Translate this blog to any language

வியாழன், 29 ஜூலை, 2021

தெரிந்தவர்கள்" ஒருபோதும் "நண்பர்கள்" ஆக முடியாது!

நீங்கள் தெரிந்தவரா? நண்பரா? 
மனித உறவுகளின் தன்மை நிச்சயிக்கப்படுதல் வேண்டும்.

1. இரத்த சம்பந்தம் உடைய உறவு 

2. திருமண உறவு

3. அத்யந்த நட்பு

4. முன்பின் அறிமுகமற்றவர்கள்

5. புதியவர்கள்

6. தெரிந்தவர்கள் 


என்ற 6 வகை உறவுகள் மட்டுமே ஆகும். அதில் இரத்த சம்பந்தம் உடைய உறவு, திருமண உறவு என்கிற முதல் இரண்டு வகையினர் பற்றி நாம் நன்கு அறிவோம்.

மூன்றாம் வகையான அத்தியந்த நட்பு என்பது சிறுபிராயம் முதற் கொண்டு கொள்கிற உறவு அல்லது ஒத்த கருத்துடைய இருவர் பூணும் "அன்புறவு" ஆகும். அப்படிப்பட்ட அன்பானது இருவர் வீட்டிலும் நடக்கிற எல்லா 'நல்லது 'கெட்டது'களிலும் பங்கு கொண்டு அங்கு ஏற்படும் சுகத்தில் கலந்து துக்கத்தில் அழுகின்ற அளவிற்கு ஆழமானது ஆகும்.

மற்றபடி மீதமுள்ள நான்கு, ஐந்து, ஆறாம் வகையினரின் (4,5,6) இலட்சணம் பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும், அதாவது, "முன்பின் அறிமுகமற்றவர்கள்", நம்முன் தோன்றும்போது அவர்கள் நமக்குப் "புதியவர்கள்"!

அந்தப் புதியவர்கள் ஏதோ 'ஒரு நம்மிடம் ஆக வேண்டிய வேலையின் காரணமாக சிலமுறை நம்மிடம் பேசிச் சிரித்து பழகும் போது "தெரிந்தவர்கள்" ஆகிறார்கள். 

அந்த வேலை அவர்களுக்கு முடிந்ததும் காணாமல் போய் விடுவர். 
மீண்டும் சில காலம் கழித்து அவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றவுடன் திடீரென்று தோன்றி சிரித்துப் பேசுவார்கள். 

அந்த காரியம் முடிந்ததும் மீண்டும் காணாமல் போய்விடுவர். இடையில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் இருவருக்குமே தெரிவதில்லை. இதுவே "தெரிந்தவர்கள்"
என்பதின் இலட்சணமாகும்.

"நண்பர்களுக்கும்" 
"தெரிந்தவர்களுக்கும்" இடையிலான இந்த நுட்பமான வேற்றுமையை நாம் சரியாகப் புரிந்து கொள்ளுதல், செய்யும் தொழில் மற்றும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் ஆகும்!

அத்யந்த நண்பர்கள் 5 பேர் ஒருவனுக்கு இருந்தால் அது உலக அதிசயமே ஆகுமாம்!

தெரிந்தவர்கள் 1000 பேர் ஒருவனுக்கு இருக்கக்கூடும். ஆனால், "தெரிந்தவர்கள்" ஒருபோதும் "நண்பர்கள்" ஆக முடியாது; முடியவே முடியாது!

Dot.

-YozenBalki