Translate this blog to any language

புதன், 4 ஏப்ரல், 2012

Get a Patent & Fool those Ducks: அப்படி சொறியாதே...நான் காப்புரிமை வாங்கி இருக்கிறேன்!

       

(தாத்தா அங்கு தெருவோர திண்ணையில் அமர்ந்து வெற்றிலை குதப்பியபடி இருக்கிறார்..குண்டூஸ் அப்போது விளையாடிவிட்டு அங்கு வருகிறான்)

குண்டூஸ்: தாத்தா! நான் ஒன்னு கேப்பேன் பதில் சொல்றீங்களா?

தாத்தா: கேளு கண்ணா! ஆனா குண்டக்க மண்டக்க கேக்கக் கூடாது...ஜென்யுனான கேள்வியா இருந்தா பதில் சொல்வேன்.

குண்டூஸ்: இது நான் ரொம்ப நாளா கேட்கனும்னு இருந்தேன் தாத்தா; கிண்டல் கேள்வி எல்லாம் இல்ல!

தாத்தா: அப்பன்னா கேளு!

குண்டூஸ்: இந்த (patent right) 'பேடன்ட் ரைட்'-ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன தாத்தா?

தாத்தா: அதுவா..? அதாவது நான் ஒரு புதுமையான கருவியை ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி மார்கட்டுல விற்பனைக்கு அனுப்புறேன். ஒருத்தன் அதே மாதிரி ஒன்னை காப்பி அடிச்சி என்னை விட குறைச்ச விலைக்கு வித்தா எனக்கு நஷ்டம் தானே? அப்போ, அதை தடுக்க நான் என் கருவிக்கு 'காப்புரிமை' வாங்கி வச்சிக்குவேன். அதுதான் 'பேடன்ட் ரைட்' கண்ணா!

குண்டூஸ்: அதாவது நீங்க கண்டுபிடிச்ச கருவியை நீங்க யானை விலை குதிரை விலை வச்சி விப்பீங்க! வேற எவனும் அதே மாதிரி கருவியை குறைஞ்ச விலைக்கு கூட விக்கக் கூடாது! அதை தடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த பேடன்ட் ரைட்...அப்படிதானே தாத்தா?

தாத்தா: டேய்! நீ ஏன்டா எப்பவும் தப்பு தப்பாவே யோசிக்கிற? நீயே நாளைக்கு தண்ணிய பெட்ரோலா மாத்துற மாதிரி ஒரு கருவி கண்டு பிடிச்சி அதுக்கு ஒரு பேடன்ட் ரைட் வாங்கி வச்சிட்டா உலகம் முழுசும் இருந்து உனக்கு கோடி கோடியா.....(Contd..)



 பணம் வருமில்ல? உனக்கு நல்லது தானே?

குண்டூஸ்: அதாவது ஒருமுறை நான் எப்படியோ, 'காக்க உக்கார பனம்பழம் விழுறா மாதிரி' அல்லது வேற எவனோ கண்டுபிடிச்சி பாதியில விட்டதை ஒரு வாரத்துல இல்ல அட ஒரு மாசத்துல முடிச்சிட்டா அதுக்கப்புறம் நான் உழைக்கவே வேணாம். உக்காந்துகிட்டு ஊர் பணத்துல குளிர் காயலாம்ன்னு சொல்லுங்க! என் தலை முறையும் அதே மாதிரி என் பேருக்கு வருகிற பணத்தை வச்சி சோம்பேறி சோறு தின்னலாம் அதுதானே தாத்தா

தாத்தா: இப்படி பேசனா நான் உன்கிட்ட என்னத்த பேசறது? அதுதான் உன்கிட்ட யாரும் பேச பயப்படறாங்க. இப்படி எல்லாத்தையும் குதர்க்கமா பாத்தா எப்படிடா...?

குண்டூஸ்: சரி அதை விடுங்க தாத்தா! என்னென்ன பொருள்களை அல்லது விஷயங்களை 'பேடன்ட் ரைட்' பண்ணலாமாம்! எனக்கு அதை சொல்லுங்களேன்!

தாத்தா: ஏன்டா....? நீ எதையாவது பேடன்ட் ரைட் வாங்கப் போறீயா?

குண்டூஸ்: ஆமா! நான் என்ன பில் கேட்ஸா...ஒரு விண்டோசை கண்டுபிடிச்சிட்டு உலகம் உள்ளவரை அதுல இருந்து பணம் கொட்டனும்னு பேராசைப்பட? அப்பிடியே நான் இங்க எதையாவது கண்டு பிடிச்சாலும் அது நொள்ளை-இது சொள்ளைன்னுட்டு "ராமர் பிள்ளையை" நோகடிச்சா மாதிரி டெக்னிக்கலா பேசி பைத்தியக்கார பட்டம் சூட்டாத குறையா நம்ம ஆளுங்க பண்ணிப்புட மாட்டாங்களா என்ன? சும்மா சொல்லுங்க-எதெல்லாம் பேடன்ட் ரைட் கீழே வருது தாத்தா?

தாத்தா: கிட்டத்தட்ட எல்லாப் பொருளுமே, ஏன் Intellectual property (IP) ன்னு சொல்ற எல்லா சிந்தனையுமே பேடன்ட் ரைட் கீழே வருது கண்ணா! உணவுப் பொருட்கள், மருந்துகள், மின்னணு சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், ஆடைகள்...இந்த மாதிரி! இவ்வளவு ஏன்..நம்ம ஊர் பாசுமதி அரிசி, மஞ்சள், எலுமிச்சை, வேப்பிலை இதை எல்லாம் கூட அமெரிக்கவுல யாரோ பேடன்ட் ரைட் வாங்க...நம்ம இந்திய அரசாங்கம் திடீர்ன்னு முழிச்சிக்கிட்டு அதுக்காக போர்க்கொடி தூக்கி இருக்கு! இன்னொருத்தன் என்னடான்னா நாம காலம்  காலமா பண்ணிக்கிட்டு  இருக்குற (Yoga Asanas) யோகாவையே பேடன்ட் ரைட் வாங்க முயற்சி பண்றதா கேள்வி!

குண்டூஸ்: இதென்ன தாத்தா அநியாயமா இருக்கு! போற போக்குல நம்ம ஊரு புடவை, வேஷ்டி இதுக்கெல்லாம் கூட வெள்ளைக்காரன் பேடன்ட் ரைட் வாங்கி வச்சிக்கிட்டு...நீங்க வெளிய போகும் போது உங்க வேட்டிய உருவிக்கிட்டு போயிடுவான் போல இருக்கே! அதுக்கு தான் தாத்தா நான் சொல்றேன்! இதெல்லாம் சோம்பேறிங்க கண்டு பிடிச்ச தந்திரம்ன்னு! அதுலயும் வெள்ளைக்காரனுக்கு உழைக்காம சாப்பிடம்ன்னு ரொம்ப ரொம்ப ஆசை! ஒரே மெஷின் ஒரு நிமிஷத்துல ஆயிரம் மூட்டை அரிசி, ஆயிரம் பில்டிங், ஆயிரம் டிரஸ் உற்பத்தி பண்றா மாதிரி கண்டு பிடிச்சி அதை பேடன்ட் ரைட் வாங்கி வச்சிக்கிட்டு உலகம் முழுசும் லீசுக்கு விட்டு அவனுக்கு நோகாம சம்பாதிக்கணும்-ஜாலியா இருக்கணும்! போற போக்குல இது எல்லாம் கடவுளுக்கே புடிக்காம அந்த நாடு சீக்கிரம் ஏழையாப் போயிடும்-நீங்க வேணா இன்னக்கி எழுதி வச்சிக்குங்க தாத்தா! இந்த நோய் எல்லா நாட்டுக்கும் இன்னக்கி பரவிகிட்டு இருக்கு.
ஆனா....தாத்தா...! உழைக்காத தேசம் என்னைக்கும் உருப்படாது!

தாத்தா:  ( தாத்தா....சிந்தனையோடு தன் தாடியை சொரிந்து கொண்டு நிற்கிறார்....குண்டூஸ் அப்போது தாத்தாவின் மீது பாய்ந்து அவர் கையை வெடுக்கென தட்டி விடுகிறான்...)

தாத்தா: (தாத்தா பதறிப் போய்..) என்னடா...ஏன் என் கையை அப்படி பிடிச்சி இழுக்கிற...வலிக்குதுடா...என்ன உனக்கு பைத்தியமா?

குண்டூஸ்: அப்படி சொறியாதீங்க தாத்தா...அதற்கும் எவனாவது பேடன்ட் ரைட் வாங்கி வச்சிருக்கப் போறான்..!

தாத்தா: டேய்! உனக்கு கொஞ்ச நஞ்சம் கொழுப்பு இல்ல...நீ என்னோட பத்து நாளைக்கி பேசாதடா...படவா ராஸ்கல்! ( தாத்தா விருட்டென எழுந்து வீட்டுக்குள் கோபமாய் போகிறார்....குண்டூஸ் விழுந்து விழுந்து சிரிக்கிறான்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: