Translate this blog to any language

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

The child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்!!



மலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்! அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். 

இவன் மட்டும் வழிமாறி எப்படியோ கல்லுடைக்கும் பணிக்கு வந்து சேர்ந்து விட்டான். கல்லுடைக்கும் பகல் நேரம் போக அவன், மலைகாடுகளில் இரவெல்லாம் அலைந்து திரிந்து அரியவகை மூலிகைகள், உலோக தாதுக்களை கொணர்ந்து வித விதமான நுட்பக் கருவிகள் செய்து வைத்துக் கொள்வான். அதைக் கொண்டு நினைத்த வண்ணம் அதிசயம் செய்வான். அதாவது கற்களைக் கவிதை பாடச் செய்யும் கலை! எந்த மலையானாலும் ஒரு சிறு குத்துக் கோட்டில் இரு கூறுகளாக்குவது, பல கூறானவற்றை மீண்டும் வடுக்களின்றி சேர்ப்பது, கிடைத்த கற்களில் உயிரோட்டமான அழகிய தெய்வச்சிலைகளை மிகசொற்ப நேரத்தில் உருவாக்குவது இன்ன பிற சாகசங்கள். இப்படியாக பல்லாயிரம் அழகிய உயிர்ச் சிலைகள் வடித்தவன் அவன்!

அதனால், அவனைத் தேடி வரும் எவரும் வெறும் கல்லுடைக்கும் வேலை போக, அவர்களுக்கு ஆதாயமான சிற்பங்களை, உருவங்களை செதுக்கித் தரும்படி கேட்டு அவ்வாறே சிலமணித் துளிகளில் வேலை முடித்து கொண்டு புறப்பட்டு விடுவர். பிறகு, சில மாதம் சில வருடம் கழித்து தனக்கு ஆதாயம் தரும் அல்லது தன் இரத்த பந்தம் உடைய பிறரை இவ்வாறே அழைத்து வந்து அவர்களுக்கும் குறைந்த கூலியில் ......( Contd...) 
ஒரு பெரிய தெய்வச் சிலை செய்து தரும்படி பணிப்பர்.  இத்தனைக்கும், அவனுக்குத் தரப்படுவது என்னமோ நாத்து நடும் பெண்களுக்கான சிறு கூலிதான்! அதிலும் பலர் எட்டு மணி நேரத்துக்கு, மணிக்கு எட்டு ரூபாய் கணக்கு வீதம் என்றால் நமது வேலைக்கு ரெண்டு மணி நேரத்துக்கு இதுவே அதிகம் என்று ஒரு குயுக்தி கணக்கு மனதில் போட்டு வைத்துக் கொண்டு தம் மனதை குப்பையாக்கிக் கொள்வர்.

சில சமயம், பெரிய கோவில் பூசாரிகளும் சில பெரும் வியாபாரிகளும் ரகசிய விஜயம் செய்து தமது உடைந்த பெருஞ்சிலையின் மாதிரியைப் பார்த்துவிட்டு செல்லும் படி கெஞ்சுவர். அதைப் போன்ற அச்சு அசலான உயிர்ச் சிலையை ஓரிரு நாளில் உருவாக்கி இவன் தர, அவர்களும் எல்லோரையும் போலவே ரெண்டு நாள் கணக்குக்கு நூற்றி இருபத்தி நான்கு ரூபாய் தட்சிணை வைத்து ஒரு புன்முறுவல் செய்து விட்டு போய்கொண்டே இருப்பார்கள். அதாவது பரவாயில்லை, பெருங்கோவில் சமாசாரம்- ஆசீர்வாதம் என்று நினைத்துக் கொள்வோம் என்றால், பஞ்சை பரதேசிகளும் ஒரு மொக்கைக் கல்லைக் கொணர்ந்து அது போலவே ஒரு பென்னம் பெரிய கோவில் சிலை ஒன்று தன் குடிசைக்கும் வேண்டும் என்றும், அதையும் இலவசமாகவே செய்து தரவேண்டும் என்றும் உரிமையாய் அழுது அடம் பிடிப்பார்கள். அன்றைய நாள் அவனுக்கு பசியோடு போகும்! இப்படி, இருப்பவர்களுக்கும்  இல்லாதவர்களுக்கும் அவன் சேவை தொடர, அவனது மனைவி மக்களோ இவர்கள் அனைவரையும் விட ஏழ்மையிலேயே கிடந்து உழலுவார்கள்!!

அதைக் கண்ணுறும் அவனது அத்யந்த நண்பர்கள் சிலர் அவனுக்கு அவ்வப்போது அறிவுரை சொல்வதுண்டு.
 " டேய்! நீ மட்டும் உனது அறிவை அறிவு சேர்க்க மட்டும் என்றில்லாமல், பணம் சேர்க்க மட்டுமே அதைப் பயன்படுத்தி இருந்தால் உனது குடும்ப நிலை இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும். அரச மண்டபம் கட்டும் பணியில் நீ அப்படியே இருந்து இருக்கலாம். இன்றைக்கோ, சிற்பக் கருவிகள் தயாரிக்க பிரதான பொருள் தேடி காடுமேடுகள் சுற்றி அலைவது, சிற்பக் கருவிகள் தயாரிப்பது, அதை செழுமைப் படுத்துவது என்று ஊண் உறக்கம் இன்றி இரவில் அலைந்து திரிந்து விட்டு, பகலில் வெறும் நேரக்கூலிக்கு மாரடிப்பது ஏனாம்?


 ஒன்று, மற்றவர்களைப் போலவே அந்த மலையடிவாரத்தில்
ஒரு சுத்தியல்-ஒரு உளி கொண்டு கல்லுடைத்தோமா அன்றைய கூலி வாங்கினோமா என்று நீ மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்! அல்லது வேறிடம் தேடிப் போய் ஒரு சிற்பக் கூடம் வைத்து 'இன்ன சிலைக்கு இன்ன தரத்துக்கு இவ்வளவு ஆயிரங்கள் வெள்ளிப் பணம்' என்றாவது பிரகடனம் செய்து உனது குடும்ப நிலையை உயர்த்திக் கொண்டு இருக்கலாம்! இது போன்ற இரண்டும் இன்றி, நீயும் கஷ்டப் பட்டு உன் குடும்பத்தினரையும் கஷ்டப் படுத்துவது எங்களுக்குச் சங்கடமாய் இருக்கிறதடா!" என்பார்கள். அவன் வெறுமனே ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வான்.

நண்பர்களோ விடாமல் கேட்பார்கள், " அடேய்! உனக்கு வரவேண்டிய பணத்தை விட்டுத் தள்ளு. புகழாவது வருகிறதா? அடேய்! எவரும் செய்யக் கூடிய ஒரு சாதாரண வேலை செய்பவனின் இன்றைய வருமானம் என்ன? அட!...எவரும் செய்ய இயலா/அல்லது ஒரு சிலரே உலகில் செய்யக் கூடிய உனது உழைப்புக்கும் மதி நுட்பத்துக்கும் கிடைக்கும் வருமானம் தான் என்ன...? முக்கிய தருணங்களில், சிலையை வைத்துக் கும்பாபிசேகம் செய்யும் போதாவது உன்னை அழைத்து அங்கு அறிமுகம் செய்து மரியாதை செய்கிறார்களா? புகழே இங்கு பணமல்லவா? பணமே இங்கு புகழும் அல்லவா? புகழை விரும்பாத புத்தர், காந்தி இன்ன பிற தலைவர்கள், ஞானிகள் இந்த உலகில் உண்டா? 
அட! உனது உழைப்பைத் திருடும் இந்த சமூகம், உனக்கென்று ஒரு தேவை வரும் போது தமது நேரத்தை, உடலுழைப்பை அல்லது சேவையை உனக்கோ உன் குடும்பத்துக்கோ எவ்வளவு தந்து இருக்கிறது? யோசித்துப் பாரேன்!

பணமோ, புகழோ, நேரமோ, சேவையோ எதையுமே உனக்கு திரும்பத் தர விரும்பாத ஒரு மனிதனுக்கு உன் உழைப்பையும் அறிவையும் ஞானத்தையும் அளிப்பது நியாயமா? இது ஏமாளித் தனம் அல்லவா?

மேற்படி எதையுமே உனக்குத் தராத ஒருவனை 'அவன் ஒரு ஏழை - போகட்டும்'  என்று நீ சொல்வது சரியா? ஏழைக்கு எதற்கு பெருங்கோவில் சிலையும் அதில் ஆறு கால பூஜையும்? முட்டாளுக்கு எதற்கு "முண்டக உபநிஷதம்" ?
அடேய்! உன்னை நன்றாக ஏமாற்றுகிறார்களடா... இந்த கலி கால உலகத்தைப் புரிந்து கொள்ளேன் ", என்பார்கள். 

அவன் என்ன புரியாதவனா?  புரியாதவன் தலைக்குள் பிரபஞ்ச ரகசியங்கள் மறைந்து இருக்குமா என்ன? வெறும் கற்களை மாணிக்கச் சிற்பங்கள் ஆக்குபவனுக்கு, அச்சிலைகள் கரைந்து மீண்டும் மணற்குவியலாகும் காலக் கணக்குகளும் தெரியாதா என்ன? 

அவன் சிலசமயம் குழந்தைகளுக்கு பூடகமான ஒரு கதை சொல்லுவான்...அவனுக்கு தந்தை வழியில் ஒரு முப்பாட்டனார் இருந்தாராம். சோழர்களுக்கான அரச மண்டபம் கட்டுவதில் அவர் மிகப் பெரும் விற்பன்னராம். தலைக் கல் வைத்துக் கட்டும் போதே புவி ஈர்ப்பு விசை, மைய பாரச் சுமை, காற்றின் வேகம் இவற்றை கூட்டி கழித்துக்  கணக்குப் பார்த்து, எதற்கும் இருக்கட்டுமே என்று, நான்கு தலைக் கல்லுக்கு ஒரு கல் வீதம் "பொய்க்கல்" வைத்துக் கட்டி அங்கு பொய்ச் சாந்து பூசி மறைத்து வைப்பாராம்! 

அந்த சூட்சும இடத்தை குழூக் குறியாய் வரை படம் செய்து, தனது வழி வரும் பிற சில நம்பிக்கையான கைவினைஞர்களுக்கும் சொல்லிவைப்பாராம்! அரசன் போக்கு அசுரத் தனம்; அரச பரிபாலனம் சரி இல்லை என்று பரவலானபடி நல்லவர்களிடமிருந்து,பொது மக்களிடமிருந்து  பேச்சு வரும்போது, இறைவன் திருப்பாதத்தில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்து அதற்கேற்ப முடிவெடுத்துவிட்டு,  'தலைக் கல்லை இனி அசைக்க வேண்டியது தான்' என்பாராம்.

பிறகு, அரச மண்டபம் அருகில் மட்டக் கோல் வைத்து நீரோட்டம் பார்த்து முதற் கல்லை முடிவு செய்துவிட்டு அதன் தொடர்ச்சியாக அந்தக் குறிப்பிட்ட ஒரு சில கற்களை ஒவ்வொருவரும்  ஒவ்வொரு நாளாக ஒருசில நுட்பமான முறையில் ஓரங்குலம் அசைத்து உட்புறம் தள்ளி வைக்க, அரச மண்டபம் ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களில், இனம்புரியாத சில விபரீத புவியியல் மாற்றங்களை அடைந்து, தானே கீழே விழுந்து தரை மட்டமாகி விடுமாம்! 

ஒன்றை ஆக்குபவனுக்கு அழிக்கவும் தெரியாதா என்ன?
ஆனால், என்ன செய்வது? அழிக்கநினைக்கத் தெரியாத தாய்மையும் அளவற்ற அன்புள்ளமும் கொண்டவனிடம் தானே  ஆக்கும் சக்தியை இறைவன் தருகிறார்! அதற்காக, அந்த அன்புள்ளத்தையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவரும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும்போது தான், அந்த விபரீதம் நிகழ்ந்து விடுவதை காலத்தால் கூட தவிர்க்க முடிவதில்லை!

-Yozenbalki

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: