Translate this blog to any language

புதன், 21 மார்ச், 2012

Chennai: Bullock-Cart Roads & Exploding Multitudes: சென்னை: கோச் வண்டி சாலைகள்-விரியும் நெரிசல்!



குண்டூஸ்: என்ன மாமா! வரவர சீக்கிரமா வீட்டிலே இருந்து கிளம்புறீங்க, ரொம்ப லேட்டா வீட்டுக்கு வர்றீங்க..போற போக்கே சரியில்லையே! அக்கா கிட்ட போட்டு கொடுக்கவா? 

மாமா: டேய் குரங்கு குண்டூஸ்! ஏற்கனவே நிலைமை சரியில்ல! நீ வேற எண்ணெய் ஊத்தாதே!
உனக்கு வேண்டியதெல்லாம் அப்பப்ப வாங்கி தர்றேன் இல்ல...என்னைய சொல்லணும்!

குண்டூஸ்: கோச்சிக்காதீங்க மாமா! உங்கள பாத்தா பாவமா இருக்கு! போறப்போ நல்லாத்தான் போறீங்க, ஆனா வரும்போது மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சு மாதிரி வீட்டுக்கு வறீங்களேன்னு வாஞ்சையா கேட்டா உங்களுக்கு அது தப்பாப் படுது!

மாமா: நீ சொல்றது சரிதாண்டா! வர வர இந்த சென்னை போற போக்கே சரியில்லை. முன்னெல்லாம் கால்மணி நேரத்துல போன ஊருக்கு இப்பல்லாம் ஒரு மணி நேரம் தேவைப் படுது. அவ்வளவு மோசமான டிராபிக் நெரிசல்! போலிஸ் காரங்க பாடு அதை விட திண்டாட்டம்! ஊர்ல இருக்கிற புகை-தூசு எல்லாமே அவங்க தான் எட்டுமணி நேரம் சுவாசிக்கிறாங்க! தெருக்களும் இப்ப வர வர மோசமாத்தான் ஆகிகிட்டு வருதே தவிர ஒரு புண்ணாக்கு முன்னேற்றமும் இல்ல. அதான் வீடு வர்றதுக்குள்ள ரொம்ப ரொம்ப சோர்வா ஆயிடுதுடா!

குண்டூஸ்: மாமா!  நீங்க டிராபிக் இல்லாத தெருவுக்குள்ள புகுந்து புகுந்து போக வேண்டியது தானே! எதுக்கு மெயின் ரோடாவே போகணும்? உங்களுக்கு ஷார்ட்-கட் தெரியல?



மாமா: போடா மாங்கா மடையா! அது எனக்குத் தெரியாதா? நாலு தலை முறை சென்னைவாசி நான்...எனக்கே நீ ஐடியா சொல்லித் தர்றியா? நான் போடற 'ஷார்ட்-கட்'..."குறுக்கு-வழிக் கணக்கை" வேற எவனும்....(Contd..)



போட மாட்டானா? இந்த விஷயத்துல சென்னையில எல்லாரும் ஜீனியஸ் கண்ணா! நீ எந்தத் தெருவுக்குள்ள நுழைஞ்சாலும் இங்கத்தான் அம்பு மாதிரி வண்டிங்க பறந்து போய்கிட்டே இருக்குதே!

குண்டூஸ்: அப்ப பேசாம ட்ரெயின்ல போயிடுங்க மாமா! காசு கூட நம்ம ஊரு பஸ்சை விட  குறைச்சல்ன்னு கேள்விபட்டேன்!

மாமா: உனக்கென்ன மறை கிறை கழண்டு போச்சா? நம்ம வீட்டுக்கும் ரயில்வே ஸ்டேஷன்-க்கும் மூணு கிலோ மீட்டர்...அப்புறம் என் ஆபீஸ்-க்கு ஒரு மூணு கிலோ மீட்டர். டெய்லி ஆறு-ஆறு பன்னிரண்டு  கிலோ மீட்டர் நான் நடந்து போனா என் உடம்பு என்னத்துக்கு ஆவறது? 

குண்டூஸ்: நடந்தா நல்லது தானே மாமா? டாக்டர் கூட உங்கள தினமும் நடக்கச் சொல்லி இருக்காங்க இல்ல? உடம்புக்கும் நல்லது-பணமும் உங்களுக்கு மிச்சமாகும் இல்ல?

மாமா: டேய் அறிவாளி! அதெல்லாம் நான் எப்பவோ செஞ்சு பாத்தாச்சி! இப்போ பொறந்த உனக்கே இவ்வளவு தெளிவுன்னா.. எனக்கு அது இருக்காதா? மெட்ராஸ்ல உனக்கு நடந்து போறதுக்குன்னு தனியா ரோடு ஒன்னும் கிடையாது கண்ணா! நடக்குற உன்னை இடிச்சி தள்ள ஆயிரம் வண்டி அங்க பறந்துகிட்டு இருக்கு. அதுமட்டும் இல்ல...அப்படியே நீ நடந்தாலும் ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடக்கிறதுக்குள்ள ரெண்டு கிலோ Carbon monoxide கார்பன் மோனக்சிட் உன் நுரையீரலில் சேர்ந்துடும். அவ்வளவு தூசு-மாசு, சென்னையில இருக்கு!



குண்டூஸ்: இதுக்கு வழியே இல்லியா மாமா? பெங்களூர், மும்பை, அய்தராபாத், திருவனந்தபுரம் இதெல்லாம் கூட அப்பிடியா இருக்கு? நம்ம மார்கெட்டிங் ராஜி மாமா அந்த ஊரெல்லாம் இத விட நல்லா இருக்குன்னு சொல்றாரே!

மாமா: அந்த சோகத்த ஞாபகப் படுத்தாதேடா! ரெண்டு மாசம் முன்னாடி கூட பெங்களூர், அய்தராபாத் அந்த ரெண்டு ஊருக்கும் ஒரு வேலை விஷயமா  போய் இருந்தேன்! போயிட்டுத் திரும்பி வந்த ஒரு வாரத்துக்கு நான் சென்னையில இருக்கற மாதிரி இல்ல, ஏதோ ஒரு குப்பை மேட்டுல குடும்பம் நடத்துன மாதிரியே..... (வடிவேலு சொல்ற மாதிரி) ஒரு '....பீலிங்' இருந்துச்சி! 

குண்டூஸ்:சென்னையை விட  அந்த ஊருங்க "அவ்வ்ளோவ் .... நல்லாவா இருக்க்கு ..."? சாரி மாமா! எனக்கும் வடிவேலு ஸ்டைல் வந்துடுச்சி! மேலே சொல்லுங்க!

மாமா: வரும் வரும்! அடப் போடா! அய்தராபாத்-ல மெயின் ரோட்டில ஒரு சின்ன ஜீப் மாதிரி ஒன்னு, அதுல பஞ்சு உருண்டை சுத்துது, அதை வச்சு தூசு இல்லாம விடியக் காலைல தினமும் பெருக்குறான். நாலுவழிப் பாதை அங்க! பெங்களூர்-ல என்னடான்னா தெருத் தெருவுக்கு ஒரு அழகான  பூங்கா-தெருவோர மரங்கள், செடி கொடிகள்ன்னுட்டு தெனமும் அழகு படுத்திக்கிட்டே இருக்கான்! மொழி தெரிஞ்சா அந்த மாதிரி ஊர்கள்ல போயி நாம செட்டில் ஆயிடலாம் போல ஏக்கமா இருக்கு! நம்ம ஊரு என்னைக்கும் அந்த மாதிரி உருப்படாதுடா! அதான் மாறி மாறி வந்த நிறைய கவர்ன்மெண்ட நாம பாத்துட்டமே! 'குடிமகன்கள்' தமிழ் நாட்டுக்கு கொடுக்கிற பணத்துல அமெரிக்காவுக்கே ரோடு போடலாம். ஒரு ரோடு போட்டா இங்கதான் ரெண்டு மாசம் கூட தாங்க மாட்டேங்குதே..நீதித் துறையும் அதை கேக்கறது இல்ல! எங்க பாரு குண்டும் குழியுமா...இங்க வீணா மலைகளை உடைச்சி மண்ணுக்குள்ள தள்ளியதுதான் மிச்சம்! வாரம் ஒரு ரோடு போட்டு என்னடா புண்ணியம்?

குண்டூஸ்: சென்னையிலும் தான் அவங்களால முடிஞ்சத பண்ணுறாங்க இல்ல மாமா? எதுக்கு குறை சொல்லுறீங்க? உங்களுக்கு எதையாவது குறை சொல்லணும்...!

மாமா: கிழிச்சாங்க! வெள்ளக் காரன் போட்ட அதே ரோடு- அதே தெருக்கள்! அன்னைக்கி கோச் வண்டி, மாட்டு வண்டியில சில நூறு பேர் மட்டும் போயிகிட்டு இருந்தாங்க! அதே வழியில இன்னக்கி இலட்சக்கணக்கான வாகனங்கள் போகவேண்டிய தலை எழுத்து! முக்கிய சாலைகளை நான்கு/ஆறு வழிப் பாதைகள் இந்நேரம் ஆக்கி இருக்கணும். அப்படி இல்லையா.. உயரம் போகும் கட்டிடங்களை தடை செய்யணும்! இன்னைக்கித்தான் ஒரு அடுக்குமாடியில ஒரு கிராமமே குடி இருக்கே!

குண்டூஸ்: அப்பன்னா போகப் போக சென்னை நகரம்-நரகம்ன்னு சொல்லுங்க மாமா!

மாமா: ஒரு திருத்தம்! இது பொது மக்களுக்கு மட்டும் தான் நரகம்! ஆளும் அமைச்சர்களுக்கு இது சொர்க்கம்!அவர்கள் போகிற வழியை முன்கூட்டியே தீர்மானிக்க, துடைக்க பெருக்க, தற்காலிக ரோடு போட, ப்ளீச்சிங் மாவு தட்ட, வழியெல்லாம் நின்னு சல்யூட் வைக்க என்று ஆட்கள் இருக்கும் போது அவர்களுக்கு மக்களை பற்றி என்ன கவலை?

குண்டூஸ்: அப்பிடியே போயிடுமா காலம்! அவங்களும் ஒருநாள் பதவிய விட்டு ரோட்டுக்கு வந்து தானே ஆகணும்! சோழப் பரம்பரை, டெல்லி பாதுஷாக்கள் பரம்பரை எல்லாம் என்ன ஆச்சி? முதுமை, புது ஆட்சி இதெல்லாம் உலகத்துல சகஜம்தானே மாமா! அதில்லாமல், அவர்களுடைய பெண்டு பிள்ளைகளும் நாளைக்கு இதே ரோட்டுல ஊர் பேர் தெரியாம போக-வர வேண்டியது வரும்தானே?  அதை யோசிச்சி உடனுக்குடன் மக்களுக்கு நல்லது பண்ணலாமில்ல? சீனாவுல என்னடான்னா (click here) பதினஞ்சு நாளில முப்பது மாடிய கட்டி முடிச்சுடறான்! இங்க மட்டும்தான் எல்லாமே நூற்றாண்டு கணக்கில் ஆமையாட்டமா நகருது! இப்பிடி வீணா காலம் கடத்துவது எதுக்கு மாமா? 

மாமா: எவனுக்குத் தெரியும்...அவங்க மனசுல இருப்பது! மக்களுக்குப் பண்ணறதை விட வேற பெரிய வேலை ஏதாவது அவங்களுக்கு இருக்குதோ என்னமோ? அந்த ஆண்டவனுக்கே அது வெளிச்சம்! நம்ம காலத்துல ஒரு நல்ல சென்னையை பாக்க முடியாது போலிருக்கு!
சரி விடு! அதைப் பத்தி பேசுனா நமக்கு இருக்குற நிம்மதியும் மொத்தமா போயிடும்...இந்த 'இடியட்-பாக்சை' இப்பத்திக்கு போடு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: