Saturday, August 11, 2012

Law & Dharma ? சட்டமும் தர்மமும்:

              
ஒரு நாட்டை நிர்வகிக்க பற்பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சட்டங்கள் உண்டு. ஒரு நாட்டுக்குப் பொருந்தும் சட்டங்கள் இன்னொரு நாட்டுக்குப் பொருந்தாது. நாடுகளுக்கு உள்ளேயே கூட ஒரு சமயத்தை பின்பற்றும் ஒருவனுக்குப் பொருந்தும் சட்டம் இன்னொரு சமயனுக்குப் பொருந்துவதில்லை. ஆணே உயர்ந்தவன் என்னும் ஆதிக்க நாடுகளில்/ஆணாதிக்கக் காலங்களில், பெண்ணுக்குப் பொருந்திய சட்டங்கள் ஆணுக்குப் பொருந்தியதில்லை. உழைக்கும் வர்க்கங்களுக்கு ஒரு சட்டமும், பெருமுதலாளிகளுக்கு என்று ஒரு சட்டமும், உலகெங்கும் எல்லாக் காலங்களிலும் உண்டுதான். 

ஆக, சட்டத்தின் சாரம்சம் இதுதான்: ஆளும் வர்க்கம், பெருமுதலாளிகள், சமயத் தரகர்கள் ( இங்கு ஆ,பெ, ச என்று நாம் குறிப்பிடுவோம்), இம்மூவரையும் காப்பாற்றும்படிதான் உலகில் எக்காலங்களிலும் சட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன-இருக்கும்! அப்படிப் பட்ட மறைமுக சட்ட முறைமையை உடையாமல் பராமரிக்கும் பணியை பூடகமாய் செய்ய, தெரிந்தும் தெரியாமலும் நிர்ப்பந்திக்கப் படுபவர்கள்தான் இராணுவம், நீதித்துறை மற்றும் காவல் துறையினர் ஆவர். ஏன் எனில், இந்த மூன்று துறையினருக்கும் சம்பளம், பதவி உயர்வு, சலுகைகள், ஒய்வு ஊதியம், பணிக்குப் பின் பாதுகாப்பு  இன்னபிற நன்மைகளை மேற்படி ஆ,பெ, ச எனும் மூவரே  செய்து தரவேண்டிய கையறு நிலை உலகில் உள்ளது. இந்த நடைமுறை எந்தக் காலத்திலும் எந்தவொரு நாட்டிலும் மாறியது கிடையாது-மாற வழியும் இல்லை. மேற்படி மூவருக்கு-மேற்படி மூவர் ஒத்தாசையாகவும் உறுதுணையாகவும் இருக்கும் காட்சிகளை நாம் நுட்பமாய்ப் பார்த்தால் நன்கு உணர முடியும்! 

சுருக்கமாய் சொன்னால், சட்டம் என்பது, ஒரு நாட்டில் உள்ள ஒரு கிராமத்தின் அடித்தட்டு சாமான்ய மனிதன் ஒருவனுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு சாமான்ய மனிதனுக்கும்  ஏதோ ஒரு சண்டை வந்து, காவல் நிலையம் செல்லும் போது, சட்டம் அங்கே தன் கடமையை சரிவர செய்யும். நீதிமன்றமும் தன் கடமையை சரிவர செய்து அங்கு பாரபட்சமின்றி நீதியை நிலை நாட்டும் என்று நாம் நம்பலாம் ! ஆனால், அதுவே அந்த கிராமத்தின் ஓர் சாமானியனுக்கும் மேற்படி ஏதோ ஒரு ஆ,பெ, ச வுக்கும் சச்சரவு வந்து காவல் மற்றும் நீதித் துறையை அணுகும் போது, நிலைமை எவ்வாறு இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்! 

அந்த சாமான்யனின் பக்கம் 100% நியாயம் இருந்தாலும், ஒரு காவல் துறை உயர்அதிகாரி மற்றும், நீதிஅரசர் ஒருவர், மேற்படி வானளாவிய அதிகாரம் கொண்ட ஆ,பெ, ச க்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி சட்டத்தை நிலை நிறுத்துவார் என்று நாம் சிறுபிள்ளைத்தனமாக நம்ப இயலுமா? உலகில் அது போல எங்காவது நடந்துள்ளதா? அட! எப்போதாவது நூறு முறைக்கு ஒரு முறை, அவ்வாறு விதிவிலக்காக சில நிகழ்வுகள் நடந்து இருக்கலாம்-ஆனால், விதிவிலக்குகள் என்றுமே விதிகள் ஆகாவே!

உங்களில் ஒருவர் இங்கு, ஆ,பெ, ச க்களுக்கு இடையில் சச்சரவு வந்தால் நிலைமை எப்படி போகும் என்று கேட்பது எனக்குக் கேட்கிறது. சமயத் தரகர்களுக்கு சிற்சில நாடுகளில் செல்வாக்கு இருந்தாலும், பொதுவாகவே முடிவில் ஆளும் அரசியல் வர்க்கங்களே, காவல்துறை மற்றும் இராணுவ பலத்தைப் பிரயோகம் செய்து தம்வெற்றியைத் தற்காலிகமாகத் தக்கவைத்துக் கொள்வர். அடுத்தவன் ஒருவன் வந்து அந்தத் தலைமையையும் அழித்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதிகார சுகம் தேடுவான்-அவனும் மறைவான், இது என்றும் தொடர்கதை! 

அது ஒரு புறம் கிடக்க, உள்நாட்டுச் சட்டங்கள் என்றுதான்  இல்லை, பன்னாட்டுச் சட்டங்கள் என்று வரும்போதும், அமெரிக்கா செய்கிற அதே 'சட்டாம்பிள்ளைத் தனமான' காரியத்தை உலகில் வேறு எந்த நாடுகளும் இன்னொரு நாட்டின் மீது செய்ய இயலுமா? சொத்தைக் காரணங்கள் சொல்லி ஒருவனைத் தூக்கில் போடுவது, இன்னொருவன் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போல, இன்னொருவன் நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து கொள்வது, வேவு பார்ப்பது, கைது செய்வது, கொலை செய்வது இன்ன பிற காரியங்கள்??

"தடி எடுத்தவன் தண்டல் காரன்", "பேட்டை-ரவுடி", "பசை-உள்ளவன்", "ஏழை சொல் அம்பலம் ஏறாது", "செல்வாக்கு-உள்ளவன்", இது போன்ற சொற்றொடர்கள் நமக்குப் போதிப்பவை என்ன?
"சட்டம்" என்பது, வலுத்தவன் கையில் கிடைத்த ஒரு நுட்பமான 'அறிவாயுதம்' என்பதே! அறிவு என்பதோ, எப்போதுமே தன்னை பிறரிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சட்டம் (வழி) ஒன்றை வகுத்து வைத்துவிட்டு,  அந்தத் தவறை தான் செய்யும்போது தப்பித்துக் கொள்ள அங்கு ஒரு ஓட்டையையும் முன்கூட்டியே போட்டு, மறைத்து வைக்கும் இயல்புடையது. 

அதனால்தான், பெருமன்னர்களும், பெரும் பணக்காரர்களும், அறிவாளிகளும் சட்டத்தின் சந்து பொந்துகளில் இருந்து மிக எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள். மிஞ்சி மிஞ்சி, இந்த உலகில் பார்த்தால், சிறையில்/தண்டனையில் மாட்டிக் கொண்ட வெகு சிலரும், பெரிய நாட்டை பகைத்துக் கொண்ட சிறிய நாட்டினர், பெரிய கட்சியைப் பகைத்துக் கொண்ட சிறிய கட்சியினர், பின்புலம் அற்ற சின்னஞ்சிறு பணக்காரர்கள், சிறிய கூட்டத்தை வைத்திருக்கும் சமயவாதிகள் இப்படித்தான் இருப்பர்!

எனவே, சட்டத்தின் வீச்சம், பயன்பாடு  இதுதான்.


ஆனால், "தருமம்" என்பது வேறு ஆகும்! 

தர்மம் என்பது நம்மிரு கண்கள் என்று நாம் கொண்டால், அதன் மீது நம் விருப்பப்படி அணியும், வண்ணவண்ணக்  'கண்ணாடி'க்கு பெயர்தான் சட்டம் ஆகும்! சட்டங்கள் காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு மாறும். ஆனால், தருமம் என்பது (அறன் என்பர்), மூவுலகங்களுக்கும், மூன்று காலங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் பொருந்துவதாகும்!

உதாரணமாக, சாலையில் அடிபட்டு உயிர் துடித்துக் கொண்டு இருக்கும், ஒரு மனிதனை/ ஒரு விலங்கை நீங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று எந்தவொரு சட்டமும் இல்லை. அதனால்,  நீங்கள் சட்டத்தின் "மூக்குக் கண்ணாடி" வழியாகப் பார்த்தால் அங்கு குற்றவாளி இல்லை. ஆனால், தர்மத்தின் "கண்கள்" வழியாக  நீங்கள் அங்கு ஒரு குற்றவாளி ஆவீர்கள்!

இன்னொரு உதாரணம், நீங்கள் உங்கள் மனைவி, ஒரு குழந்தை கொண்ட மூன்று பேர் குடும்பத்துக்கு மூன்று கிரவுண்டு நிலம் வாங்குகிறீர்கள், அங்குள்ள முப்பது மரங்கள், முன்னூறு செடிகொடிகள், அவற்றை சார்ந்து வாழும் லட்சக்கணக்கான உயிர்களை அழித்து, மூன்று மாடியில் ஒரு மாளிகை கட்டுகிறீர்கள். இதில் சட்டப்படி எதுவும் தவறில்லை. ஆனால், தர்மத்தின் படி நீங்கள் ஒரு பெரும் பாவி! தேவையை மீறாமல், இயற்கையை நீங்கள் மரியாதை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே 'ஹிந்து-தர்மமாகும்"

இதனையே நமது ஹிந்து-மதம் மென்மையாய் சுட்டிக் காட்டுகிறது! வாழும் வழி முறைகளை அது நமக்கு இதமாய் போதிக்கிறது! ஹிந்து-மதம் வெறும் சட்டங்களை வாய் கிழியப் பேசுவதில்லை. உயிர்களை நேசிக்கவும், பூஜிக்கவும் அது நமக்குச் சொல்லி தருகிறது! இங்குள்ள மண், மரம், செடி-கொடிகள், விலங்குகள், பறவைகள், நதிகள், கடல், காற்று என்று இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும், உயிரற்றவற்றையும்  வணங்கச் சொல்லி, மதிப்பு தரச் சொல்லி கற்றுத் தருவதும் அதனால்தான். 

அப்படிப்பட்ட "தர்மம்" பற்றி வேறொரு சமயத்தில் நான் விரிவாய் எழுதுவேன்! 

"அன்பும் அறனும் (தர்மமும்) உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!  -குறள்

No comments:

Post a Comment

You can give here your comments: