இன்று மாலை எங்கள் பெரம்பூர் பகுதியில் "அன்ன தான சமாஜத்தில்" தமிழருவி மணியன் அவர்களின்
"தீர்வு தரும் திரு மந்திரம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. அந்த வழியாக எதற்கோ சென்ற நான், தமிழருவி மணியன் என்ற பெயரைப் பார்த்ததும் உள்ளே சென்று அமரவும் அவர் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. நல்ல ஆற்றொழுக்கு போன்ற பிசிரற்ற நடை. மணியான உச்சரிப்பு. ஒரு உளவியல் நிபுணன் என்னும் பார்வையில், உதாரணங்களைச் சொல்லப் போய் அவர் தடம் மாறி விடாமல் மீண்டும் திரும்பி வந்து தலைப்பு சார்ந்த செய்திகளைத் தொடரும் கூர்த்த மதி யாவும் நான் கண்டு-கேட்டு ரசித்தேன். தேர்ந்த மனக் குவிப்பு உள்ளவர்கள் மட்டுமே அதைச் செய்ய இயலும். அதற்கும் நல்மன-நல் மொழி-நற்செயல்கள் அவசியம். அது மணியன் அவர்களிடம் அதிகம் உண்டு என்பது பகைவர்களும் ஏற்கக் கூடியதே! இல்லாவிட்டால் என் கால்கள் அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை ஒருபோதும் அழைத்துச் செல்லாது!
நிற்க!
திருமந்திரம் - திருமூலர் செதுக்கிய சிற்ப-உரை!
அவர் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வரியாய் செதுக்கியது!
அவரது சொந்த அனுபவங்களில் இருந்து!
இந்தக் காலத்தில் பத்துப் புத்தகங்களைப் பார்த்து ஒரு புதியவன் புத்தகம் யாப்பது போலின்றி!
திருமூலர், தானே சொல்கிற படி
'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்" என்கிறார்! ஓரிடத்தில்
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" என்கிறார்!
ஒவ்வொன்றும் நான்கு வரிப் பாடல்கள்!வெண்பா முறையில் எழுதி உள்ளார்! முதல் பாடல் என்ன தெரியுமா?
"ஒன்றவன் தானே ; இரண்டவன் இன் னருள்
நின்றனன் மூன்றினுள் ; நான்கு உணர்ந்தானைந்து
வென்றன னாறு; விரிந்தன னேழும்பர்ச்
சென்றனன்; தானிருந்தா நுணர்ந்தது வெட்டே"!
ஒன்று அவன் தானே = இறைவன் ஒருவனே என்கிறார்!
இரண்டு அவன் இன்னருள் = உரு - அரு ( matter & energy) அவனே!
மூன்று நின்றனன் = படைத்தல், காத்தல், அழித்தல் நிலைகள்.
நான்கு உணர்ந்தனன் = அறம், பொருள், இன்பம், வீடு பேறு!
ஆறு விரிந்தனன் = மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு
ஆதாரங்களிலும் இறைந்து பரவிய இறைவன்!
ஏழு உம்பர்ச் சென்றனன் = அதற்கும் மேலாக ஏழாவது தளமான
சகஸ்ரார்-
இல் சென்றவன் !
தான்இருந்தான் உணர்ந்தது
எட்டே! = அங்கு ஒருவன் உணர்வது, தானே பஞ்ச பூதக்
கலவையாகவும் சூரிய சந்திர மற்றும் அனைத்து
உயிராகவும்-அதாவது எட்டாக தன்னை உணர்தல் !
திருமந்திரத்தில் எனக்குப் பிடித்த இரு பாடல்கள் என்ன தெரியுமா?
"கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒரு சிறை
தன்னியல் புண்ணி உணந்தோர் ஒரு சிறை
என்னிது? ஈசன் இயல் பறியாரே ! " (2073)
(வெறும் வார்த்தைக்) கற்றோர் ஒரு சிறை - என்ன ஒரு கம்பீரமாய்ச்
சொல்கிறார் பாருங்கள்!
"நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்
நடுவு நின்றார் சிலர் தேவரு மாவர்
நடுவு நின்றார் சிலர் நம்பனு மாவர்
நடுவு நின்றா ரொடு நானுநின் றேனே!" (322)
நடுவில் நிற்பது சுலபம் இல்லை!
புத்தர் கூட (middle way) அதையே பேசுகிறார் !
எந்த மனிதனும் எதையோ சார்ந்து தான் வாழ்கிறான்-நடுவில் நிற்க முடிவதில்லை!
இந்தியாவிலும் இல்லாமல் பாகிஸ்தானிலும் இல்லாமல் நடுவில்ஒருவன் வெறும் மனிதனாக இருப்பது அத்தனை சுலபம் இல்லை-இருந்தால் அவரே ஞானி-தேவர் என்கிறார் !
"நடுவு நின்றாரோடு நானும் நின்றேனே" என்று திருமூலர் சொல்வது எவ்வளவு சுகானுபவமாக பவ்வியமாக உள்ளது பாருங்களேன்!
நேரம் கிடைக்கும் போது எனது தியான/உளவியல் பார்வையில் ஒரு சில பாடல்களுக்கு விளக்கம்-இந்த அர்த்தமாய்தான் இருக்கும் என்ற வகையில் எழுத வேண்டும் என்ற நினைப்பு நெடு நாட்களாய் உள்ளது!
எனினும், அந்தக் குறையைப் போக்க திரு.தமிழ் அருவி மணியன் போன்ற சிறப்பான அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதால் நான் வேறு விஷயங்களில் எப்போதும் போல கவனம் செலுத்தலாம்!
ஒரு இடத்தில நிலையாமை பற்றி உணர்த்த வந்த மணியன் அவர்கள், மனிதர்கள் நமக்கு அதிக பட்சம் தரப்பட்ட நாட்கள் 100 x 365 = 36500; அதற்குப் போய் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்ற போது அவை அர்த்தத்தோடு மவுனித்துப் போனது!
இப்போதெல்லாம் ராப்பிச்சைக் காரனே ஏன் இல்லை தெரியுமா என்று கேள்வி கேட்டு விட்டு அதற்கு தானே பதில் சொல்ல முனைந்த தமிழருவி - அதற்கு காரணம் இக்காலத்தில் நம்மிடம் காணப்படும் அளவு கடந்த சுயநலம் - அதற்கு ஆதாரமாக நம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள Fridge-களே சாட்சி என்று சொன்ன போது எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது!
திருமந்திரம் பற்றி மணியன் அவர்களைப் பேசச் சொல்லி வெறுமனே கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்துவிட வேண்டும்!
பிறகு ஒரு விஷயம், நல்ல படித்தவர்கள் கூட்டமும் இருந்தது மேலும் ஒரு சிறப்பு!
நீங்களும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு ஒரு முறை திருமந்திரம் படித்துப் பாருங்களேன்!
(இங்கு கிளிக்குங்கள் நீங்களும் திருமந்திரம் இங்கு படிக்கலாம்)
-மோகன் பால்கி
(இப்படி எல்லாம் நான் போற்றி புகழ்ந்து எழுதிய அந்த மனிதன் பிற்காலத்தில் திராவிடர் இயக்கங்களை (திமுக, அதிமுகவை) ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் பின்னால் அலைந்து கொண்டு, அவரை கட்சி ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டு, பிறகு அவருடைய தீய கனவு பலிக்காமல் புலம்பிக் கொண்டு இருந்ததெல்லாம் வரலாற்றில் அவர் பற்றிய மிகவும் அவலமான பகுதிகள்! அவர் வெறும் தமிழ் சார்ந்தவராக, இலக்கிய பேச்சாளராக இருந்திருக்கலாம்! அவர் உள்ளிருந்து வெளிவந்த திராவிட எதிர்ப்பு விஷம் மிகவும் கேவலமானது; அவர் மீது இருந்த மதிப்பு போய்விட்டது!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: