Translate this blog to any language

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

பிள்ளையாரை முன்ன போல பெரியாரிஸ்டுகள் உடைக்க முடியுமா?

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? 

இது இப்பொழுது சங்கீகள் சனாதனவாதிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி!!

பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன RSS & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள் இவை:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து "சூத்திரப்பயலே தள்ளிப் போடா" என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

😎 முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! 

இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

14) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17) முன்பு RSS தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு, அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விளக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே, இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

18) முன்பு எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே, இன்று அதுபோல் வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

25)இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

26)அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

27) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க... குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

28) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

29) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே ! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?

35. இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எரித்தார்.

பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி சனாதன தர்மம் என்று சொல்லி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்! அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது கடைசியில் நீங்கள்தான்!

By
தோழர் 
கிருஷ் from Twitter
5th September 2023

ரொம்ப நல்லா இருந்தது! அதான்
அவரது அனுமதி பெற்று இங்கு பதிவிட்டு இருக்கிறேன்!

https://twitter.com/krish_itz?t=ZZVHv3KS8P1cxQ1ICcW52w&s=09

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வரி மேல் வரி போட்டு சாகடிக்கிறீங்க?

பொதுமக்கள் நாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதம் income tax தருகிறோம் (அரசுக்கு). மீதி சம்பளத்தில் (28 சதவீதம் GST என வாங்கும் பொருளுக்கு கட்டுகிறோம். பெட்ரோல் மற்றும் பல பொருட்கள் GST யில் சேர்க்காமல் 60 சதவீதத்திற்கும் மேல் TAX கட்டுகிறோம். 

மொத்தத்தில் சராசரி 50 சதவீதம் வாங்கும் பொருளுக்கும் உங்களிடமே (அரசுக்கு) வரி வருவாய் தருகிறோம்.

ஆக 30+50= 80 சதவீத வருமானத்தை உங்கள்(அரசு) கஜானாவில் சேர்த்துள்ள எங்களைப் பார்த்து

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? என கேட்பவர்கள் கவனிக்க!

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர்" தமது மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே, அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை - எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று 
காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும் பயணப்படுவதற்காக – உருப்படியான வேலை எதுவும் இல்லாமல், சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக் கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் செய்துக்
கொள்ளும் நாள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும் Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள்? திரிகிறார்கள்!
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின் நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை என்றுமே உறுத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …

Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax 
Entertainment tax
Property Tax – etc etc.

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –

அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை 
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!! 
                   
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
WhatsApp இல் வந்தது இது!

இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், 
நன்றி !!