Translate this blog to any language

திங்கள், 10 நவம்பர், 2008

தேசம் செழிப்பாயிற்று!


அது மிகவும் குறுகலான சந்து

முதல் நாள் !

இரண்டு ஆணவக் காரர்கள்
எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டனர்.
அங்கே
கடும் சண்டை உருவாயிற்று!
சாம்ராஜ்யங்கள் அழிந்தன!

இரண்டாம் நாள்!

ஒரு ஆணவக் காரனும், மற்றொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
அங்கே
வெறும் சலசலப்பு உண்டாயிற்று!
நாட்டில் நல்லதும் நடக்கவில்லை-
கெட்டதும் நடக்கவில்லை!


மூன்றாம் நாள்!

ஒரு நல்லவனும் இன்னொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
'குற்றம் தன்னுடையதே' என்று
இருவரும்
ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டு
மன்றாடினர்!
அங்கே
ஒரு உன்னத நட்பு உருவாயிற்று;
அவர்களது தேசம் செழிப்பாயிற்று!

-மோகன் பால்கி

நான் இயற்கையின் கூறு!



நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை
இயற்கையின் அடையாளம்!

ஆதியந்தமற்ற

இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி

செவ்வாய், 4 நவம்பர், 2008

கூடார அடிமைகள்!



"பகுத்து அறியாத அறிவு" என்பது

இன்னும் பயன்படுத்தாத

ஒரு வெறும் கருவியே ஆகும்!

எந்த ஒரு மனிதனும் பொருள்களும்

ஆராய்ச்சிக்கு உட்பட்டைவையே!

வெற்று நம்பிக்கைகளும்

வெறும் மூடக் கொள்கைகளும்

எவரையும் முன்னேற்றுவது இல்லை!

தன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட

சராசரி மக்கள்தான்

ஒரு சாதாரண மனிதனை

கடவுள் தன்மை கொண்டதொரு

பெரும் மகானாக சித்தரிக்க

பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள் !

காரணம் யாதெனில் ,

அது மறைமுகமாக

தனக்கே நன்மை செய்து கொள்வதற்கான

ஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் !

அதாவது,

'இன்ன சாமியாரின் சீடன் நான்'

என்று பறை சாற்றுவதன் மூலம்

எதுவும் செய்யாமலேயே

ஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்

அங்கு மறைந்து கிடக்கிறது!

மேலும்,

கூட்டம் அல்லது கூடாரம் என்பது

நல்லதொரு பொழுது போக்கையும்

ஒரு வித

பாதுகாப்பு உணர்ச்சியையும் தருவதனால்

மனிதர்கள்

தன்விருப்பத்துடனேயே

இதுபோன்ற

"பொய்மை கூடாரங்களைத்"

தேடியலைந்து நிரந்தரமான

அடிமையாகி விடுகிறார்கள் !


உண்மையோவெனில்,

வெட்டவெளியில்

ஒரு

"உண்மை-தேடியின்" வரவுக்காய்

தன்னந்தனியே அது

பொறுமையாய்க்

காத்திருக்கிறது!

-மோகன் பால்கி

புதன், 29 அக்டோபர், 2008

காலமற்ற காலம் - அன்பில் உணர்வது!

நீள அகல உயரம் முப்பரிமாணம்; அறிவில் காண்பது; உலகமாவது அளவைக்குட்பட்டது! காலமற்ற காலம் நான்காம் பரிணாமம்; அன்பில் உணர்வது; தியானமாவது அளவு கடந்தது! - யோஜென் பால்கி

🌸☘️🌹

குறை காணும் கண்கள்

(இந்த கவிதை எப்படியோ கைபட்டு போய்விட்டது! நினைவில் இருந்து மீண்டும் எழுதுகிறேன்)

ஓயாமல் நம்மை ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கிறோம்!

உனது கண்ணில் நானும் எனது கண்ணில் நீயுமாய் தென்படும் குறைகள்!

அட! குறை என்பது தான் என்ன?
நீ என்னிடம் காணும் குறைகள் பிறர் பார்வையில் நிறைகளாய் உணரப்படும்; உனதும் அவ்வாறே!

உண்மையில், எனது குறைகள் என்பன ஒரு பார்வைக் கோண மாறுபாட்டில் உட்குவிந்த நிறைகளே எனலாமே!

YozenBalki 

எனது குழந்தைக்கு தியானம் கற்பிக்கலாமா ?

அவர்கள் எப்போதுமே தியானத்தில் தானே இருக்கிறார்கள்நாம்தான் அவர்களுக்குள் பிரிவினைகளை கற்பித்து இருக்கிறோம். நாடு, மதம், ஜாதி, மொழி, உயர்வு, தாழ்வு இவற்றை போதித்து அவர்களது தியானத்தை கெடுத்ததே நாம்தான்! ஆபாசப் படங்கள் எடுத்து திரைப்படம், தொலைக்காட்சி, இன்டர்நெட் வழியாக உலகை கெடுப்பது நமது குழந்தைகள் கிடையாதே! அதுவுமன்றி, வன்முறைகளை ஏதோ ஒரு கொள்கையின் பேரால் தூண்டிவிடுவது, செயற்கை பஞ்சம் உருவாக்குவது, காடு மலைகளை அழிப்பது இவை யாவற்றையும் பெரியவர்களான நாமே செய்து வருகிறோம்! குழந்தைகளின் கண்களை பாருங்களேன்! அங்கே ஒரு புத்தர், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், ஸ்ரீ கிருஷ்ணரின் அமைதியை உணர்வீர்கள். குழந்தைகளிடம் நாம்தான் தியானம் கற்றுக் கொள்ளவேண்டும்! மாறாக

தேங்கிய குட்டை ஆகாய கங்கைக்கு சுத்த நீர் பற்றிக் கற்பிக்கக்கூடாது. 

குழந்தைகளிடம் அன்பாயிருங்கள், ஆதரவாய்ப் பேசுங்கள்! அதுவே குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவி

வெறும் அறிவு புகட்டுதல் என்பது உயிரற்ற பொம்மையை சிங்காரிப்பது போன்ற அபத்தம் ஆகும்! 

  -யோஜென் பால்கி


இரு சும்மாய் இரு!

பொருளுலகம் விடுதற்கு ஒன்றுமிலை கைவிலங்கு அருளுலகம் அடைதற்கு விடுதல்ஒன்றே அகந்தை இருப்பதெலாம் இருந்திருக்கும் அதுவேநீ அமரன்நீ வெறும்பேச்சு விட்டுவிடு இருசும்மாய் இரு! இடப்பக்கம் அலையூசல் வலப்பக்கம் விரைவுபெறும் நலம்நிற்க பெருபொருளே தீமைகளும் கொணர்ந்துவரும் மதகளிறு அங்குசத்தால் வசமாதல் போலும்மே மூச்சுநெறி சுவாசத்தால் அலையாது நிற்குமனம்! - யோஜென் பால்கி

பெருஞானம் இதுமுக்தி!

மனமென்ற ஒன்றில்லை மனமே அக்து தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்! உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ? துண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி மண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை! உறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும் தருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்! நகமின்றி விரல்வாழும் யாக்கை போலும் விரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்! இருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும் பெருங்குழுக்கள் கூடுவதை கூட்டம் என்பர்! மனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம் எண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம் பிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம் பொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே நீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும் வேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும் அவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று ஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று! மாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய் காயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம் வெறுமையென அறிகில்லாய் மனமே நீயே! பெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே! 
  - YozenBalki