Translate this blog to any language

புதன், 22 அக்டோபர், 2008

"கருத்துப் - பிழை"


என் நண்பனே !

எனது வலிகளை நீ
அறிந்திருக்க நியாயம் இல்லை தான்!

அம்மா கூட
ஆற்றுப் படுத்தலாம்
அவ்வளவே தவிர
உள்ளே கிடக்கும் இரணங்களை
உள்-நுழைந்து பார்க்க
யாரால்தான் இயலும்!

ஒருவர் வலியை
இன்னொருவர் அறிய
இங்கு
வழியே இல்லை!

காக்கையின்-பசி-வலியும்
எருதின்-புண்-வலியும் போல...!

எந்த வலி பெரிது
எது அதிக நியாயம் என்று
எந்த புத்தர் வந்து
உன்னிடம் விளக்கி
புரிய வைக்கப்போகிறார்!

இருப்பினும்,
நான்
இப்போது உணர்கிறேன்..

நீயும் நானும் ஒன்றே என்ற
சிறியதொரு
"கருத்துப் பிழையில்" தான்
வெடிக்கிறது என்
விவஸ்தையற்ற பெரும் கோபம்!

-மோகன் பால்கி

Riches - The Risker ! பணக்காரன்-ஒரு "பணயக்காரன்"!


பணக்காரன்
என்பவன்
ஒரு மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

அவன் தனது உயிரை
அதைவிட
தன்
மானத்தை...
"தன்-மானத்தை"
ஒரு மிகப் பெரும்
இலட்சியத்துக்காக
பணயம் வைக்கத் துணிகிறான்!

எதையும் இழக்காமல்
இங்கு
எதுவுமே கிடைப்பதில்லை!

ஆம்
பணக்காரன்
ஒரு
மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

-மோகன் பால்கி