Translate this blog to any language

திங்கள், 24 அக்டோபர், 2022

தீபாவளி கொண்டாடலாமா?

"தமிழர்கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது", என்ற சித்தாந்த கருத்து என் போன்ற பலரிடமும் உண்டு!
அது ஆரியர்கள் தமிழினத்தின் மீது திணித்த ஒரு வஞ்சகத் திட்டம் என்ற வழக்கு தொடர்கிறது!

எவன் காலிலும் நமது குழந்தைகள் விழாத வரை
எந்த அடிமைத்தனத்திலும் நாம் உட்புகாத வரை
இது வெறும் பண்டியாகவே இருக்கும் நாள் வரை
அதை கொண்டாடிவிட்டு போவதில் என்ன பிழை?

பொங்கலோ தீபாவளியோ எல்லாம் நமக்கு ஒன்றுதான்!
சந்தையில் நம் சொந்தங்கள் விளைவித்த பொருள்களை நாம் வாங்குகிறோம்; ஒருவருக்கொருவர் பயன் அடைகிறோம்!

அதற்குள் சண்டையிட பண்டிதர்கள் போகட்டும்!
ஏழை பாழைகளுக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது!
பண்டிகை என்பது உற்சாகம்!
பெரியவர்களும் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் ஊர் விட்டு ஊர் சென்று ஒருவரையொருவர் சந்திக்கும் விழா!

அதுதான் எனக்குத் தெரிகிறது; மற்று எந்த காலத்திலோ உட்பொதிந்த  கொள்கை விளக்கங்கள் தெரியவில்லை!

வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக ஒரு, இதே போன்ற நற்பண்டிகைகளை விழாக்களை உருவாக்குவோம்!

எனினும், அதற்கு இணையான ஒரு பண்டிகையை தமிழின அறிஞர்கள், தமிழின அரசர்கள், தமிழினத் தலைவர்கள் ஒன்று கூடி இதுவரை அமைக்க முடியாத தோல்வியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!

எப்படியோ ஒரு பெரிய இரு பண்டிகைகள் தமிழ் இனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன! 
அது ஒரு புறம் இருக்க, பண்டிகை சமயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் விளை பொருட்கள் வழியாக மானுடம் தங்கள் உழைப்பு சக்தியை (பணத்தைப்) பரிமாறிக் கொள்கிறதே!

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சோர்வு அவநம்பிக்கை கலந்த மனித வாழ்வில், ஒரு சமூகம், ஒரே சமயத்தில் கொண்டாடும் பண்டிகைகள் குடும்பத்தில் ஒரு தற்காலிக மகிழ்ச்சியையேனும் தருகின்றன!

இதில் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கலந்து மகிழ்ந்து அன்பை பரிமாறிக் கொள்கின்ற காட்சியை நாம் காண முடியும்! பண்டிகை காலத்தில் நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் ஊரு விட்டு ஊரு செல்லும் மனிதர்கள் அதற்கு சாட்சி!

அட! இதுபோன்ற சென்டிமென்ட் இல்லாத வாழ்க்கை மிகவும் அருவருப்பானது!

எந்த பண்டிகையை கொண்டாடுவது என்பதை தனி மனிதர்கள் அல்லது சிறு குழுக்கள் தீர்மானிக்கவே இயலாது! அது தானாக பெரிய அளவில் எப்படியோ நிகழ்கிறது!

இப்போதும் கூட தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடுவதில் நமக்கு மறுப்பும் ஏற்பும் சமமாகவே இருக்கிறது!

சரி போகட்டும்! தமிழர்கள் அனைவரும் அதற்கு இணையான அல்லது அதற்கு மேலான ஒரு நன்னாளை கண்டுபிடித்து கொண்டாடி மகிழலாமே! யார் தடுத்தார்கள்?

கொண்டாட்டம் ஒரு சென்டிமென்ட்!

வெறும் சோறு மட்டும் தின்றுவிட்டு பண்டிகைகளே இல்லாமல் உயிர் வாழும் ஒரு சிறிய இனக்கூட்டம் கூட உலகில் எந்த பாகத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ஏதாவது ஒரு காலத்தில் உலக மக்கள் யாவரும் ஒருமித்து கொண்டாடக் கூடிய

(அந்நாளில், 'எனது உற்பத்திப் பொருளை அல்லது சேவையை இன்னொருவர் பெற, அவரிடம் இருந்து நான் அது போல் பெற', என்று மானுட இனம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுகின்ற) 

ஒரு பண்டிகை ஏதாவது வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்!

அதுநாள் வரை இது போன்றவை தொடரட்டும் என்றே நான் விழைகிறேன்!

YozenBalki 

😎🙏🙏😎

சனி, 17 செப்டம்பர், 2022

யாரந்த பெரியார்? ஏனிந்த புகழ்ச்சி? (கவிதை)

எந்த ஒரு சொல்?
******************
எந்த ஒரு சொல் 
ஆதிக்கவாதிகள்
கோட்டை கொத்தளம்
சுக்குநூறாக்கி 
மண் மேடாக்கிய
அந்த ஒரு சொல்?

எந்த ஒரு சொல் 
ஆரிய சனாதன
மென்னி திருகி 
மூச்சு நிறுத்தி 
திராவிட பூமியை
நிறுவிய திருச் சொல்?

எந்த ஒரு சொல்
சூத்திரர் வாழ்வை
நெம்பி நிறுத்தி 
உலகம் வென்றிட
கல்வியும் வேலையும்
அருளிய அச் சொல்?

எந்த ஒரு சொல்
பூமியில் பாதியாம்
பெண்ணின உயிரை
சமமாய் நடத்தென 
போர்க்குரல் உயர்த்தி
உழைத்திட்ட அருஞ்சொல்?

எந்த ஒரு சொல்
அமிழ்ந்தவன் உயர 
மூத்திரச் சட்டியை
சுமந்திட்ட வாறே 
இடையறாத் தொண்டு
புரிந்திட்ட பெயர்ச் சொல்?

எந்த ஒரு சொல்
மானமும் அறிவுமே
மனிதனுக்கு அழகென
தடியால் அடித்து
தமிழினத் தூக்கம் 
கலைத்திட்ட வினைச் சொல்?

அந்த ஒரு சொல்
தந்தை பெரியார் 
தந்தை பெரியார்!!

எந்தன் உள்-வெளி 
எங்கணும் நிறைந்து
உயிரெலாம் கலந்து
போர்க்குணம் நல்கிடும்
சமநெறி ஞாயிறு
தந்தை பெரியார் 
பிறப்பை போற்றுவம்!

-YozenBalki 

பெரியார் பிறந்தநாள் 
144-வது ஆண்டு
September 17-2022