Translate this blog to any language

புதன், 18 ஏப்ரல், 2012

students' suicidal stupidity & timidity: தன்னுயிர் மாய்க்கும் கோழைத்தனம் கற்பிக்கும் கல்விக் கூடங்கள்!

Ms. Thairiya Lakshmi
The suicide note left by Dhyriya Lakshmi.  .
Her suicidal note in Tamil 
தமிழகக் கல்விக் கூடங்கள் தற்கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. இந்த கல்வி ஆண்டில் மட்டும் வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து வருவதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு ஆரம்ப பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாக தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் மாணவர்களுக்கு எதார்த்தமான வாழ்வியல் சூழ்நிலையை பழக்காததே ஆகும். காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ இதுபோன்ற எதையும் தாங்கிக்கொள்ள இயலாமல் மாணவர்கள் கோழைத்தனமாக தேர்ந்தெடுப்பது மரணத்தைதான்!

பணத்தை வாங்கிக் கொண்டு மார்க் வாங்குவது குறித்து கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடங்களில் தோல்வியை தைரியமாக எதிர்கொள்வது குறித்த வாழ்வின் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

2011 – 12 கல்வி ஆண்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 15 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்து ஒரு வாரத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பொழுதே கல்வித்துறை விழித்துக்கொண்டிருந்தால் நேற்றைய (17.4.2012) தைரியலட்சுமியின் தற்கொலை வரை மாணவர்களின் மரணம் நீண்டிருக்காது.

கல்வியின் நிலை:

2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதே ஐ.ஐ.டியில்...


கடந்த ஏப்ரல் 8 ம்தேதி காதல் தோல்வியால் உத்திரபிரதேச மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழக மாணவர்கள் உயர்கல்விக்காக கனவு காணும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவர் மணிவண்ணன் 26 அரியர் உள்ளது என்பதற்காக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்த மாணவி தைரியலட்சுமி பாடங்கள் புரியவில்லை, படிக்க சிரமமாக இருக்கிறது, தேர்வில் பாஸாக மாட்டோம் என்பதற்காக நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2012 ம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் 17 ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தேர்வு தோல்வியாலும், காதல் தோல்வியாலும், ஆசிரியர்களின் அவமானம் தாங்காமலும் 15 மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணங்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் உயிர் என்பது ஒன்றுதான். எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென்று உயிரை மாய்த்துக்கொள்ளும் கோழைத்தனம் ஏன்  இந்த மாணவர்களுக்கு வருகிறது என்பதை கண்டறிந்து களைய வேண்டும்!

இந்த ஆண்டில் மட்டும் சராசரியாக வாரம ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை இந்த ஆண்டு 19 மாணவ, மாணவியர் தற்கொலை முடிவை நாடியுள்ளனர். இவர்களில் 12 பேர் படிப்பை சுமையாக கருதி மரணத்தைத் தழுவியுள்ளனர்.

19 பேரில் 11 பேர் கல்லூரி மாணவர்கள், மற்ற 8 பேரும் பள்ளிச் சிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல்.

2011ம் ஆண்டு 84 மாணவ, மாணவியர் தற்கொலை முடிவை நாடியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று வயதில் ஆரம்ப பள்ளிகளில் நுழைந்து 17 வயதில் மேல்நிலைப் பள்ளி முடித்து மாணவர்கள் வெளியே வருவது வரை 15 வருட பள்ளி வாழ்க்கையில் மாணவர்களுக்கு பிறகு என்னதான்  கற்றுத்தரப்படுகிறது என்பது   புரியாத புதிராக இருக்கிறது.

மதிப்பெண் குறித்த கண்ணோட்டத்துடனேதான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வாங்கினால்தான் மதிப்பு என்று பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம் மற்றும் நூறு சதவிகித தேர்ச்சிக்காக பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் இவை அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

பெற்றோர்கள் நிலை:

ஐஐடி, பொறியியல் போன்ற படிப்புகளில் நுழைவதே கௌரவமாகவும் அதற்குமேல் வேலைக்கான உத்தரவாதமாகவும் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் பார்க்கப்படுகிறது. இந்த​ பொதுப்புத்தி, பட்டப்படிப்பு முடித்ததும் கார்ப்பரேட் கம்பெனிகளில் கிடைக்கப்போகும் வேலை உத்தரவாதத்தைப் பற்றியும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை பற்றியும் கனவுகளை மாணவனுக்குள் உருவாக்கிறது.

ஐஐடி, பொறியியல் மாணவர்களில் 80%ற்கும் மேலானோர் வங்கிக்கடனை நம்பி படிக்கும் நடுத்தர​ வர்க்கத்தினர். பட்டப்படிப்பை முடித்ததும் இக்கடனை திருப்பி செலுத்த​ வேண்டிய​ நிர்பந்தமும் அம்மாணவனுடைய​ உடனடி வேலைத் தேவைக்கு காரணமாகிறது.

பொறியியல், மருத்துவம், ஐஐடி போன்ற படிப்புகள் மட்டுமே வாழ்க்கை என்றால் அந்த படிப்புகளை படிப்பதற்கான திறமை மாணவர்களுக்கு இருக்கவேண்டும். ப்ளஸ்டூவில் ஆயிரத்து நூறுக்கு மேல் எடுத்து நுழைவுத்தேர்வில் நல்ல ரேங்க் வாங்கினால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விடும் என்பது உண்மைதான்.

அதேசமயம், நான்கு ஆண்டுகள் அந்த கல்வியை படிக்க ஈடுபாடு வர வேண்டுமே!  பொறியியல் படிக்க விருப்பமில்லாத நிலையிலும் அவர்களை அந்த படிப்புகளுக்குள் தள்ளிய பெற்றோர்கள் மற்றும் நம் சமூகத்தை தான்  முதல் குற்றவாளிகளாக கருதவேண்டும். ஏனெனில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்களுமே ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள். 

ஆனால் தமிழ் வழி பள்ளிக் கல்வி முடித்து, ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள். அங்குள்ள தற்காலிகமான ஆங்கிலம் புரியாத சூழ் நிலையே அவர்களை குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் நிலைக்குத் தள்ளுகிறது-தாழ்வு மனப்பான்மையை தூண்டுகிறது. அதைத் தாண்டும் மனோபலத்தை கல்லூரிகள் உருவாக்கத் தவறி விடுகின்றன! மேலும், சில சூழல்களில் மேல்நிலைக் கல்வியில் வேறு துறையில் பயணிக்க நினைத்தவர்களை பொறியியல் பக்கம் திசை திருப்புவதும் அவர்களின் தற்கொலைக்கு காரணமாகி விடுகிறது!

ஆசிரியர்களின் நிலை:


கல்விக்கூடங்களில் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் பாடம், மதிப்பெண் என்பதைத்தாண்டி வேறு எதைப்பற்றியும் கருத்தில் கொள்வதில்லை.

பள்ளிக்கல்வியைத் தாண்டும் மாணவர்களுக்கு கல்லூரி சூழல்களை 
எதிர் கொள்ளும் படிப்பினைகள் எங்குமே கற்றுத் தரப் படுவதில்லை. உதாரணம், ஆங்கில மொழியில் உரையாடுவது, தானே சுயமாக ஆங்கிலத்தில் எழுதுவது போன்றவற்றை பள்ளியில் பயிலும்...


காலத்திலேயே சொல்லி தராமல், கண்ணைக் கட்டி காட்டில் விடுவது போல திடீரென்று வெறும் ஆங்கிலம் மட்டுமே பயிற்சி மொழியாய் இருக்கும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளைத் தள்ளிவிடும் கொடுமை!


80-90 களில் கூட பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடத்தை கூட விளையாட்டு போல நடத்துவார்கள். பாடத்தை தாண்டி விளையாட்டு, அரசியல், சினிமா, வேடிக்கை பேச்சு, நீதிபோதனை என கல்விக்கூடங்களில் பலவற்றையும் கற்பித்தார்கள். என்றைக்கு கல்வியில் தனியார்மயம் நுழைந்து போட்டி கல்வியானது கூவி கூவி விற்பனை செய்யப்பட்டதோ அன்றைக்கே ஆசிரியர்களும், மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டனர்.

மாணவர்களின் மனதைப் பற்றியோ அவர்களின் தேவைகளைப் பற்றியோ இன்றைய கல்வி நிறுவனங்களுக்கு அக்கறையில்லை. அதனால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது நீடிக்கிறது. சில சமயங்களில் மாணவர்கள் சக மாணவர்களை அல்லது ஆசிரியரை அற்ப காரணங்களுக்காக அல்லது காரணமின்றியும் கொலையும் செய்கிறார்கள்.

தற்கொலைக்கான தூண்டுதல்கள்:

தற்போதைய கல்விமுறை மாணவனுக்கு சமூகம் சார்ந்த​ எந்த​ புரிதலையும் உருவாக்கிக் கொடுக்காமல் இருப்பதும், சமூக​ யதார்த்தங்களிலிருந்து அன்னியப்பட்ட​ நடுத்தர​ வர்க்கப் பின்னணியும், அம்மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்படும் போது அதை தனக்கு மட்டுமே உரிய​ பிரச்சனையாகப்பார்ப்பதும், அவனது சமூகப்பொருளாதார​ நிலைமைகளுமே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது.ஆனால் சாதாரண அரசு கல்லூரிகளில் படிக்கும்  மாணவர்களின் விழிப்புணர்வு,  ஐஐடி போன்ற உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இருப்பது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இன்றைக்கு மாணவர்களின் தேவையே, பிரச்சினையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியம்தான் அதை எந்த கல்விக்கூடங்களிலும் தற்போது கற்றுக்கொடுப்பதாக தெரியவில்லை. கல்விக்கூடங்களில் சூழ்நிலை மாறினாலே மாணவர்களின் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். அரசும் கல்வித்துறையும் இனியாவது விழித்துக்கொள்ளுமா? என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் உளவியல் வல்லுனர்களின் கேள்வியாகும்!
தொகுப்பு: பிற செய்தி வலைதளங்களில் இருந்து....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: