Left or Right Gain or Pain |
நம் மனித மனம் விசித்திரமானது!
எந்த ஒரு செயலிலும் லாப நஷ்ட கணக்கு பார்க்கும் இயல்புடையது!
அதிலும் "அதிகம் படித்த மேதாவி மனம்" எப்போதும் ஒரு தராசு தட்டுடன் (Weighing scale) அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டே கிடக்கிறது!!
பிச்சை இடுவதால் என்ன லாபம்?
இன்னாருக்கு உதவுவதால் என்ன லாபம்?
இந்த வழியை தேர்ந்து எடுப்பதால் என்ன லாபம்?
இன்னாரை மணம் புரிவதால் என்ன லாபம்?
இந்த நேரத்தில் துவங்குவதால் என்ன லாபம்
என்றெல்லாம் 'என்ன-லாபம்-என்ன-நஷ்டம்' என்னும் கணக்கு
பார்த்து பார்த்து அங்கலாய்க்கிறது அறிவாளி மனம்!!
உண்மையில் அப்படி, ஒரு செயலினால் ஒருவனுக்கோ அல்லது பிறருக்கோ நஷ்டமே இல்லாத இலாபம்தான் உண்டா என்று இங்கு ஆராய்வோமா? அதாவது எல்லோருக்குமே லாபம் தரக்கூடிய ஒரு செயல் இந்த உலகில் உளதா என்று நாம் பார்ப்போமா? அதாவது இழப்பே இல்லாத ஈட்டமும் உண்டோ?
1 . மாட்டுவண்டிப் பயணத்தை விட ஆகாய விமான பயணம் நேர-லாபம் உடையது. நெடுந்தூர மாட்டு வண்டி பயணம் உடல் அயர்ச்சி தரும். எல்லாம் சரி! ஆகாய விமானப் பயணம், கரணம் தப்பினால் மரணம். உயிர்-நஷ்டம்!
3 . புத்தரும், இயேசுவும் ஆற்றிய பெரும்பணி மனித குலத்துக்கு லாபம்; அதிலிருந்து பிரிந்த பிரிவுகளால் சச்சரவும் உட்பகையும் அதனால் பெரும் போர்களும் மரணமும் மனித குலத்துக்கு நஷ்டம்!
4 . பொதுவுடைமை சித்தாந்தங்கள் உள்ள நாடுகளில் மக்களுக்கு அரசாங்கத்தால் பலவகையிலும் லாபம்! ஆனால், லாப வெறி இல்லாத முதலாளிகள் இல்லாதவிடத்தில் அங்கு தொழில்களும் வளர்ச்சியும் இல்லாததால், அது நஷ்டம்!
5 .ஒருவன் 'திரை கடலோடி திரவியம் தேடுவது' அவனது குடும்பத்தினருக்கு பொருள்-லாபம்! அங்கே பிரிந்து வாழ்வதால் ஏற்படும் துன்பங்களும், அவன் தன-குடும்பத்தோடு சேர்ந்து வாழாத காலமும் பெரும்-நஷ்டம்!
6 . கையளவு அணுவை பிளந்து கடலளவு சக்தி பெறுகின்ற 'அணு-உலைகள்' லாபம்! ஆனால், அதற்காகும் அதீத செலவுகளும், என்றும் அழியாமல் 'அபாய அணுக்கதிர் வீசும்' கழிவு எச்சங்களும் மனித குலத்துக்கு பெரும் நஷ்டம்!
இப்போது, கொஞ்சம் சின்ன சின்ன விஷயங்களுக்கு வருவோம்!
மருத்துவர் ஆவது மரியாதை தரும்; அது லாபம்! ஆனால், நோய்களோடு, நோயாளிகளோடு வாழ்க்கை நடத்தவேண்டும், நேரங்காலமின்றி பணியாற்றவேண்டும்; அது நஷ்டம்!
வழக்குரைஞர் ஆவது அதி-கம்பீரம், காசு பார்க்கலாம்; அது லாபம்! ஆனால், தெரிந்தோ தெரியாமலோ 50% குற்றவாளிகளுக்குத் துணை போகும் குற்ற உணர்ச்சி, மற்றும் அதனால் வெளியில் இருந்து வரும் கட்புலனாகாத அபாயங்கள்; அது நஷ்டம்!
பொறியாளர் ஆவது அறிவாளியாவது, பணம்-புகழ் தரும்; அது லாபம்! ஆனால், ஊர் ஊராகச் செல்லவேண்டும், அதிகப் பொருள்களோடு, மனிதர்களோடு, வரைபடங்களோடு மல்லுக்கு நிற்கவேண்டும்; அது நஷ்டம்!
8 . பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கை-சுகம், இயற்கை காட்சி, காற்று வரும், அது லாபம்!
ஆனால், ஒவ்வொரு முறையும் எழுந்திருக்கையில் பக்கத்தில் இருப்பவரை கெஞ்சவேண்டும், ஜன்னலோர மரக்கிளையில் கண்கள் படாமல் காக்கவேண்டும்; அது நஷ்டம்!
9 . குடிப்பழக்கத்தினால், ஒருவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் பொருள் நஷ்டம்-உயிர் நஷ்டம்! மது விற்பனையில் கிடைக்கும் வருமானத்தினால் அரசுக்கும் மக்களுக்கும் பெரும்-லாபம்!
10 . ஒருவன் ஆத்திகனாய் இருப்பதால் பண்டிகைகள், நெடும்பயணம் போவதில் அவனுக்குப் பொருள் நஷ்டம்! அதைச் சார்ந்து வாழும் பிற தொழிலாளர்கள், வணிகர்களுக்கு அவனால் பெரும்-லாபம்!
இன்னும் சொல்லிக் கொண்டே நான் போகலாம்! இத்துடன் நிறுத்தி உங்கள் அனுபவத்துக்கும் கற்பனைக்குமே விட்டு விடுகிறேன்! முடிவில் என்ன புரிகிறது? அந்தப் பொல்லாத இறைவன் (அல்லது நாத்திகப் பார்வையில் 'இயற்கை அன்னை') எவ்வளவு 'குசும்புக்' காரன் என்று புரிகிறதா?
புரிந்திருக்கும்! ஆம்! இந்த உலகில், நஷ்டமே இல்லாத ஒரு லாபம் இல்லை!
அல்லது, இப்படி வைத்துக் கொள்ளுங்களேன்!
எதற்கு நீங்கள் லாப-நஷ்டக் கணக்கு பார்த்து மண்டையை உடைத்துக் கொள்கிறீர்கள்...என்று இயற்கை நம்மை கேட்கிறது!
நான் எனது மாணவர்களிடம் அடிக்கடி சொல்வது இது:
' உருப்படாத ஓட்டை வண்டி' என்று பலரும் கருதிய ஒரு பேருந்து, தாமதமாய்ப் போனாலும் போக வேண்டிய ஊர் போய் சேர்ந்ததும் உண்டு.....
'அலங்காரத் தேர் மாதிரி' என்று பலரும் புகழ்ந்த மற்றொரு பேருந்து, விரைந்து புறப்பட்டு வளைவில் கவிழ்ந்ததும் உண்டு!
அதற்காக, யோசிக்கவே வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை!
யோசியுங்கள்! சீக்கிரம் முடிவெடுங்கள்...உங்கள் "கடைசி பேருந்து" புறப்படுவதற்குள்!!
( எதையும் தவறாகவே புரிந்து கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால் நான் ஒன்றும்
சொல்வதற்கில்லை! )
-யோஜென் பால்கி
yozenbalki
( எதையும் தவறாகவே புரிந்து கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால் நான் ஒன்றும்
சொல்வதற்கில்லை! )
yozenbalki
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: