Saturday, May 5, 2012

"I am-the God" Vulgarians!! தன்னையே கடவுளாக வரித்துக் கொள்ளும் 'ஈனப் பிறவிகளுக்கு 'ஒரு கேள்வி?


இன்று மாலை காலாற நடந்து செல்கையில் "பெரம்பூர் அன்ன தான சமாஜம்" அருகில் ஒரு மமதை மிக்க உபன்யாசக் குரல் கேட்டுக் கொண்டு இருந்தது! போகிற வழியில் ஒரு பார்வையில் மக்கள் சில நூறு பேர் அங்கு அமர்ந்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

அந்த உபன்யாசக் குரலில் ஒருவித எல்லாம் தெரிந்த பாவம், வாழ்க்கையைக் கரைத்துக் குடித்த அஹங்காரம், இளக்காரமான தொனியை உணர்ந்தேன். 

எனக்கு கருத்துக்களை விட கருத்தறிவிக்கும் கருவிகளே முக்கியமாகப் படும்! ஏனெனில், கருத்துக்கள் எப்போதுமே உலகில் இங்கு புதியனவல்ல; அது பலராலும் பல காலத்திலும் சொல்லப் பட்டுவந்தவைதான்

சுரேஷ் என்பவர் சொன்ன ஒரு கருத்தை ரமேஷ் என்பவர் கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் சொன்னால் அது ஒரு புத்தம் புதிய கருத்தாகிவிடுமா? ஆறுமுகம் இன்று நெய்த புடவை தான் உலகில் புத்தம் புதிதானதா? அல்லது அதில் தொங்க விடப் பட்ட குஞ்சலங்கள்தான் புதிய படைப்பா? அப்படி இருக்க, இந்த உபன்யாசிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், சாமியார்களும் தம்மை புத்தம் புது கருத்தாளர்களாக மமதையோடு கருதிக் கொள்வதும், கர்வத்தோடு பேசுவதும் அதற்கொப்ப நமது அப்பாவி மக்களும் குற்ற உணர்வோடும் பய பக்தியோடும், மெய் ஒடுங்கி அமர்ந்து கிடப்பதைப் பார்க்கும் போது எனக்கு பெருஞ் சிரிப்பு தான் வருகிறது! 

பத்து புத்தகங்களை படித்த ஒருவன் பதினோராவது புத்தகம் எழுதுவது போல, இந்த 'ஞான-வேஷம்' போடுபவர்கள் நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு அப்படியே வாந்தி எடுப்பதை ....(Contd..)

பெரும்பாலும் யாரும் உணர்வதில்லை! உழைப்பவனுக்கு கிடைக்காத நேரம் பண்டித சிரோன்மணிகளுக்கு அதிகம் கிடைக்கிறது. அதனால், நூறு வகை - ஆயிரம் வகை புத்தகங்கள் படித்து அதில் உள்ள விஷயங்களை தாமே கண்டு பிடித்தது போல இவர்கள் மமதையோடு பேசுகிறார்கள்! பேச்சு வழியாகத்தான் அவர்கள் வயிறுக்கு செரிமானமே நடக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்யப் பட்டுப் போவீர்கள்!! வித விதமான வார்த்தைகளை கோர்த்து கோர்த்து, நெட்டுருப் போட்டு மனப்பாடம் செய்த வரிகளை - யாரோ எழுதிய கவிதைகளை சேர்த்துச் சேர்த்து பேசி, தங்கள் 'தன்முனைப்புக்கு' தீனி போட்ட மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் அவர்கள் தூங்கச் செல்கிறார்கள்! 

எனது கேள்வி இதுதான்:

வளந்த நாடுகளில் "Self-Development" பற்றி பேசும் கோட்டு-சூட்டு போட்ட பேச்சாளர்களுக்கும் இந்த ஆன்மிக சொற்பொழிவாளர்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? (அவர்கள் படிக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையே இவர்களும் படிக்கிறார்கள். அதோடு கொஞ்சம், இங்கொன்றும் அங்கொன்றுமாக நம்ம ஊரு இதிகாச-இலக்கியங்களை மனப்பாடம் செய்து கிளிப்பேச்சு பேசி மக்களை அசத்தியதாக நினைத்துக் கொள்ளுகிறார்கள்!)

உயிர்களிடத்து அன்பும், பரிவும் 'கற்றது கை மண்ணளவு-கல்லாதது உலகளவு', என்ற அடக்கமும் அற்ற இவர்களை மக்கள் எப்படி நம்புகிறார்கள் என்பது தெரியவில்லை! மகா பிறவி மேதைகளான ஒரு ராமகிருஷ்ண பரம ஹம்சர், திருமுருக கிருபானந்த வாரியார், தந்தை பெரியார் போன்றோரின் ஆன்ம பலத்தை, அன்பை, அடக்கத்தை கண்ணியமான பேச்சை நீங்கள் சற்று எண்ணிப் பாருங்கள்! இப்போதுள்ள குறை மதியாளர்களின் நடத்தை மற்றும் பேசும் "த்வனி" எப்படி உள்ளது என்றும் நிதானமாக கவனித்துப் பாருங்கள்! உளவியல் தெரிந்தால், ஏதோ வானத்தை வில்லாய் வளைத்தவன் கூட பேசத் துணியாத அகந்தையுடன் அவர்கள் பேசுவது வெள்ளிடை மலையாய் தெரியும்.

எனக்குத் தெரிந்து, ஒவ்வொரு செங்கல்லாய் அடுக்கி கட்டிடம் கட்டும் கொத்தனாரை விட இந்த 'சொல்லடுக்கும்' வீரர்கள் மனித குலத்துக்குச் செய்யும் மகத்தான பணி தான் என்னவோ? அல்லது, வயற்காட்டில் கதிரடிக்கும் எம்குலப் பெண்களின் உடலுழைப்பை விட 
இவர்களின் 'வாய்க் கொழுப்பு' அதிகம் மதிப்பு மிக்கதா என்ன ? வெற்று ஆன்மிகம் பேசும் இவர்கள், இறந்தவர்களை எழுப்புகிறார்களா, சுனாமியைத் தடுக்கிறார்களா, விலை வாசியைக் கட்டுக்குள் வைக்கிறார்களா?
அட! தனக்கு வரும்  நோயை நிறுத்தி நூறு வருடங்களாவது நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு இன்றி வாழ்ந்து காட்டுகிறார்களா? அட! இவர்கள் பிறக்காமல் போய்விட்டால் இந்த உலகத்துக்கு என்னதான் கேடு வந்து விடுமாம்? 

சிலர் முணு முணுப்பது என் காதில் விழுகிறது. "எங்களுக்கு நேரம் போக்க ஒரு நியாயமான இடம் வேண்டும்! 'தண்ணி' அடித்து பொழுது போக்கும் வேறு வகை மக்களுக்கு நடுவில் எங்களைப் போன்ற ஆட்களுக்கு ஒரு மாலை நேர பொழுது போக்கு கூட்டம் அவசியம். அங்கு சொல்லும் சில நல்ல கருத்துக்களை நாங்கள் கேட்டால் உங்களுக்கு என்ன வந்தது', என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது! நான் அதைத் தடுக்கவில்லை; அதில் எந்தக் குறையும் சொல்லவில்லை. 

இங்கே எனக்கு இரண்டு விதக் கேள்விகள் மட்டுமே எழுகின்றன:

ஒன்று: 

பக்த சிரோன்மணிகளுக்கு ஒரு கேள்வி?

அதெப்படி உங்களின் 'ஞான சூரிய-மேதைகள்" மற்ற சராசரி உழைக்கும் மக்களை விட மேன்மையானவர்கள்? இவர்கள், செத்தவனை உயிர்ப்பிக்கும் உபாயம் அறிந்த ஞானிகளா-செயல் வீரர்களா? வெறும் கிளிப் பேச்சு மட்டுமே ஒரு மேதமைத் தன்மையைக் காட்டுமா? 

ஒரு நடிகர், பாடகர், சதாவதானி இவர்களை விட மேற்படி 'ஆன்மிக வாதிகள்' எங்கனம் உயர்ந்த பிறவிகள் ஆகி விடுகிறார்களாம்? கொஞ்சம் எனக்கு புரியும்படிதான் சொல்லுங்களேன் ! 

உங்கள் குல தெய்வங்களை விட மும்மூர்த்திகளை விட இவர்கள் சக்தி வாய்ந்தவர்களைப்  போல நீங்களே ஏன் பிரசாரம் செய்து தொலைக்கிறீர்கள்? அதன் விளைவு எங்கு ஆரம்பித்து எந்த இடத்தில் முடிகிறது என்று உங்களில் எவருக்காவது தெரியுமா? கூட்டம் கூடுவது மட்டுமே ஒருவரின் ஞானத்தை அளக்கும் அளவு கோலாகக் கொண்டு விடலாமா? சர்கஸ் காரனின் சாகசங்களுக்குக் கூட உலகில் கூட்டம் கூடுகிறதே!

இரண்டு: 

தன்னையே கடவுளைப் போல அல்லது கடவுளாகவே வரித்துக் கொள்ளும் 'ஈனப் பிறவிகளுக்கு 'ஒரு கேள்வி? 

நீங்கள், எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டே உங்களுக்கு மட்டும், காலுக்கு பாத-பூஜை, கழுத்துக்கு நவமணிகள், தலைக்கு தங்கக் கிரீடம் வைக்கச் சொல்லி 'அல்ப-சந்தோஷம்' அடைகிறீர்கள்! (ஆனால், உங்கள் பக்தர்களின் உள்ளே உறையும் உண்மைக் கடவுளுக்கு நீங்கள் என்றுமே 'பாத பூஜை' மற்றும் பணிவிடைகள் செய்வதில்லையே?) இங்கே சிதிலம் அடைந்துவரும் ஆயிரக்கணக்கான ஹிந்துக் கோவில்களை அங்கு வாழும் தெய்வங்களைப் புறம் தள்ளி உங்களை மட்டுமே உயர்த்திக் கொள்ளத் துடிக்கும் உங்களின் அல்ப-புத்தியால் இன்று ஹிந்து மதம் அழிந்து வருவதை என்றைக்கு உணரப் போகிறீர்கள்? நீங்கள் உங்கள் மதத்துக்கு நாத்திகர்களை விட அதிகம் கேடு செய்கிறீர்களே! 

அது போகட்டும் நீங்கள்  ஒரு வார்த்தை இப்படி சொல்ல முடியுமா?
 "மேற்படி நீங்கள் சொன்ன  நடிகர், பாடகர், சதாவதானி இவர்கள் எல்லோரையும் விட, இன்ன இடத்தில் நான் இந்த வகையில், ஒரு பெரிய மகான்! உலகத்துக்கு நான் இன்ன வகையில்  உபயோகமாய் இருக்கிறேன்! அதனால் தான் மக்கள் என் காலில் விழுந்து அடிமையாய்க் கிடக்கிறார்கள்", என்று எனக்கு சொல்லி அதை நிரூபித்து விடுங்கள், நான் உங்களை எதுவும் சொல்லாமல் விட்டு விடுகிறேன்! 

( என்ன சொன்னாலும் இந்த இரண்டு பேரும் திருந்தப் போவதில்லை, அது நிச்சயம்!
என் போன்றவர்களாலும் இது போன்ற சமயங்களில் எதுவும் சொல்லாமல் வாய் மூடி மவுனியாய் இருக்கவும் முடியாது! உலகம் அப்படியே பல்லாயிரம் வருடங்களாக இங்கே இருந்து வந்துள்ளது!)


No comments:

Post a Comment

You can give here your comments: