
கோபம்....
நமது இயலாமையின் வெளிப்பாடு
நம் மீது நாம் கொள்ளும் ஆத்திரம்!
கொசுவின் மீது யாரும்
ஆத்திரம் கொள்வது கிடையாது!
கொசு
தொல்லையே செய்கிறது !
புயல் காற்றின் மீதும்
யாரும் கோபம் கொள்வது இல்லை !
ஆனால்
நம்மால் இயலுமா இயலாதா
என்னும் கையறு நிலைகளில் தான்
கோபம் ஏற்படுகிறது!
அதாவது
கொசுத் தொல்லைக்கும்
புயல் காற்றிற்கும்
இடையிலான நமது சக்திக்குட்பட்ட
சந்தேகப் பிரதேசங்களில் தான்
ஆத்திரமானது
ஒரு அழையா விருந்தாளியாக வந்து
நம் தலைக்குள் அமர்கிறது!
கோபம் ஒரு தேக்கம் -
ஆத்திரம் ஒரு அவஸ்தை !
விழுங்கவும் இயலாமல்
துப்பவும் முடியாமல்
தவிக்கும் ஒரு தவிப்பு!
எந்தவொரு முயற்சியும்
இந்தத் தவிப்பில் இருந்தே
ஆரம்பம் ஆகி இருக்கிறது!
ஆம்!
தவிப்பு இல்லையேல்
முயற்சியும் இல்லை !
முயற்சியில் அவஸ்தை உண்டு
முயற்சியில் துன்பம் உண்டு!
உடல் பயிற்சியின் பொது கூட
நாம் பார்த்திருக்கிறோமே !
வலியும் வேதனையும்
தசைகளில் இருக்கும்;
மறுநாள் பயிற்சி தொடர
மனம் மறுக்கும் !
மனதை ஒதுக்கி வலியை பொறுத்தால்
விடாப் பயிற்சியில் வீரனாகலாம் !
வலியில்லாமல் வடிவம் உண்டா?
முயற்சியிலாத பரிசுதான் உண்டா?
ஒவ்வொரு வலியும் நீள நீட்சியே ;
துன்பம் யாவுமே மெய் வளர்ச்சியே !
எங்கே வலி இருக்கின்றதோ
அங்கே மௌனமாய் ஒரு
வளர்ச்சி நடைபெறுகின்றது
என்றே பொருள் !
ஆக
நம் சக்திக்குட்பட்ட கோபம்
நம் சாத்தியத்துக்கு உட்பட்ட வளர்ச்சி!
வளர்ச்சி - வலி!
தாங்கியே தீரவேண்டும்!
ஆயினும்
கோபம் தன்-வளர்ச்சி சார்ந்தது!
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க நினையாதது!
கோபம்
தேக்கி வைக்கப்பட்ட
அணைக்கட்டு-நீர்!
ஆக்க வேலைகள் பலவும்
அவனுக்கு
காத்துக் கிடக்கின்றன!
மாறாக
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க எண்ணும் கோபம்
'பொறாமை' ஆகிறது !
பொறாமைத் தீ - ஒரு பூமராங் போல!
புறப்பட்ட இடத்தையே வந்தடைந்து
அனுப்பியவனையே
அது அழித்து விடுகிறது!
கோபம் ஒரு ஆக்க நிலை!
பொறமையோ வெறும்
தேக்க நிலை மட்டுமே!
கோபத்துக்கு
ஒரு நதியின் குணம் உண்டு!
குட்டையின் குணமே பொறாமைக்கு!
மலையில் இருந்து
தலைக் குப்புற விழுந்த கோபத்தில்
புறப்படும் நதி
பாலை வனங்களில் பசுமை பரப்பி
நாடுகள் தாண்டி கடலைச் சேரும்!
நதியின் கோபமே-பூமியின் பூரிப்பு!
பசுமையின் அடர்த்தி என்பது
நதித்தலை படர்ந்த
கோபத்தின் அடர்த்தியே!
அடர்ந்த கோபம்-தொடர்ந்த பசுமை!
சீறிப் பாயும் நதி-சீரிய வளமை!
ஒரு காந்தியின் கோபமே
சுதந்திர பாரதம் !
கோபத்துக்குள் விகித முரண்கள்
ஆயிரம் இருக்கலாம்!
அகிம்சை கோபம்-அறிவுக் கோபம் !
ஆத்திரக் கோபம்-அவசரக் கோபம் !
வறுமை கோபம்-வாலிபக் கோபம் !
பொறுத்துப் பொங்கிய தீவிரக் கோபம் !
இப்படியாக எண்ணிலாக் கோபம்!
ஓடுகள் உடைத்து மண்ணைக் கிழித்து
வானம் பார்க்கும்
கோப விதையே விருட்சம்-சுபிட்சம் !
எழுச்சி இல்லையேல்
கருவிதை-கல்லைறை!
கதகதப்பூட்டி அடைகாக்கும் போதும்
குஞ்சுப் பறவையின்
சின்ன அலகே
முட்டைத் தடைகளை
முட்டி உடைக்கும்!
மனிதக் குழந்தையும் அவ்வாறே !
இருகால் முயற்சி
தாய்க்கென்றாலும்
மறுகால் தலைமை
சிசுவின் பணியே !
இயக்கம் என்பதே
இருகை கூட்டு!
நதியின் விரிவும்-பூமியின் சரிவும் போல்!
தலைக் குப்புற
மலை மீதிருந்து விழுந்த
கோப-நதி' போல்
வீரியத்தோடு
புறப்பட்டு போங்கள் !
சுற்றுப் புறங்களைப்
பசுமை ஆக்குங்கள் !
உங்கள் கோபம்
ஆக்க சக்தியின்
அற்புத வடிவம்!
அணைந்து விடாமல்
ஒளி பரவட்டும்!
- மோகன் பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: