Tuesday, March 20, 2012

Can my Tamil-Culture & Morals be managed? கரை-உடையும் நம் தமிழ் கலாசாரம்: மீட்க என்ன வழி?

 
குண்டூஸ்: தாத்தா! நம்ம தமிழ் பேச்சாளர்கள் எல்லாம் கலாசாரம்...கலாச்சாரம்-ங்கறாங்களே. அப்பிடின்னா என்ன தாத்தா?

தாத்தா: கண்ணா...! அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு குணம் இருக்கும் இல்லையா...தட்ப வெப்பம், சூழல் சார்ந்து சில பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உருவாகும் இல்லையா? அதுக்குப் பேரு தான் கலாசாரம்ன்னு சொல்லுவாங்க! 

குண்டூஸ்: புரியல தாத்தா! விளக்கமாத்தான் சொல்லுங்களேன்!

தாத்தா: இப்பப் பாரேன்! காஷ்மீர் ரோஜா இங்க விளையாது..ஐரோப்பிய செர்ரி மரங்களும் இங்கே வளராது! அதே மாதிரிதான் நம்ம ஊர் பொன்னி நெல்லு மேல் நாடுகளில் விளையாது. அதே மாதிரி, ஐரோப்பிய குளிர் காலமும் அதற்க்கு அவங்க அணியும் உடைகளும் பற்றி நமக்குத் தெரியாது. அதே போல் இங்குள்ள சித்திரை வெயிலை வெள்ளையர்களால் தாக்குப் பிடிக்கவும் முடியாது. அந்த வெயிலுக்கு நாம போட்டுக்குற மெல்லிய பருத்தி-குறைந்த அளவான ஆடைகள்  பற்றியும் ....(Contd..)
அவர்களுக்குப் புரியாது!

குண்டூஸ்: நான் ஒன்னு கேட்டா நீங்க ஒன்னு சொல்றீங்க தாத்தா!

தாத்தா: இரு கண்ணா..அங்க தானே வர்றேன்! அதாவது, ஊரின் சூழலுக்கு ஏத்தமாதிரி தான் பழக்க வழக்கங்கள் அமைகின்றன...அது புரியுதா? மனிதர்களின் நிறம், உயரம், உருவ அமைப்பு..அதே போல விலங்குகள், பறவைகள், உணவுப் பயிர்கள், பழங்களின் உருவம், அளவுகள், சுவை உட்பட, அவை சார்ந்திருக்கும் வட்டார வாழ்வியல் சூழலை ஒட்டியே அமைகிறது. அங்கிருந்தே அந்தந்த ஊரின் கலாச்சாரங்கள் பண்பாடுகள் உண்டாகின்றன! 

குண்டூஸ்: அப்ப... நம்ம தமிழ் நாட்டுக்கும் ஒரு கலாசாரம் இருக்கணும் இல்லியா தாத்தா? அது என்ன?
 
தாத்தா: இது கஷ்டமான கேள்வி. வேஷ்டி-சட்டை, புடவை-ரவிக்கை அணிவது, ரெண்டாயிரம் வருஷ கோவில் குளம் சுத்துவது, சிற்பக் கலை, பொங்கல் கொண்டாட்டம், குடும்ப ஒற்றுமை, பெற்றோரை வணங்குதல், பெரியோரை போற்றுதல், விருந்தினரை உபசரிப்பது, வறியோர்க்கு ஈதல், தன்னுயிர் போல மன்னுயிர் நினைப்பது, உழவு-தொழில் மதித்தல், சிலம்பம்-மற்போர் போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபடுதல், இயல் இசை நாடக முத்தமிழ் வளர்த்தல்-ரசித்தல் இவை போன்ற இன்ன பலவும் நமது கலாசாரம் என்று சொல்லலாமே!

குண்டூஸ்:  ரொம்ப சரி! அப்ப நம்ம கலாசாரம் ஒழிஞ்சி போச்சின்னு சொல்லுங்க தாத்தா!

தாத்தா: நீ என்னப்பா சொல்ற? புரியலியே!

குண்டூஸ்: நீங்க மேலே சொன்னது எல்லாத்தையும்...மறுபடியும் யோசிச்சி பாருங்க தாத்தா! உங்களுக்கே நல்லா புரியும்! அப்புறம் ஒன்னு கேக்கிறேன் தாத்தா...அதுக்கு பதில் சொல்லுங்க! 
உங்க காலத்துல நிறைய ஏரிகள் இருந்ததுன்னு சொன்னீங்களே..இப்ப அதெல்லாம் என்ன ஆச்சு?

தாத்தா: அதையெல்லாம் கரைகளை உடைச்சுப் போட்டுட்டு ஊர்கள் ஆக்கிட்டாங்க கண்ணா!

குண்டூஸ்: 'கரை உடைக்கிறதுன்னா' என்ன தாத்தா?

தாத்தா: அதுவா! நீர் தேக்கங்களில் தேங்கும் தண்ணீரை சேர்த்து வைக்க உயரமா ஒரு தடுப்பு மண் அணைப்பு கட்டி இருப்பாங்க! அதுதான் கரைன்னு சொல்லுவாங்க! அதை சில சமூக விரோதிகள் ராத்திரி நேரங்களில் உடைச்சி போட்டுட்டு ஏரித் தண்ணீரை காலி செய்து விட்டு பிளாட் போட்டு விற்று விடுவார்கள்-சில சமயம் அரசாங்கமே அந்த வேலையை செய்யும். அதுக்கு பேருதான் கரை உடைப்பது கண்ணா!

குண்டூஸ்: அப்படி வாங்க வழிக்கு! அப்பன்னா நம்ம கலாச்சாராமும் 
கரை-உடைஞ்சி போச்சின்னு சொல்லலாமா தாத்தா?

தாத்தா: நீ சொல்றது..புரியலியே கண்ணா!

குண்டூஸ்: தாத்தா....! இப்ப நாம உலக ஜன்னலைத் திறந்துட்டோம். கண்ட கண்ட மேல்நாட்டு கலாச்சாரமும் கணினி, இணைய தளம் வழியா வந்து தமிழ் நாட்டுல நிரம்புது. இங்க்லீஷ் தெரிஞ்சவனுக்கு இங்க நாப்பதாயிரம் சம்பளம் -தமிழ் தெரிஞ்சவனுக்கு நாலாயிரம்ன்னுட்டு நிலைமை கேவலமா ஆயிட்டுது. கிராம உழவுத் தொழில் கலாசாரம் மறைஞ்சி, நகர கட்டிடங்களில் கணினியின் கீழ் அமர்ந்து வேலை பார்க்கும் கலாசாரம் வந்து விட்டது. அங்கே தமிழ் பேசுவதை விட இங்க்லீஷ் பேசுவதும், இங்க்லீஷ் வாழ்க்கை வாழ்வதுமான மோகம் அதிகமாகி விட்டது. மேலும், வெள்ளைக்காரன் சம்பளம் கொடுப்பதாலும், அமெரிக்க வாழ்க்கைக்கு அனைவரும் ஏங்குவதாலும் இனி தமிழ் கலாசாரம் பிழைக்க வழியில்லை என்றே தோன்றுகிறது தாத்தா!

தாத்தா: அப்படி சொல்ல முடியாது கண்ணா! எல்லாம் மாறும்...நம்ம தமிழ் கலாசாரம் என்னிக்கும் அழியாது! நம்பிக்கை வைக்கணும் கண்ணா...!

குண்டூஸ்: எப்பிடி தாத்தா? பிளாட் போட்ட இடத்துல எல்லாம் ஏரிகள் மறுபடியும் வரும்ன்னு நம்பச் சொல்றீங்களா? கரை-உடைஞ்ச கலாசாரம் கட்டுக்குள் வரும்ன்னு நம்புறீங்களா? முதல்ல நீங்க திருக்குறள், தினத்தந்தி  படிக்கிறத கொஞ்சம் நிறுத்திட்டு உலக சரித்திரம் படிங்க! அங்க எத்தனை- எத்தனை இனங்கள் மொழிகள் இப்படி "கரை-உடைஞ்சி" அழிஞ்சி போயிருக்குன்னு படிங்க தாத்தா! நம்பிக்கை வேற-எதார்த்தம் வேற! எதார்த்தம் புரிஞ்சாத்தான் இருக்கிறதயாவது காப்பாத்திக்க முடியும்! இல்லன்னா எல்லாமே  அம்பேல்தான் தாத்தா!

-Yozenbalki 

No comments:

Post a Comment

You can give here your comments: