ஒரு நீரோட்டம் எப்படி செல்கிறதோ அப்படியே வழி விட்டால்தான் எந்த ஒரு போக்குவரத்தும் தடையின்றி செல்ல இயலும்! சென்னையில் பெரும்பாலான இடங்களில் வாகன நெரிசலுக்குக் காரணம் வழி நெடுக காணப் படும் தடைகள்தாம்!
A Wrong Road without Splay
A rightly 'splayed' Road
நீரோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! அது எப்போதுமே செங்குத்தான திசையில் திரும்புவதில்லை. சற்று வளைந்து, வளைகிற இடத்தில் கொஞ்சம் விசாலமான இடத்தை எடுத்துக் கொண்டே அது திரும்பி பயணம் செய்கிறது!
ஒரு தண்ணீருக்கு இருக்கிற அறிவு நமது சாலை உருவாக்க பொறியாளர்களுக்கு (Road Construction Engineers) இருப்பதில்லை போலும்!!
இங்கு, நமது தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களை நான் சொல்லவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை காணும்போது, நானும் ஒரு பொறியாளர் என்னும் வகையில் சொல்வதானால், குறைந்தது 80-90% தர நிர்ணயம் அங்கு நிச்சயம் காணப் படுகிறது!
ஆனால், சுதந்திரம் பெற்று சுமார் 65 வருடங்கள் ஆகும் நிலையிலும், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிட்டதட்ட "L" வடிவத்தில் திரும்பும் தெருக்களை சாலைகளை நாம் இன்றும் பார்க்கலாம்! இதனால், எவ்வளவு மோசமான நெரிசல், வேகத்தடை, எரிபொருள் விரயம் ஏற்படுகிறது என்று எவரும் உணர்வதில்லை! சில நேரங்களில் காரணம் புரியாமல் மணிக்கணக்கில் சென்னையில் வாகனங்கள் நகரும். ஏதோ விபத்து போலும் என்று நாம் எல்லோரும் நினைப்பதுண்டு. ஆனால், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது தான்...(Contd,,)
நமக்குத் தெரியவரும்-அது வேறு ஒரு புண்ணாக்கும் இல்லை, குறுகிய ஒரு சாலை சந்திப்பில் ஓரம்கட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் ஒரு சிறு வாகனத் தடை, அல்லது ஒரு சிறு பள்ளம், அல்லது ஒரு சின்ன இடப் பற்றாக்குறையின் விளைவு என்று!!
இதையெல்லாம் கவனித்து அது போன்ற தடைகளை போக்க முதலில் 'நீரோட்ட- ஞானம்' அவசியம்! அல்லது ஒரு 'ஹெலி-காப்டரை' வைத்துக் கொண்டு ஒரு நல்லவனைப் போட்டு வான்வழி இருந்து, காலை மாலையில் போக்குவரத்து தடைகள் எங்கு ஏன் ஏற்படுகிறது என்று கவனித்து அதைக் களைய முயற்சி செய்ய வேண்டும்! குறைந்தது, லாரி, பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் பாதைகளையாவது சரி செய்வது தமிழக வளர்ச்சிக்கு நல்லது! வெறுமனே 'சிங்கப்பூர்' ஆக்கப் போகிறோம் என்று வாயால் சொல்லிக் கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது சார்!
ஆங்கிலத்தில் 'splay' என்று சொல்வார்கள். இத்தனை அடி சாலைக்கு இத்தனை அடி 'splay' வளைவு இருக்கவேண்டும் என்று உலக தர-நிர்ணயம் உண்டு-அதைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்! அது போன்ற 'வளை' நிலங்களை உடனடியாக தமிழக அரசு, சம்பந்தப் பட்ட தனியாரிடம் இருந்து நியாயமான சந்தை விலைக்கு வாங்கிக் கொண்டால் கூட அது நல்லதுதான்! ஒரு 20'-00"x 20'-00" பரப்புள்ள நிலத்தை 'ஸ்ப்ளே' செய்யும் போது சுமார் 250 சதுரஅடி வரும் - சாலையின் இருபுறம் சேர்த்தால் சுமார் 500 சதுர அடிதான் ஆகிறது!
இதே பத்துக்கு பத்தடி 'ஸ்ப்ளே' என்றால் மொத்தமே வெறும் 250 சதுர அடிதான் வரும்! விலை என்னவோ, அண்ணா சாலை, அடையார், அண்ணாநகர் போன்ற மதிப்பு மிக்க இடங்களிலேயே சில இலட்சங்களுக்கு மேல் போகாது! (வெகுஜன மக்களுக்கு நன்மை தரும் ஒரு நிலத்தை அரசு, இலவசமாகவே கையகப் படுத்த உரிமையும் உண்டு!)
'சந்திர பாபு நாயுடு' அந்த விஷயத்தில் பெரிய ஜீனியஸ்! அவர் காலத்தில் (Hyderabad) அய்தராபாத் நகரம் எந்த அளவுக்கு சாலை-வளர்ச்சி அடைந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்! அவரது ஆட்சியில் நிறைய சாலைகள் உடனுக்குடன் விசாலப் படுத்தப்பட்டு சீர்திருத்தம் செய்யப் பட்டன! சீர்திருத்தம் பெற்ற அது போன்ற சாலைகள் வழியாய் தடையின்றி செல்லும் வாகனங்களால் மறைமுகமாக மக்களுக்கு எவ்வளவு எரிபொருள் சிக்கனம், ஒலி மாசு கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால், இந்த செலவெல்லாம் நல்லதோர் அரசுக்கு ஒரு செலவே அல்லவே!
முக்கிய சாலைகளுக்காவது இது போன்ற கையகப்படுத்தல்கள் மிக்க அவசியம்! நாம் வாழ்கிற காலத்திலேயே நாம் அனைவரும் சேர்ந்து சென்னையை சீர்திருத்தம் செய்ய நாம் முடிவெடுக்க வேண்டும்! அதற்கு இன்னும் நூறு வருடங்கள் தேவையா என்ன? இல்லாவிட்டால் நமது சந்ததிகள் இன்னும் சில வருடங்களில் இன்னும் மோசமாகக் கஷ்டப் படப் போவது நிச்சயம்!
இதை கவனித்து சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாக களம் இறங்க வேண்டும்!
நடக்கும்! நான் நம்புகிறேன்-இதுவே தக்க சமயம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: