் பிற மாவட்டத்து/மாநிலத்து மக்கள் தொகை, பெருகி வரும் அடுக்ககங்கள் இதுதான் இன்றைய சென்னையில் நிலை. அதனால் இங்கு அடுத்தவர்கள் முகமோ முகவரியோ தெரியாத நிலையில் நல்லவன் கெட்டவனைப் பிரித்தறிந்து கவனமாய் இருக்க இயலாச் சூழலை காலம் கொண்டுவந்து சென்னையிடம் சேர்த்திருக்கிறது! இனி சென்னைக்கு கஷ்ட காலம்தான் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! முக்கியமாக காவல்துறைக்கு இனி சவாலான காலம் துவங்கிவிட்டது!

இரண்டு நாட்களுக்கு முன்பு கெல்லிஸ் சிக்னலைத் தாண்டும் போது ஒரு நிகழ்ச்சி. சிக்னல் முடியும் சமயம், காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் மார்வாடி இளைஞர்கள் இருவர் வளைத்தும் நெளித்தும் அபாயகரமாக திரும்ப, சப்தம் கேட்டு நிலை தடுமாறி ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டி-யில் இருந்து விழுந்து விட்டாள். காயம் பெரிதாய் ஏதும் இல்லை எனினும் இதைக் கண்ணுற்ற பலருக்கும் அந்த இளைஞர்கள் மீது பெருங்கோபம் ஏற்பட்டது. அவர்கள் போன வேகத்துக்குபோய் அவர்களைப் பிடிக்க முடியாது என்று தோன்றியது. அது போகட்டும் இது வொரு சின்ன சம்பவம் தான் ! இது போன்ற கதைகள் சென்னையில் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

ஆனால் இது போன்ற, இன்னும் இதைவிட அபாயகரமான மற்றும் அநாகரிகமான வாகன ஓட்டிகளை சென்னை போக்குவரத்து காவல் துறை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதுதான் இங்கு கேள்வி? 

முன்பெல்லாம், 80- களில் இருந்தது போல, தவறு நிகழும் இடத்திலேயே ஆளை மடக்கி காற்றைப் பிடுங்கி விடுவது, நாலு சாத்து சாத்துவது  அசிங்கமாக திட்டுவது போன்ற எதுவுமே செய்யாமல் (போலீசார் அப்படி செய்தால் உடனே நம்ம ஆட்கள் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு எல்லாம் மனித உரிமை பேசவந்து தொலைப்பார்கள்..) பொம்மை போல இருந்தால் அல்லது ஆளும் அரசுகள் அப்படி (வோட்டு வாங்குவதற்காக) கைகட்டி வாய் பொத்திக் கொண்டு  இருக்கும்படி காவல் துறைக்குச் சைகை செய்து வைத்தால் வீங்கிப் பெருகும் சென்னையில், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அந்தக் கடவுளாலும் முடியாதுடா சாமி ! 

அட இல்லையா? அநாகரிகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓரிரு முறை மன்னிப்பு. அதனை அவர்களின் டிரைவிங் லைசென்சில் உடனே பதிந்து வைப்பது. அதன் பிறகு அவர்கள் அஞ்சி நடுங்கும் படியான அளவுக்கு குறைந்த பட்ச சிறைத் தண்டனையே ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை கடுங்காவல் சிறையில்....(Contd..)


தள்ளுவது, அல்லது குறைந்த பட்சமே Rs.10,000/- to Rs.1,00,000 அபராதம் விதிப்பது போன்ற கிரிமினல் (கவனிக்க...சிவில் அல்ல) சட்ட நடை முறைகள் இல்லாமல் ஒருபெரிய வளரும் மாநகரத்தை கட்டிக் காப்பாற்ற யாராலும் முடியாது! 

ஒரு சிறிய கிராமமாய் இருந்தால் அங்கு இருக்கும் மக்களே சமூகத்துக்கு புறம்பாக நடக்கும் கயவர்களை சில முறை மன்னித்து பிறகு நாயை கல்லால் அடித்து கொல்லுவதைப் போல கொன்று விடுவார்கள். சமூகம் உருப்படும்! ஆனால், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் காவல் துறையும், அதை விட கூடுதல் பொறுப்பில் இருக்கும் நீதி அரசர்களும்  வன்முறையாளர்களிடம் மிக்க மென்முறையாக நடந்து கொண்டால் எப்படி? 

இங்கே நூறு மக்களின் நன்மைக்காக குற்றம் புரியும் ஒரு/சில மனிதனை கடுமையாக தண்டிக்கலாம் என்பதை சமூக நன்மை கருதி ஏற்றுகொள்ள வேண்டும்! 

பகவத் கீதையின் சாரமும் அதுவே!பொது அமைதி வேறு தனி அமைதி வேறு. 
ஒரு குற்ற செயல் புரியும் மனிதனால் அவனது குடும்பத்தினருக்கு ஏற்படும் இழப்பு, வலி, வேதனை காரணமாக அவனை நீதி மன்றம் தண்டிக்கும் போது அவனுக்குப் பத்து வருடம் சிறைத்தண்டனை என்று உதரணத்துக்கு வைத்துக் கொண்டால், அதே மனிதனால் ஒரு சமூகத்துக்கு ஏற்படும் அமைதி கேட்டிற்கு அதைவிட பத்து மடங்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப் பட வேண்டும்! நீதி அரசர்கள் கவனிக்க:

அதாவது ஒருவன் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை ஏதோ ஒரு கோபத்தினால் படுகாயம் அடையச்  செய்து விட்டான் என்றால் அவனுக்கு
5 வருட சிறைத் தண்டனை; அதுவே ஒரு சமூக விரோதி கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்து நோக்கம் நிறைவேறாமல் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது பொதுமக்கள் மீது மோதி அதில் ஒருவர் படுகாயம் அடைந்திருந்தால், அவனுக்கு 25 வருட சிறைத்தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப் பட வேண்டும்!

அதாவது பொது அமைதியைக் குலைக்க இங்கு எவனுக்கும் உரிமை இல்லை என்ற உயர்ந்த ஞானம் நமக்கு வர வேண்டும்! அதாவது நீ எதையாவது செய்து கொள். அது பொது மக்களைப் பாதிக்காதபடி இருக்கவேண்டும் என்பதாகும்! உயர்ந்த ஞானம் உள்ள நீதிபதிகள் தான் இதை தர்ம நியாயம், பொது அமைதி கருதி சட்டம் மற்றும் நடைமுறை படுத்தும் உத்தரவாதம் செய்யவேண்டும் !

பொது அமைதி குலையும் நிகழ்வுகள்:

1.  நூறு பேர் கூட சேராத தெருமுனைப் பொதுக் கூட்டங்களுக்கு ஆயிரம் ஸ்பீக்கர்களைக் கட்டி அலறவிட்டு பொது அமைதி கெடுப்பவர்கள். பத்துமணிக்கு மேலும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் மதவாத/அரசியல்வாத கூட்டங்கள்.

2 . தெருமுனைகளில், சாலை சந்திப்புகளில் கூடிக் கதையளக்கும் மனித-மாடுகள், அங்கு தொல்லைதரும்படி நிறுத்தப்படும் வாகனங்கள்.

3.  மேடு பள்ளமான சாலைகளை நூற்றாண்டு கணக்கில் சீர் திருத்தம் செய்யவே முன்வராத உள்ளாட்சி அமைப்புகள். அதனால் பாதிக்கப் படும் வாகனங்கள் மற்றும் பாத சாரிகள். அதனால் வளைந்து வளைந்து சென்று ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் சூழ் நிலைகள்.

4.  தெரு ஓரங்களில் நிரந்தரமாக நிறுத்தப் படும் வேன்கள், கார்கள், லாரிகள் போன்றவை. அதில் நிகழும் சமூக விரோத செயல்கள் மற்றும் அதற்கான நிரந்தர சூழல்கள். 

5.  இருசக்கர வாகனங்களில் ஏற்றி செல்லப்படும் அபாயகரமான 'பாரங்கள்'. உதாரணம்: 6'-0" X 4'-00" அளவுள்ள ஒரு மரச் சட்டத்தை ஒருவன் பின்புறம் அமர்ந்து பிடித்துக் கொள்ள ஒருவன் சர்க்கஸ் காரனைப் போல வளைத்து நெளித்து ஓட்டிச் செல்லும் கொடுமை. அவர்களது வண்டி சாய்ந்தால் பொது மக்களில் யாரோ ஒருவர் படுகாயம் அடைந்தால் அதற்குப் பேர் தலை விதி என்று நம்மவர்கள் சொல்லிக் கொள்ளும் பேதைமை! மோட்டார் வாகனச் சட்டம் இங்கே என்ன செய்கிறது என்று தெரியவில்லை. நீதி மன்றங்கள்  சும்மா இருக்கும் மர்மமும் புரியவில்லை! 

6.  High-speed engine பொருத்தப் பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் இரண்டு-மூன்று பேர் அமர்ந்துகொண்டு ராக்கெட் வேகத்தில் உர்ர்...உர்ர்.. என்று என்ஜின் சப்தம் கிளப்பி வளைத்து நெளித்து.ஆர்ப்பாட்டம் செய்தபடி பொது அமைதியை  கெடுத்தவாறு  ஊருக்கு ராஜாவைப் போல நகரை வலம் வருவது, போலிஸ் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது! (ஆங்காங்கே ரகசிய வெப்-கேமரா வைத்தால்தான் என்ன? பிடித்து நிறைய அபராதம் வசூலித்தால் நாட்டுக்காவது நல்லதொரு வருமானம் வரும்! )

7.  கறுப்புக் கண்ணாடி ஏற்றப்பட்ட கார்கள்:
அதில் என்ன சமூக விரோத செயல்கள் நடை பெறுகின்றன என்று எவனுக்கும் தெரியாது! எதாவது குழந்தைகள்-பெண்கள் கடத்தப் பட்டாலும் யாருக்கும் தெரியாத சூழல். மேலும் பணக்கார பிள்ளைகள் கன்னா பின்னா என்று காரோட்டி யாராவது ரோட்டில் அடிபட்டு செத்தாலும் இவன்தான் அந்த டிரைவர் என்று கடவுளாலும் சாட்சி சொல்ல முடியாது. 

8.  நம்பர் ப்ளேட் சரியில்லாத வண்டிகள்:
ஸ்டைலுக்கு பிலிம் காட்ட வாங்கிய வண்டிக்கு  தவணை கட்டுவதற்கு, தாலி அறுத்து விட்டு ஓடுபவனை.. எந்த நம்பர் சொல்லி கண்டு பிடிப்பது-பிறகு எப்படி தண்டிப்பது? (முதலில் அது போலி நம்பராகதான் இருக்கும்-அது வேறு விஷயம்! மாற்ற முடியாத நம்பர்-ப்ளேட் பற்றி இப்போதுதான் டெல்லியில் பேச்சு வந்து இருக்கிறது!)

9.  ஏதேனும் ஒரு வண்டியில் போய்கொண்டே, சாலையில் அல்லது நடுத்தெருவில் 'பான்-பராக்' மென்று அவ்வப்போது எச்சில் துப்பியபடி செல்லும் திமிர்த்தனம்! அது போன்ற ஆட்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் நிரூபணம் செய்து பத்து வருஷம் கடுங்காவல் சிறையில் போட்டு அங்குள்ள  கைதிகளின் கழிப்பறையை தினமும் சுத்தம் செய்ய சொல்லவேண்டும்!

10.  நெரிசல் மிகுந்த சாலைகளில் கார், வேன் போன்ற வண்டிகளுக்குள் அதிக சப்தம் செய்யும் இசை.....?? அல்லது அவர்கள் விரும்பும் டப்பா பாடல்களை போட்டு ஊரையே அலற வைத்துக் கொண்டு செல்லும் கயவர்கள். மேலும், காதுகளில் இருந்து மொபைல் மைக்ரோபோனை கழட்டாமல் 'பைக்' /கார் ஓட்டும் இளைஞர்கள்/ யுவதிகள்...அதனால் ஏற்படும் கவனக்குறைவு...அதன் காரணமாய் பாதிக்கப் படும் அப்பாவிகள்! 
(இது போன்ற சமூக விரோத சனியன்களுக்கு எட்டடிக்கு எட்டடி அளவுள்ள சிறையில் 8 மெகா சைஸ் ஸ்பீக்கர் வைத்து 24 மணி நேரமும் Full Volume-இல் ஒரு மொக்கை இசையை ஒலிபரப்பி 80 நாட்கள் அதைக் கேட்குமாறு  தண்டனை தர வேண்டும்)

இன்னும் நிறைய நான் சொல்லுவேன் ஆனால் உங்களுக்கு இந்தக் காலத்தில் படிக்கிற பொறுமை தான் இருக்காது, அதனால் இத்தோடு நிறுத்தி, சென்னை நகரில் நீங்கள் பார்க்கும் பிற பல அநியாயங்கள் பற்றி  உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!

ஆக, பொது அமைதியைக் கெடுப்பவனை பாவம் பார்க்காமல் ஒழித்துக் கட்டுங்கள்! அவ்வளவுதான்!

பெரியார் தான் சொல்வார்: 


"பக்தி என்பது தனி சொத்து. ஒழுக்கம் என்பதோ பொது சொத்து. 
பக்தி இல்லாவிட்டால் எவருக்கும் நஷ்டமில்லை, ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்!"

ஆம்...பொது இடத்தில் ஒழுக்கம்; அதாவது பொது -ஒழுக்கம், 
பொது -அமைதி காக்கப் பட வேண்டும். இல்லாவிட்டால் அப்படிப் பட்ட 
ஒரு நாட்டை மிருகங்கள் வாழும் காடு என்று சொல்லிவிட்டுப் போகலாமே!

ஆட்சியாளர்களும், நீதி அரசர்களும் மேற்படி பெரியாரின் பொன்மொழியை மன மாச்சர்யம் ஏதுமின்றி நூறு முறை படிக்க வேண்டும்! 


No comments:

Post a Comment

You can give here your comments: