Translate this blog to any language

சனி, 31 ஜூலை, 2010

இந்திய உணவுக் கழகத்தின் அசட்டை - வீணாகும் தானியங்கள்!


இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 42 கோடி! 
இவர்களிடம் அதிகம் இல்லாதது சத்துணவு! சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவுப் பழக்கம் இல்லாமை அல்லது இயலாமை இவர்களது பொதுக்காரணி.

ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் இத்தனை பேர் தவிக்கையில், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் விநியோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப்போய்க் கிடக்கும் அரிசி, கோதுமை அளவு, ஜூலை 1-ம் தேதி கணக்கீட்டின்படி, மொத்தம் 11,708 டன் என்று தெரியவந்தால், இத்தகைய அக்கறையின்மையை என்னவென்று சொல்வது?இதில் அதிகபட்சமாக, பஞ்சாபில் 7,066 டன், மேற்கு வங்கத்தில் 1,846 டன், பிகாரில் 485 டன், குஜராத்தில் 1,457 டன், மகாராஷ்டரத்தில் 278 டன் தானியம் வீணாகிப்போனது. இதில் மிகக் குறைவான அளவு தானியத்தை வீணடித்த மாநிலங்கள் இரண்டுதான். ஆந்திரம் 6 டன், தமிழ்நாடு 1 டன். இதற்காக நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.இந்தியாவில் தானியங்களை விளைநிலத்திலிருந்து நேரடியாக கொள்முதல் மையத்துக்கு தானியத்தைக் கொண்டுசெல்லும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருக்கின்றன. இதனால், விளையும் தானியங்களில் 20 விழுக்காடும், அழுகும் காய்கனிகளில் 30 சதவீதமும் வழியிலேயே வீணாகிப் போகின்றன என்கிறார் வேளாண்மை ஆர்வலர் மோகன் தாரியா.


இந்த நிலைமைகளையும் தாண்டித்தான், உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழகக் கிடங்குகளுக்கு வருகின்றன. அதையும் சரியாகப் பாதுகாக்காமல் வீணடித்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் இந்திய உணவுக் கழக அதிகாரிகள்தான். தானியங்களை முறையாக, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடுக்கி வைக்காமலும், திறந்தவெளியில் அடுக்கி வைத்தும் தானியங்களைப் பாழ்படுத்திய  இந்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

தானியங்களைப் பாதுகாக்கப் போதுமான கிடங்குகளை சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது யாருடைய குற்றம்? உலகத் தரத்திலான விமான நிலையங்கள், மோட்டார் வாகனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வளாகங்கள், சாலைகள் என்று பெருமை பேசும் நாம், உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை முறையாகப் பாதுகாக்கவும் சேமிக்கவும் தரமான கிடங்குகளையும் குளிர்பதனக்கூடங்களையும் அமைக்காமல் இருக்கிறோமே, ஏன்?நாட்டில் ஓர் இடத்தில் மழை பொய்த்தாலும், இன்னொரு பகுதியின் விளைச்சலைக் கொண்டுபோய்ச் சேர்த்து, பஞ்சத்தைப் போக்கிவிட முடியும் என்பதால் இனி பஞ்சமே வராது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. 

இதைச் சாத்தியமாக்க உருவான இந்திய உணவுக் கழகம், தானியத்தை வீணடித்துக் கொண்டிருப்பது தொடர்பாக உச்ச  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு தானியம் வீணாகிப் போனது என்பதை உணவுக் கழகத்தின் மூலம் அறியவந்த நீதிபதிகள் கொதிப்படைந்துவிட்டனர். "சாப்பிட வழியில்லாத ஏழைகள் வாழும் இந்த நாட்டில் ஒரேயொரு மணி தானியம் வீணாவதும்கூட குற்றமாகும்' என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தானியங்களைக் கெட்டுப்போகிற வரை வைத்திருக்காமல், தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக விநியோகம் செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பி, ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.இந்திய உணவுக் கழகத்தின் ஊழலும், சிதறிப்போகும் தானியத்தின் அளவும் அதிகமாக இருப்பதால், ஏன் அனைத்து நடைமுறையையும் கணினிமயமாக்குதல் கூடாது என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். இந்த தானியங்கள் எதற்காக பல கிடங்களுக்கு மாறிச்செல்ல வேண்டும்?


உணவுக் கழக கிடங்கிலிருந்து நேரடியாக பொதுவிநியோக மையத்துக்கு அளிக்கும் முறையை உருவாக்கினால் என்ன என்றும்கூட நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இவ்வாறு பல கிடங்குகளுக்கு மாற்றுவதன் நோக்கமே அரசியல் பின்புலம் உள்ளவர்களின் லாரிகளுக்கு வாடகை கொடுப்பதற்கே என்பது ஊர் அறிந்த ரகசியம்.சேமித்து வைக்க இடம் போதவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், தனியார் இடங்களை வாடகைக்கு அமர்த்தவும் இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் செய்வதில்லை. தானிய மூட்டைகளில் பொத்தல் போட்டு ஒவ்வொன்றிலும் கொஞ்சம் தானியத்தைப் பிரித்தெடுத்து, விற்றுக் காசு பார்க்கும் கூட்டம் உணவுக் கழகத்தில் இருப்பதால், தானியம் கெட்டுப்போனால்தான் இவற்றையெல்லாம் மூடி மறைக்க முடியும்.

இந்தியாவில் பல கோடி ஏழைகளின் வீட்டுக்குப் போக வேண்டிய தானியத்தை தங்கள் சுயநலத்துக்காக ஏமாற்றி வெளியே கொண்டுபோய் விற்கிறோம் என்றோ, இவை கெட்டுப்போய், நியாயவிலைக்கடைகள் மூலம் கிடைக்கும் நேரத்தில் உண்ணவும் தகுதியில்லாததாக மாறுகிறது என்கின்ற எண்ணமோ இல்லாத அளவுக்கு இவர்கள் மனம் ஊழலாலும் அதிகார மமதையாலும் மரத்துப்போய்விட்டது. 

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?- என்கிறான் மகாகவி பாரதி. இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியம் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தின் எச்சம்தானே!

Courtesy: http://www.dinamani.com/edition/

வெள்ளி, 30 ஜூலை, 2010

இது போன்ற கருவிகள் இல்லாமல் "சாலை-தர-நிர்ணயம்" சாத்தியம் இல்லை! Standardize Everything - To ensure Quality!


ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் நல்ல சாலைகள் போடப் படுவதை உறுதிப் படுத்திக் கொள்ள,  "சாலைத் தரம்- கண்காணிக்கும் கருவிகள்" உள்ளன! 


முதலில் காண்பது "தரம் காணும் இயந்திரம்-கருவி".

இரண்டாம் படம், தெரு/சாலைகளில் உள்ள மேடு-பள்ளங்களின் அளவை "map " -ஆகக் காட்டுவது!  
அதாவது சாலையின் மேடு பள்ளங்களை அளவிடும் கருவி மூலம் பெருகின்ற
வரைபடம். மூன்று கோடுகள் முறையே, சாலையின் அகலத்தில் மூன்று இடங்களில் உள்ள சமம்-சமமற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன. இன்னும் அகலமான சாலைகளுக்கு நான்கு, ஐந்து என்று சென்சார்களை கூட்டிக் கொள்ளலாம்-அதன் மூலம் அதற்குத் தக்கபடி நான்கு, ஐந்து வரை படங்கள் நமக்குக் கிடைக்கும்.

 

இது போன்று, தரம் பார்ப்பது என்பது "இந்திய-நெடுஞ்சாலைத் துறையில்' சற்றே காணப் படுகிறது!  ஆனால், உள்வட்டச் சாலைகளில் அது பூஜ்ஜியம்!

மேற்படி கருவிகள் செய்வது ஒன்றும் ராக்கெட்  அனுப்பும் செலவு போன்றது அல்ல! விட்டால் நம்ம ஊரில் சேலம்-திருச்சி கல்லூரிகளில் படிக்கும் நம் கிராமப் புற மாணவர்களே இதை விட சிறப்பான கருவியை ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தாண்டாமல், செய்து தந்து விடுவார்கள்! ( ஏற்கனவே பல சிறப்பான கருவிகள் செய்து 'பேடன்ட் ரைட்' உட்பட வாங்கியுள்ளனர் )அது போன்ற கருவியை ஊருக்கு ஒன்று செய்து போட்டு-தரம் கண்காணித்து நமது நாட்டையும்  ஐரோப்பிய நாடு போல நம்மால் செய்ய இயலும்-அரசுக்கு மனம் இருந்தால்!

"அரங்கின்றி வட்டாடியற்றே" என்பது போல, இது போன்ற கருவிகள் இல்லாமல் நம்மூர்  "தெருக்கள்/சாலைகள் - தர-நிர்ணயம் / மற்றும் மீள் பரிசோதனை" சாத்தியம் இல்லை!
மேலும், அப்படிக்கின்றி, சம்பந்தப் பட்ட அதிகாரிகளை தோளில் துண்டு போட்டு பிடித்து வைத்து, "தரம்-பற்றிய" கேள்வியையும் ஆதாரத்தோடு எவரும் கேட்க இயலாது! 

நாம் யோசித்து என்ன ஆகப் போகிறது - நாடு உருப்பட, ஆளும் மகானுபாவர்கள் தான் கொஞ்சம் மனது வைக்கவேண்டும்! 

மகாஜனங்களும், "அப்படி என்ன அவர் தப்புப் பண்ணிட்டார்...மத்தவா பண்ணாத தப்பா...?"என்று சப்பைக் கட்டு கட்டாமல், தவறு செய்யும் அதிகாரிகள், ஒப்பந்தக் காரர்கள் போன்றோரை தண்டிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்! 

குறைந்தது, குற்றம் செய்பவர்களுக்குப்  பரிந்து பேசாமல் வாயைப் பொத்தி வைத்துக் கொண்டு இருந்தாலே போதும்! அது, இந்த நாட்டு வருங்கால சந்ததிகளுக்கு எவ்வளவோ நல்லது!

-மோகன் பால்கி

உருக்குலைந்த, உருப்படாத சாலைகள்-மெத்தன அரசுகள்!


இந்தியாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது! 

அதற்குள் இருக்கும் மாநில-அங்கங்களின் கதி அதோ கதி! குறிப்பாக உள்வட்டச் சாலைகள் பற்றிப் பேச வருகிறேன்! அது ஏன் நமக்கு நல்ல சாலைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லை என்று தெரியவில்லை. நம்மூர் தெருக்கள்/சாலைகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் 'சர்கஸ் காரர் ஓட்டுவதை விட லாவகமாக அடிக்கொரு தரம் வளைந்து நெளிந்து, ஏறி இறங்கி, எகிறி குதித்து, இடுப்பு சுளுக்கி படுக்கையில் படுத்தாலும், "ஐயோ! இது இப்படி இருக்கிறதே இது தகாதே", என்று எவரும் நினைப்பதே இல்லை. வயதானவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு எத்தனை கஷ்டம்? இந்த ஊர் மன்னனாய் இருந்தாலும் அவரது  மனைவி மக்கள் உட்பட இந்த சாலைகளில் தானே எல்லாப் பயணங்களும் போக வேண்டும்! அட! திடீர் நோயாளி ஒருவரை காரில்/ஆட்டோவில் வைத்து அந்தப் பள்ளங்களில் ஏற்றி இறக்கி மருத்துவமனை செல்வதற்குள் அவர் பரலோகம் போய்விடுவாரே !

நானும் பார்க்கிறேன்! எனக்கும் 48 வயது நடக்கிறது. இதே சென்னையில் பிறந்து வளர்பவன் என்ற முறையில் சென்னையின் எல்லா தெருக்கள்-சாலைகளையும்  நான் நன்றாக அறிவேன்! எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆட்சிகள் பல மாறிய போதும் இந்த சிங்கார சென்னையின் அலங்கோல தெருக்கள்-சாலைகளின் காட்சி மட்டும் மாறவே இல்லை! எல்லா ஆட்சிகளும் இதில் ஓட்டு மொத்தமாக தோற்றுப் போயின என்றுதான் நான் சொல்வேன்! 

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கிழவிக்கு மேக்-அப் போடுவது போல் தெருக்களுக்கு இங்கு ஒட்டு-வேலை போட்டு, அதன் மூலம் ஓட்டு வாங்க நினைப்பது. அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் யாராவ்து பொதுக் கூட்டம் பேசி ஓட்டு வாங்க வரும் போது மட்டும்  குப்பை பெருக்கி, தெரு ஓரங்களில் வெள்ளை சுண்ணாம்பு மாவு தூவுவது! ஏற்கனவே நன்றாக இருக்கும் சாலைகள்/தெருக்களை மட்டும் செலக்ட் செய்து கொண்டு காண்ட்ராக்டர்கள் மீண்டும் அங்கேயே மாவரைப்பது! அரசு தரும் தார்-களில் குறைந்தது 40 முதல் 60 %-த்தை வெளி மார்கெட்டில் விற்று விடுவது! கால காலமாக இருக்கின்ற பள்ளம் மேடுகளை சமப்படுத்தாமல் இருந்தமேனிக்கு தோசை சுடுவது போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரம்/அளவு குறைந்த சரக்கை போட்டு ஒப்பேற்றுவது! (அதனால் தானே சென்னையில் குறிப்பிட்ட பல இடங்களில் மழை தூறும் !! காலங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்குகின்றது?) 

தெருக்களை, ஏதேனும் பெயர் சொல்லி அடிக்கடி குத்திக் குடைவது! அந்தச் சமாதிப் பள்ளங்களின் மீது முதலில் தோண்டிய மண்ணையே எடுத்துப் பாதியைத் தூவி விட்டு  மீதியை தெரு முழுதும் விநியோகம் செய்வது! வாகனங்கள் விழுந்து எழுந்து செல்லும் அந்தப் பிறை வடிவ பள்ளங்களில் குப்பைக் கூளங்களும்-மழை நீரும் சேர...கொசுப் பண்ணைகளை இலவசமாக உற்பத்தி செய்வது! தெருவில் பள்ளம் தோண்டியதால் இறைந்து கிடக்கும் மீதி மண் கெட்டி தட்டிப் போய், மேடு மேடாய், திட்டுத் திட்டாய் வருடக் கணக்கில் கிடக்க, முக்கால்வாசி தெருவை யாரும் உபயோகிக்க முடியாமல், ஒற்றையடிப் பாதை போல வளைந்து நெளிந்து இருசக்கர - பல சக்கர வாகனங்கள் 'சர்க்கஸ்" செய்வது சென்னையில் இங்கு கண்கொள்ளாக் காட்சி போங்கள்! இது போல ஒரு தெருவுக்கு பத்து இருபது பள்ளங்களும் அதற்க்குச் சப்பைக் கட்டுகளும், இது விரிந்து விரிந்து  வட்டம்-வார்டு-மாவட்டம் என்று இந்த வியாதி ஒழிக்கவே முடியாத பெரு-நோயாய் போய்விட்டது போங்கள் ! 

நீங்கள் வேண்டுமானால் உங்களை ஒரு மனசாட்சியுள்ள பறவையாய் கற்பனை செய்து கொண்டு, வானத்தில் இருந்து இந்த சென்னை மாநகரைப் பாருங்களேன்! ஒரு அரை நூற்றாண்டுகால சீர்கேடு-அப்படியே கிடக்கிறதே! ஏன்? 

தி-நகரை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்! நார்த் உஸ்மான் ரோடு மேம்பாலம் முடிந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் அதன் இருபுறம் உள்ள கீழ் வழி சாலைகள் இன்னும் சீர்திருத்தம் இன்றி படு-கேவலமாக உள்ளனவே!

கோடிக்கணக்கில் மேம்பாலங்கள் கட்டுவது-ஆனால் சாலைகள்/தெருக்களை வருஷக் கணக்கில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது என்பது என்ன நியாயம்?

அது போக, மேற்படி உஸ்மான் சாலையின் இருபுறத் தெருக்களில் மழைக் காலங்களில், படகு விடும் அளவுக்குத் தண்ணீர் தேங்குவதை நாம் மாற்றவே முடியாதா? அதே போன்று, திருமலைப் பிள்ளை சாலையின் மேற்குப் பகுதி தெருக்களில், குறிப்பாக ஓட்டல் Breez அருகில், பெரிய வாகனங்கள் கூட நின்றுவிடும் அளவுக்கு மழைக்கால ஏரிகள் போன்ற  நிலை தலைமுறையாக தொடர்வதை நாம் மாற்றவே முடியாதா? அதே போல, ஸ்டேர்லிங் ரோடு, வேலு மிலிடரி ஹோட்டல் அருகில், ..........வருடா வருடம் மழைக் காலத்தில் பேருந்து தவிர எந்த வண்டியும் போக முடியாத அளவுக்கு பள்ளம்-வெள்ளம்!

இது போன்ற சீர்கேடுகளை எந்த ஆட்சியும்  கண்டு கொள்வதில்லை-அதன் நிரந்தரத் தீர்வுகள்  பற்றி யோசிப்பதே இல்லை! ஆனால், இந்தியா ஒரு வல்லரசு நாடு -சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறோம் -அணுசக்தி- நானோ தொழில் நுட்பம்- இந்தியப் பொருளாதார வளர்ச்சி- அது இது என்று நாம் இங்கு மார் தட்டி என்ன பிரயோஜனம்? அடிப்படையே சரியின்றி ஆகாயத்தில் கோட்டை கட்டி என்ன பயன்? இங்கே வாழும் எவரும் தனது அழகிய மாளிகையை விட்டு இறங்கி நல்லது-கெட்டதுக்கு ஒரு நாள் தெருவுக்கு வரத்தானே வேண்டும்? ஒரு அரசு தான் நிர்வகிக்கும் தெருக்களை அழகு படுத்தாமல், தனி மனிதன் வைத்திருக்கும் கார்களையும்  மாளிகைகளையும் அழகு படுத்தி என்ன பயன்?  இது, இது வரை வந்த எல்லா அரசுகளுக்கும்  பொருந்தும்-இதில் யாருமே மகாத்மா இல்லை என்பதே என் கருத்து!  நம்மிடம் நல்ல தெருக்களை உருவாக்க, அவற்றைப் பராமரிக்கத் தேவையான அனைத்து வசதிகளும், மனித சக்தியும் நிறையவே உள்ளது. ஆனால், நம்மிடம் இல்லாதது "அழகுணர்ச்சிதான்" என்று தோன்றுகிறது!

இதன் நிரந்தரத் தீர்வு தான் என்ன?

1. தெருக்களை / சாலைகளை சரிவர நிர்வகிக்காத, பொறுப்பற்ற அரசுப் பணியாளர்களைஅதிகாரிகளை, கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும்!

2. அழகாக நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு பரிசுகள்-பதவி உயர்வு-மரியாதை  தர வேண்டும்!

3.  ஓரிடத்தில் ஒரு ரோல்-மாடல் தெரு/சாலை ஒன்றை உருவாக்கி, அதிகாரிகளுக்கு அவ்விடத்தைக் காட்டி 'இது போல' உங்கள் பகுதி இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக ஆணை இட வேண்டும். 

4. தெருவின் இருபுறங்களில், முப்பது அடிக்கு ஒரு இடம் வீதம், ஒரு மின்-இணைப்பு, ஒரு தண்ணீர் குழாய், ஒரு கழிவு நீர் குழாய்,ஒரு தொலைபேசி, ஒரு-பிற இணைப்புக்காக என்று நான்கைந்து கான்க்ரீட் பைப்புகளை சாலை போடும் முன்னரே பதித்து வைக்கவேண்டும்.

5. புதிய இணைப்புகள் தரும்போது சாலைகளில் பள்ளம் போடாமல் 99 % பார்த்துக் கொள்ளவேண்டும். 

6. இணைப்புகள் தருவது, வருடத்தில் சில மாதங்கள் என்று வரையறுக்க வேண்டும். மழைக்காலத்தில் இணைப்புகள் தருவது கூடவே கூடாது. 

7. தவிர்க்க இயலாமல் பள்ளம் போட்டால், ஓரிரு நாளில் அதை மூடி, இருந்த இடம் தெரியாமல், மீண்டும் அதே போல தார் போட்டு சமப் படுத்துவதை சம்பந்தப் பட்ட ஒரு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். எஞ்சிய மண்ணை அன்றைக்கே அப்புறப் படுத்தி, தெருவை பெருக்கி விட வேண்டும்!

8. இப்படி எல்லாம் ஒரு அரசினால் செய்ய முடியாது என்றால், வரி வாங்குவதை நிறுத்திக் கொண்டு, தெருக்களை அவரவர்களே இனி பராமரித்துக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையாக சொல்லி விடலாமே.

முடிந்தவர்கள், தங்கள் வீதிகளுக்கு பழ மரங்கள் நட்டு வளர்த்து,கான்க்ரீட் சாலை போட்டு, தங்க முலாம் பூசி வைத்து மகிழ்வார்களே! தங்களுக்குள் எந்தத் தெருவுக்கு பரிசு என்று விழாக் கோலம் பூணுவார்களே! இப்படி மாறி மாறி வரும் அரசுகள், நானேதான் அந்த அநியாயத்தை செய்வேன் என்று தன்னால் முடியாத வேலைக்கு  மல்லுக்கு  நிற்க வேண்டாமே!

  • அரசும் அரசு அதிகாரிகளும் இது பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்!

  • நமது வருங்கால சந்ததிகள் நல்ல சுகாதாரமான தெருக்களில் விளையாட- நடமாட!
        -மோகன் பால்கி