Sunday, August 28, 2011

அன்னா வென்றார்! தர்மம் வென்றது! Victory of Anna Hazare is Victory of Indian people!


ஊழலுக்கு எதிராகப் போர்க்குரல் உயர்த்தி இந்திய / உலக  சமூகத்தை திரும்பிப் பார்க்க செய்துவிட்டார் அன்னா ஹசாரே அவர்கள் ! 

ஊழலை விரும்பும் அரசியல் வாதிகளின் முகத் திரைகள் இவரால் கிழிந்து போனது. இந்திய இளைஞர்கள் அணி அணியாக திரள ஆரம்பித்து விட்டதைக் கண்டு அதிகார வர்க்கங்கள்  யாவும் இன்று கலங்கிப் போயிருக்கின்றன. இந்திய மக்களுக்கு ஒரு சேதி தெளிவாய்த் தெரிந்து போனது. அது என்னவெனில், ஆளும் கட்சி ஆனாலும் எதிரி/உதிரிக் கட்சிகளானாலும் அவர்களுக்கு ஊழலை ஒழிக்க எள்ளளவும் மனமில்லை என்பதுதான் அது. (கொள்ளையில் குளித்தவர்களுக்கு யோக்கியனாகும் மனம் அவ்வளவு சீக்கிரம் வந்து விடுமா என்ன?)

ஊழலுக்கு எதிராக கால வரை அற்ற உண்ணாவிரதம் துவங்கப் போகிறேன் என்று அன்னா அறிவித்தது துவங்கி பன்னிரண்டாம் நாள் இன்று காலை பத்து மணி வரை நடந்த சேதிகள் நமக்கு உணர்த்துவன:


*  உண்மையை தர்மத்தை யாரும் அழித்து விட முடியாது.

*  தகுந்த தலைவன் ஒருவனின் வருகைக்காக நல்லவர்கள் காத்திருக்கிறார்கள்.

*  இளைஞர்கள் சமூகம் அப்படி ஒன்றும் வரை முறை இன்றி கெட்டுப் போய்விட   இல்லை. தர்ம நியாயங்கள் மீது அவர்களுக்கு வளர்ந்தவர்களை விட அதிக அக்கறை இருக்கிறது. அதை வரலாறும் உணர்த்துகிறது.

* எல்லாக் காலங்களிலும் அதர்மம் சரியான தருணங்களில் வீழ்த்தப் பட்டு இருக்கிறது, உதாரணம்: இட்லர், முசோலினி அழிவு. அவர்களது சந்ததிகள் இன்று என்னவானார்கள்?

*  அதர்மம் 'ஒரு எப்போதும் இருக்கத் துடிக்கும் இருட்டு'. அதை நல்லவர்கள் தான் தர்ம-தீபம் கொண்டு தொடர்ந்து எரித்து விலக்க வேண்டியிருக்கிறது.

*   அன்னா ஹசரேவின் எளிமை, உண்மை, உள்ள உறுதி இவற்றைக்  கொண்ட எவரையும் இந்த உலகம் மனதார விரும்புகிறது. காந்திஜி எப்படி உலக மக்கள் மனதை வென்றார் என்பது இந்த எளிய காந்தியவாதியின் அணுகு முறையில் இருந்தே புரிகிறது.
(அன்னாவுக்கு என்னவொரு புன்னகை பூத்த முகம்? ஆனால், எவ்வளவு விடாப் பிடியான கொள்கை உறுதி...தெளிவான வேலைத் திட்டங்கள்...எதிரியின் யுத்த தந்திரங்களை முன்கூட்டியே அறிந்து முறியடிக்கும் சாதுர்யம்...முத்தான படை வீரர்கள். கேஜ்ரிவால், கிரண் பேடி, சாந்தி பூஷன் இவர்களை எல்லாம் என்ன பாராட்டினாலும் தகும்.)

*  இதில் ஊழல் விரும்புவோர்களின் இலட்சணங்களும் வெளிப்படையாகத் தெரிந்து போய் விட்டது. பல்வேறு போர்வைகளில் அவர்கள் வெளிவந்து அன்னா-குழுவினரை விமரிசனம் செய்து திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தனர்; தமது பிழைப்பு போய்விடுமே என்று. அவர்கள் தெருமுனை துவங்கி பாராளுமன்ற அமைச்சர் வரை பரவி இருந்ததைப் பார்க்க முடிந்தது.
(அது போன்ற ஜந்துக்களை நான் Twitter-இல் நசுக்கி நாறடித்தது தனிக் கதை)

* அன்னா குழுவினரை எதிர்த்தவர்கள் நான்கு ரகம்:
   
 1. குறுக்கு வழியில் உயர்ந்தவர்கள்/ உயரக் காத்திருப்பவர்கள்.
     இதில் பச்சைப் பாமரன் முதல் அமைச்சர்கள் வரை அடக்கம்.
    
 2.  பொறாமை கொண்டவர்கள் / புகழாசைப் பிடித்தவர்கள். 
(ஆம்! அன்னா குறுகிய காலத்திலேயே அடைந்த புகழை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சுப்பிரமணிய சாமி போன்றவர்களின் எழுத்து செயல் அதைப் பிரதி பலித்தது.)

3. ற்பெருமை கொண்டவர்கள்: அதாவது தாம் அதிகம் படித்த அதி மேதாவிகள், அரிய குலப் பெருமை, குடிப் பெருமை கொண்டவர்கள் என்றும் ஆனால் அன்னா ஒரு படிக்காத கிராம வாசி என்றும் முகம் சுளித்தவர்கள்.

4. பெருந்தன்மை இல்லாத 'சித்தாந்த சிறை-வாசிகள் :
இவர்களுக்கு ஒருவரின் நோக்கங்களை விட அவர் அணிந்திருக்கும் பிற அணிகலன்கள் முக்கியமானவை. உதாரணமாக அன்னா அணிந்திருக்கும் காந்தி குல்லாய்! அது போதாதா இவர்களை கொதிப்பேற்ற?
வீதியில் காயம்பட்டு துடிக்கும் தனது குழந்தைக்கு காந்தி குல்லாய் போட்ட ஒருவன் முதல் உதவி சிகிச்சை செய்தால் கூட இவர்கள் வேண்டாம் என்று கூட சொல்லிவிடுவார்கள். அத்தனை ஒரு சித்தாந்த சிறை வாசிகள்! 
இது போன்ற வித விதமான சித்தாந்த கூடாரங்களில் அறிஞர்கள் கூட அடைபட்டுக் கிடக்கின்றனர். ஆளாளுக்கு ஒரு வேலை செய்தால் இந்த மனித தோட்டத்தில் வித விதமான நறுமண மலர்கள் பூக்காதா? ஒரே ஒருவன் மட்டும்உழைத்து ஒரே ஒரு பூ மட்டும் பூத்தால் போதுமா?

அன்னா-குழுவினரை எதிர்க்க அவர்கள் பயன் படுத்திய சொத்தை ஆயுதங்கள் இதோ:

1. "Civil Society" என்பது பாராளுமன்றத்தை விட உயர்ந்தது அல்ல. பாராளு மன்றத்தை வெளியில் இருந்து யாரும் நிர்ப்பந்தம் செய்யவே கூடாது-நீதித் துறை உட்பட". 

எனது பதில்: * அப்படியானால் 150-க்கும் மேலான கிரிமினல் குற்றவாளிகளை உள்ளடக்கிய பாராளுமன்றத்தில் இருந்தவாறு உங்களை காப்பாற்றிக் கொள்ள நீங்களே போட்டுக் கொள்ளும் சட்டங்களை மக்கள் மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்? 
* வோட்டு போட்டு அனுப்பிய மக்களை விட பாராளுமன்றம் உயர்ந்ததா?
* civil society- என்பது எதிரி நாட்டின் ஒற்றர் படையா என்ன? அது இந்திய மக்களின் மன சாட்சியல்லவா? 

2. "Janlokpal" - சட்டத்தின் கீழ் பிரதமரை விசாரிக்கக் கூடாது. அவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர். அது இந்திய இறையாண்மையைக் கெடுத்துவிடும்".

என் பதில்: மடியில் கனம் இல்லாதவனுக்குப் பயம் எதற்கு? தானாக முன் வந்தல்லவா 'என்னை தாரளமாக சோதித்துக் கொள் ' என்று சொல்ல வேண்டும். பயப்படுபவர்கள் ஏதோ பெரிதாகவே தப்பு செய்திருக்க வேண்டும்.
திருட்டுப் போன ஒரு கிராமத்தில் காவலர்கள் வந்து சோதிக்கும் போது கிராம அதிகாரி மட்டும் தன் வீட்டை மட்டும் சோதனையிடுவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பது ஏனாம்? 
தவறு செய்யும் அரசனையே இங்கு தூக்கில் போடலாம் என்ற பயம் இருந்தால்தானே ஒரு நாடு உருப்படும்? 

எப்படியோ, ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் போன்றவற்றில் இலட்சம் கோடிகளில் செய்த ஊழல்கள் வெளிவந்த கோபத்தில் இந்திய மக்கள் இருக்கிறார்கள். உலக மக்களும் இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து காறிக் காறி உமிழ்கிறார்கள். சுவிஸ் வங்கிக் கணக்குகள் முழுதும் வெளி வரும் என்ற நம்பிக்கை எனக்கு துளிகூட கிடையாது. திருடர்களுக்காக கட்டப் பட்ட அமைப்புகளில் இருந்து திருடர்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் என்று நம்புவது அறிவீனம் ஆகும்!

ஏதோ சில கண்துடைப்பு பணிகள் இங்கும் அதுபோல் அங்கும் நடை பெறக் கூடும். ஆனால் என்னவொரு மகிழ்ச்சி என்றால், Janlokpal- என்ற அஸ்திரம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைவரையும் பயமுறுத்தும். அதனால் ஒரு 60-70% ஊழல்கள் நிச்சயம் குறையும். "மந்திரி ஒருத்தனே உள்ள போயிட்டான்-கொள்ளையடிச்ச சொத்தையும் புடிங்கிட்டாங்க" என்று பாமரன் ஒருவன் பேசும் வரை ஊழல்கள் குதித்து விளையாடும்தானே?

3. "தை விட வேறு எத்தனையோ முக்கிய வேலைகள் நாட்டில் இருக்க அன்னாவுக்கு வேறு வேலைகள் இல்லையா?" என்று சிலர் கேட்கின்றனர்: 

என் பதில்: வேறு வேலைகளை நீதான் கவனியேன்!
எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறதா என்ன? வெறும் பேச்சு-எதிலும் குறை காண்பது என்பது தவிர இந்த Critics-கள் செய்து கிழித்தது தான் என்ன? கட்டிய வீட்டை குறை சொல்லும் நாடோடிகளின் கதைதானே இவர்கள் கதை? 
இருந்த இடத்தை விட்டு அசையாமல் 'உருவாக்கியதை' குறை கூறுவது தானே  இவர்கள் வேலை? இவர்கள் வாழ்வு முழுவதும் ஒரு சின்ன Constructive- ஆன காரியத்தையும் செய்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்! 

மேலும், ஒரு வீட்டில் கொசுவை ஒழிப்பது மட்டும்தான் ஒரே வேலை என்று எவரும் இங்கு அழுகுணி வாதம் செய்யவே இல்லை. அன்னா கொசுக்களை ஒழிக்க 'முயற்சிக்கிறார்' (கவனியுங்கள்: முயற்சிக்கிறார்!). நீங்கள் மூட்டைப் பூச்சிகளையோ ஈககளையோ ஒழிக்க முன்வருவதை யார் தடுத்தார்கள்?
ஒருவர் வீட்டுக்கு வெள்ளையடியுங்கள், இன்னொருவர் சுகாதாரம் பேணுங்கள், எலி ஒழிக்க திட்டமிடுங்கள், வீட்டில் நாட்டில் உங்களால் முடிந்த ஆயிரம் நல்ல காரியங்கள் செய்து நல்ல பேர் எடுங்களேன்! யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே!
முயற்சியுங்கள்-கையை காலை ஆட்டி ஏதாவது செய்யுங்கள்!
ஆனால், தான் எதுவும் செய்யாமல் யாரோ முன்வந்து பாரம் சுமந்து செய்கிற செயலைக் குறை சொல்லும் அற்பத் தனத்தை என்னென்பது?

எப்படியானாலும், உலகம் தோன்றிய காலம் தொட்டு இது போன்ற தடைகளைத் தாண்டித்தான் மனித சமூகத்தின் நாகரிகம் வளர்ந்து வந்துள்ளது. இருட்டை விலக்க அவ்வப்போது ஒரு பெரும் விடிவெள்ளி அல்லது ஒரு கைவிளக்கு தோன்ற வேண்டி இருக்கிறது. அந்த வகையில் அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும் அன்னா-குழுவினரை என்ன பாராட்டினாலும் அது மிகவும் குறைவே ஆகும்!

அர்பணிப்பு மிக்க அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர், அனைத்து ஆதரவாளர்கள், தியாக உள்ளம் கொண்ட இந்திய இளைஞர்கள்-இளைஞிகள் அனைவரையும் இந்தச் சமயத்தில் நான் வாழ்த்துகிறேன்-வணங்குகிறேன்!

தர்மமே என்றும் வெல்லும்!

-யோஜென் பால்கி
yozenbalki                                                                       Anna Hazare...on ending his 12 days fast.
                                                                             28th Aug 2011 at about 10 am.

1 comment:

  1. This is an excellent post pa.. covering all angles of the Anna Hazare's Hunger strike and the Jan Lok pal.. Liked it very much...

    ReplyDelete

You can give here your comments: