Translate this blog to any language

வெள்ளி, 30 மார்ச், 2012

100 Ways to Raise Intelligent, Kind Children: உங்கள் குழந்தைகள் மேன்மையாய் வளர 100 வழிகள்!!



குண்டூஸ்: அங்கிள்! உங்க வீட்டு பின் பக்கம் இருக்கிற தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு. நான் உள்ள வந்து கொஞ்சம் சுத்திப் பாக்கலாமா?

பத்ரி: டேய் குண்டூஸ்! என்ன இளக்காரமா? என் வீட்டுப் பின்னாடி ஒரு ரெண்டடி இடம் இருக்கு. அதுல ஏதோ கொஞ்சம் செடி கொடி வளக்கிறோம். அது போயி உனக்குத் தோட்டமா? கொழுப்புதானே?

குண்டூஸ்: சாரி அங்கிள்! நெஜமாவே அது தோட்டம் மாதிரியே இருக்கு. அதுவும் அந்த பட்டு-ரோஸ்...வந்து....!

பத்ரி: சரி சரி! நீ எங்க வர்றேன்னு எனக்குத் தெரியுது! உனக்கு மறுபடியும் ஒரு பட்டு-ரோஸ் செடி வேணும்..அதக் கொண்டுபோய் உங்க வீட்டுத் தொட்டியிலே நட்டுவச்சிட்டு நாலு நாலு கழிச்சி காய்ஞ்சி போச்சின்னுட்டு திரும்ப வந்து...உங்க தோட்டம் நல்லா இருக்குன்னு எனக்கு ஐஸ் வைப்பே! உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?

குண்டூஸ்: அப்படி இல்லை அங்கிள்... நானும் என்னென்னமோ பண்ணி பாக்கிறேன்...எனக்கு மட்டும் வளர மாட்டேங்குது அங்கிள்! செம்மண்ணு, உரம், காத்து, தண்ணி, சூரிய வெளிச்சம் இப்படி எல்லாமே கவனமா பாத்தும் ஏன் வளர மாட்டேங்குதுன்னு தெரியல்ல. நான் நினைக்கிறேன்...தொட்டியில வளராதுன்னு...உங்கள மாதிரி பூமியில வளர வைக்கவும் இடம் இல்லியே..?

பத்ரி: அடேய்...குரங்கு குண்டூஸ்! ஏதோ நட்டோமா...அதுக்கு எல்லாம் தந்தோமா பாதுகாப்பு பன்னோமான்னுட்டு இல்லாம நீதான் அது பக்கத்துலேயே இருவத்து நாலு மணி நேரமும் நின்னுகிட்டு "வேவு" பாத்தபடியே இருக்கியே...அப்புறம் எப்படி செடி வளந்து பூ பூக்கும்? அதுல வேற ஒரு நாள் நீ பொறுமை இல்லாம செடி வேர் பிடிச்சி இருக்கான்னு மண்ணை தோண்டி பாத்தியாமே! எனக்கு தகவல் வந்துது. போடா முட்டாள்!

குண்டூஸ்: திட்டாதீங்க மாமா! நீங்கதானே எனக்கு மானசீக குரு...உங்க கிட்டத்தானே அத எல்லாமே கத்துக்கிட்டேன்!

பத்ரி: டேய் என்ன உளர்ற?

குண்டூஸ்: ஆமா மாமா! உங்க ரெண்டு குழந்தைகளையும் நீங்க அப்படித்தானே.....(Contd..)



ரோபோட் மாதிரி வளக்கறீங்க! நின்னா அட்வைஸ் உட்காந்தா அட்வைஸ் விளையாடினா அட்வைஸ் படிச்சா அட்வைஸ்..ஸ்க்கூல்ல அட்வைஸ், கடைல அட்வைஸ், யார்னா விருந்தாளிங்க வந்தா அவங்க எதிர்ல அட்வைஸ் இப்படி இருவத்து நாலு மணிநேர அட்வைஸ்-மழை பொழியிறீங்க..!

பத்ரி: அதுல என்னடா தப்பு! உங்கப்பா மாதிரி இருக்கச் சொல்றியா...?

குண்டூஸ்: அட்வைஸ் பண்ணுங்க மாமா...அது தப்பு இல்ல! ஆனா அட்வைஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்கீங்க பாருங்க...அது தான் தப்பு! சாப்பாட்டுல உப்பு வேண்டாம்ன்னு யாரு சொன்னாங்க...உப்பையே சாப்பாடுன்னு ஆக்கிடாதீங்கன்னு தானே நாங்க கேக்கிறோம்! அட்வைஸ் உப்பு மாதிரி அளவா இருக்கட்டும்! பாருங்க... என் கூட அவன் விளையாடியே ரெண்டு மாசம் ஆச்சி. அப்பிடியும் ஒன்னும் பிரமாதமா மார்க்கு எடுக்கறது இல்லியே மாமா!

பத்ரி: என்னடா கிண்டலா? முகரைய பேத்துப்புடுவேன்!

குண்டூஸ்: கோவிச்சிக்காதீங்க மாமா! என்னைய போயி பட்டு-ரோஸாவ வேவு பாக்குற குரங்குன்னு  
சொன்னீங்க இல்ல...நீங்களும் அதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்...உங்களுக்கு அதுக்குள்ள கோவம் வருது!

பத்ரி: நீ போயி உன் வேலையைப் பாரு! பெருசா பெரிய பேச்செல்லாம் பேச வந்துட்டான்...குரங்கு! அது வேற....இது வேற!  

குண்டூஸ்: என்ன அது வேற...இது வேற? அதுதான் இது...இதுதான் அது மாமா! 
சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நீங்களும் அக்காவும், பாவம் அந்த சுமா-தேஜாவுக்கு டன்-டன்னா அட்வைஸ் பண்ணறீங்க! அப்புறம் நீங்க அட்வைஸ் பண்ணிட்டு சும்மாவா இருப்பீங்க? ரெண்டு பேருமா சேந்துகிட்டு நீங்க சொன்ன மாதிரி, எச்சில் பண்ணாம அவங்க தண்ணி குடிக்கிறாங்களா, தினமும் அஞ்சேகால் மணிக்கு டான்னு படிக்க உட்கார்றாங்களா, வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு 'அபி-வந்தனம்' பண்றாங்களா, சோப்பு போட்டு கை கழுவுறாங்களா, எடுத்த இடத்துல பொருள வைக்கிறாங்களான்னுட்டு "வேவு" பாக்கிறது இல்லியா-அதனாலேயே ரெண்டு குழந்தைகளுக்கும் ஒரு குற்ற உணர்ச்சியை நீங்க அவங்க மனசுக்குள்ள வெதைக்கறது இல்லியா?

பத்ரி: எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிக் குடுத்தா அது தப்பா? போடா லூசு..!

குண்டூஸ்: அப்புறம் அவங்க எப்போத்தான் சுயமா கத்துக்குவாங்க? உங்களுக்குத் தெரிஞ்ச யானையைப் பத்தியே  நீங்க வள வளன்னு பேசிகிட்டு இருந்தா...நிஜமான யானையை அவங்க எப்போ கண்ணுல பாத்து தெரிஞ்சிக்குவாங்க?
ஒரு மரத்தோட பழம் மண்ணுல விழுது. அத்தோட மரத்தோட வேலை முடிஞ்சி போச்சி. மண்ணுல விழுந்த பழத்துக்கு தானே ஊடுருவி வேர் பிடித்து செடியா மாறத் தெரியும்! காட்டுல இருக்கிற எல்லா மரத்துக்கும் யாரும் 'வேர்-பாய' கத்துக் கொடுக்கல மாமா! அதுவே தண்ணி இருக்கிற இடத்தை தானே கண்டு பிடிச்சி போய்கிட்டே இருக்கு. அதோட கிளைகள் இப்போ மண்ணுக்கு மேல ஆகாயம் தொடுது! அதோட சல்லி வேர்கள் கிட்ட யாரும் போயி படுத்துகிட்டு இப்பிடி போ-அப்பிடி போன்னு 'டைரக்சன்' பண்ண தேவையே இல்லியே!

பத்ரி: அப்போ...என் அனுபவம் பத்தி நான் என் கொழந்தைகளுக்குச் சொல்லக் கூடாதா? போடா போ...!

குண்டூஸ்: அப்படி என்ன ஆகாய அனுபவம் உங்களுக்கு வந்து விட்டதாம்..? ஒரு இருபது நிமிஷம் முன்னாடி போன ரயில்ல என் ப்ரெண்டு ஒருத்தன் டெல்லி போனான்...நான் பின்னாடியே வேற ஒரு ரயில்ல அங்கே போய் சேந்துட்டேன்!
அதனாலேயே என் ப்ரெண்டு என்னமோ டெல்லி பாதுஷா ஆயிடுவான்; நான் மட்டும் பாழாய்ப் போயிடுவேனா மாமா? 


பல கோடி வருஷ DNA கதைகள் உங்க குழந்தைங்க உடம்புல இருக்கு. அதுல உங்க இருபது வருஷக் கதைய மட்டும் அனுபவம்ன்னு பெருசா பேசி என்ன லாபம்? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெறும் வார்த்தையால தர முயற்சி பண்ணி என்ன புண்ணியம்-அன்பையே தராமல்..? 
வெறும் Ego தான் அது மாமா! வேற ஒரு மண்ணும் இல்ல! 

பத்ரி: அப்போ...நான் ஈகோ புடிச்சவனா..? அட..ராஸ்கல்...உன்னை இன்னிக்கி உதைக்காம விடமாட்டேன்! 

(பத்ரி அங்கிள் குண்டூசை கோபமாய் துரத்த, குண்டூஸ் சிரித்துக் கொண்டே சிட்டாய்ப் பறக்கிறான்....) 
_________________________________________________
இந்த வலைத் தளத்துக்கு வந்து முழுவதையும் படித்துவிட்டு என் நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து, "எங்கே அந்த குழந்தைகளை வளர்க்கும் 100 வழிகள் என்று கேட்டார்! நான் சிரித்துக் கொண்டே சொன்னேன், "குழந்தைகளை நான் அதில் சொன்ன நூறு வழிகளில் கெடுக்காமல் இருந்தாலே போதுமே" என்றேன்! அதையே உங்களுக்கும் பதிலாய் எடுத்துக் கொள்ளுங்கள்!
_________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: