Translate this blog to any language

வெள்ளி, 7 ஜனவரி, 2011

The 'Wheel' Will Rotate On!! குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!






















சிறியதை பெரிதும் பெரியதை சிறிதும்
செய்பவன் ஒருவன் அவன்பேர் இறைவன்!

"மாற்றமுடிந்தவை முடியாதன"  என
மாநிலம் உள்ளதை மறந்தவர் பலபேர்!

பெரியதும் அவனால் சிறியதும் ஆகும்-
சிறியதும் அதுபோல் மலையென மாறும்!

தினந்தினம் வேகம் வேறு திசைகளில் 
மனமது அடங்காதோடி விரைகையில்

சிறிதினில் மறைபொருள் ஒளிந்த தறிவரோ?
அறிவினில் புதைந்த அறிவதும் அழுக்காம்!

'நாணான்' என்னும்  நாணமற்றதை
வண்ணான் ஆவியில் வெளுப்பது போலும்

வாழ்வின் இறைமை வெளுத்தே துவைக்கும்
ஆன்ம விளக்கம் 'அடங்கையில்' உணர்த்தும்!

இதுவும் அதுவும் உயர்ந்தவை யாவும்
பொதுவினில் வைத்தால் வெறுமையே மிஞ்சும்!

நிமிர்ந்த மலைகளை சாய்த்தோ சமநிலை?
தாழ்வறு பூமி தரணியில் உண்டோ?

உயர்ந்தவை அறுத்துப் பரப்பிய சிறுமை
சின்ன மனிதர்கள் செயற்கை அன்றோ?

உலகம் அதுவாய் அழகாய் இருக்கையில்
உள்ளம் நம்முள் எரிந்தே கிடக்கும்!

சிறிது பெரிதென-பெரிது சிறிதென
செப்புதல் மனமே- மனமே நோயாம்!

இன்றைய இரவு நாளை விடிந்து
விடியல் இரவாய் மாறுதல் இயற்கை!

போனது திரும்பி - வந்தது போகும்
நாடுகள் அழிந்து பாலையும் ஆகும்!

பாலையும் ஒருநாள் நாடுகள் ஆயின;
"இருமை" இறைவன் லீலையே அன்றோ?

பொறுத்தவர் புண்ணியர் வழிதோறும் வாழ்வர்
தேதி குறிப்பவர் சேதிகள் அறியார்!

இருப்பது கொண்டு நலமுடன் வாழும்
திருப்பதம் பற்றிய அடியவன் துறவி!

கடமை செய்திடும் கண்ணியர் உயர்வர்
சோம்பிக் கிடக்கும் கயவர் அழிவர்!

இருப்பினும் இறைவனை குத்திக் குடைதல்
பிறந்த ஒர்சிசு 'இணையக்' கேட்பதாம்!

அறிவறியாத குழவிகள் போன்றே
அழிவது யாவும் தனக்கென வேண்டும்;

அழுது புலம்பியே வாணாள் தேய்க்கும்;
குரங்குப் புண்ணாம் அறிவினை என்செய?

பிறவிக் குற்றமோ பெருமான் விதியோ? 
உறுத்து வந்த ஊழ்வினைப் பயனோ?

"அவனருளால்தான்" அவன் தாள் வேண்டி
அவனியில் அமைதி பெற்றிடலாகுமாம்!

ஆன்ம ஞானிகள் அன்றே அருளினார்!
அகத்துள் அண்டம் மறையும்-திரியும்!

அடங்கா மனதை அடக்கும் ஞானியின்
அன்பில் அடங்குதல் அதுவுமே அறியார்!

எல்லாம் 'இங்கே' 'இக்கணம்' இருக்க
ஏங்கித் திரியுமாம் சின்னப் பறவை!

கோடி வார்த்தைகள் கூறியும் என்ன?
குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!

yozenbalki

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: