Translate this blog to any language

ஞாயிறு, 7 மார்ச், 2010

மன்னர் ஆட்சியே எனக்குப் போதும்!


மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட்டுவிட்டது என்று நம்ப முடியவில்லை!

இன்னும் சொல்லப் போனால் மன்னர் ஆட்சியே மேல் என்று தோன்றுகிறது.

காரணம், அன்றைய முகலாய மன்னர்கள் அல்லது அதற்கும் முன்னர் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் ராஜ போக வாழ்க்கையை விட அதிகமான சொகுசு வாழ்க்கை நமது மாநில மத்திய அமைச்சர்கள்/ அவர்களது குடும்பங்கள் வாழ்வது கண்கூடு. அன்றைக்காவது ஒரு நாட்டுக்கு ஒரு மன்னனும் அவனது ஒரே ஒரு குடும்பம்/சில பல மனைவியர்கள், ஒரு சில தேர்கள், கொஞ்சம் யானைகள், கொஞ்சம் குதிரைகள், கொஞ்சம் வைரம்-தங்க நகைகள், ஓரிரு அரண்மனைகள் என்று இருந்து விட்டு செத்துப் போனார்கள். இன்றைக்குப் பார்த்தால், சுதந்திரம்!!! பெற்ற இந்தியாவில் ஒரு 300 - 400 பாராளுமன்ற அமைச்சர்கள், 20 -25 மாநிலங்களில், ஒரு மாநிலத்துக்கு 100 - 300 எம்-எல்-ஏ க்கள், அதோடல்லாமல் மாநில அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், அரசுச் செயலாளர்கள், கலக்டர்கள் என்று ஒரு பெரிய மெகா-சைஸ் கும்பலே இருந்து கொண்டு ராஜ வாழ்கை அனுபவிக்கிறது.

பத்திரிக்கைகள் சொல்கிற புள்ளி விவரம், பொது மக்கள் பேசுவது, இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஒரு சாதாரண வட்டச் செயலாளர் ( ஆளும்/அல்லது ஆளாத கட்சியாக இருக்கலாம் ) முதற் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து வருவது தெரிகிறது. அதோடு, ஒரு அரசியல்/அரசு பிரமுகர் காரில் போனால் பின்னால் நூறு கார்கள், ஆயிரம் தொண்டர்கள் ஜே! ஜே! போடுவது, காலில் விழுவது, ஆங்காங்கு மேடை போட்டு அரசாங்கப் பணத்தில் இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தருவது! வழியெங்கும் தோரணங்கள்! வாழ்த்து Baner -கள், கொடிகள், அன்ன தானம், வஸ்த்ர தானம், கோவில் பூஜைகள், பண முடிப்புகள் வழங்குவது, இதையெல்லாம் பார்க்கும் போது, இந்த மக்கள் ஆட்சி முறை, ஆயிரக்கணக்கான குறுநில மன்னர்களின் தான்தோன்றித் தனமான ஆட்சி போலவும், அதிக செலவு பிடிப்பதாகவும், அதிக ஓட்டைகள் உள்ள பானையாகவும் தோன்றுகிறது.

மக்களின் அரசு என்பது நூறு ரூபாய் வருமானம் வந்தால் அதில் தொண்ணூறு ரூபாயை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள "மக்கள் - அரசாங்கப் பசு", நூறு ருபாய்க்கு புல்லும், புண்ணாக்கும் வாங்கிப் போட்டால் பத்து ரூபாய்க்கு மட்டும் பால் கறக்கிறது!! கொடுமை! தொண்ணூறு ரூபாயை இந்த மாதிரி, வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் கொள்ளையடித்து விடுகிறான். உழைக்கும் மக்களுக்கு, நல்ல தண்ணீர், நல்லக் காற்று, நல்ல சாலைகள், பயமுறுத்தாத விலையில் அரிசி, பருப்பு எதுவும் கிடைப்பதில்லை. ஆனாலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நம் நாட்டு தொழில் மன்னர்களும், அரசியல் மந்திரிகளும் தவறாமல் இடம் பெறுகிறார்கள். நூறு கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், ஒரு சில "தற்கால குறு-நில மன்னர்களிடம்" மட்டுமே குவிந்து கிடக்கிறது! என்ன எழவோ! இதற்குப் பெயர் மக்கள் ஆட்சி! ஜன நாயகம்! வெங்காயம்!

எனக்கு என்னமோ அந்த பழைய காலத்தில் தலைக்கு மேல் கிரீடம் வைத்து மன்னர் வருகிறார்!பராக்கு! பராக்கு! என்று சொல்லும் ஒற்றை மன்னர் முடியாட்சியே சிறந்தது என்று தோன்றுகிறது!

உங்களுக்கு எப்படி?

-மோகன் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: