Translate this blog to any language

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கண்ணை மூடிக் கொண்டு மேல் நாட்டவரை பார்த்து காப்பியடிக்கும் இந்தியர்கள் !!

எனது நண்பர், நடிகர் அடடே மனோகர் ( முரளி) அவர்கள் 
மேற்படி எனது  "நம் முன்னோர்களின் கட்டிடக் கலை" எனும் வலைத்தளத்தைப் பார்த்து விட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  அவரது உள்ளத்து உணர்வையும் நான் இங்கே பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். 

  

" நண்பரே:

நம் முன்னோர்களின் கட்டிடக் கலை பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை. 
ஆம்....அவர்கள் வாழ வீடு கட்டினார்கள்;நாம்
இருக்க கட்டுகிறோம்.  எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு மேல் நாட்டவரை பார்த்து காப்பியடிக்கும் மனப்பான்மைதான்....
அவர்கள் நாட்டு சீதோஷ்ண
நிலைக்கு ஏற்றாற் போல அவர்கள் கட்டிக்  கொள்கிறார்கள்..நல்ல வேளை
எஸ்கிமோக்களைப் பார்த்து காப்பியடிக்காமல் விட்டோமே!

அப்படியேதான் சாப்பாடு விஷயத்திலும்.....மருத்துவர்கள் நெய் கூடாது எண்ணை கூடாது என்பதெல்லாமும் தவறே.
 நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு அளவோடு நெய், எண்ணை எல்லாம் சேர்த்துக் கொண்டே
ஆக வேண்டும்.

இப்படித்தான், முன்பு தமிழ்வாணன் ('கல்கண்டு') எண்ணைய் தேய்த்துக்
குளிப்பதை கிண்டல் செய்திருந்தார்....எல்லா டாக்டர்களும் கூட அதைத்
தவிர்க்க வேண்டுமென்று இப்போதும் சொல்லி வருகின்றனர்.  ஏனென்றால்
நம் தோல் ஒரு one way traffic க்காம்; அதனால் வியர்வையை வெளியே தள்ள முடியுமே தவிர எண்ணையை உள் வாங்கிக் கொள்ளாதாம்.  அதுவும் முற்றிலும் தவறு.    எப்படி இதை அழுந்தந்தத் திருத்தமாக சொல்கிறேனென்றால் எண்ணை தேய்த்து குளித்த பின் நான் அனுபவித்த சுகமும் தேய்க்காமல் நான் அனுபவித்த சோகமும் தான்.  நம் நாட்டுக்கு அது நிச்சயம் தேவை.  பிறந்த குழந்தைக்கு எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டுவதும்
சுத்தமாய் நின்றுவிட்டது.  அது மிகவும் தவறு.  எல்லாம் அரைகுறை படிப்பால் வந்த வினைதான்.

இப்படியேதான் நாம் உடை உடுத்துவதும்...பருத்தி ஆடைதான் நமக்கு
தோதுபடும்..  ஆனால்.....இனி ஏது சொல்லியும் பயனில்லை... ஆடையில்லாத ஊர்;  நாமும் நிர்வாணமாயிருப்போம்....

முடிந்தால் என் வீட்டிற்கு ஒரு தடவை வந்து போங்கள்...110 வருடங்களுக்கு முன் கட்டியது....நாட்டு-ஓடு வீடு.....களி மண்+காரை சுவர்...12 அடி உயர
கூரை...பின்னால் பெரிய தோட்டம் (ஆனால் என் தகப்பனாருக்குப் பின் 
அது தோட்டமாயில்லை...சும்மா புதர் மண்டி கிடக்கும் ஒரு திறந்த வெளி..
மத்தியானம் 4 மணிக்கு மேல் நல்ல இதமான காற்று.) வீட்டுக்குள் எப்போதும் குறைந்தது 4 டிகிரியாவது வெளியை விட உஷ்ணம் குறைந்தேயிருக்கும்..
கீழே தட்டு ஓடு...,மேலே ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப் பட்ட நாட்டு ஓடு...
உஷ்ணத்தை வாங்கும் வேகத்திலேயே திருப்பியனுப்பிவிடும்...களி மண்+காரை சுவர்களும் அவ்வாறே.....ஒரேயொரு குறை...இரண்டு பக்கமும் இடைவெளி யில்லாமல் வீடுகள்...சன்னல் வசதி சிற்சில அறைகளில் போதாது...மேலும் அந்த நாட்டு ஓடுகளை சரியாய் பழுது பார்த்து அடுக்க
இப்போது ஆட்களே கிடைப்பதில்லை....(மழை காலத்தில் சிறிது கஷ்டம்தான்
சென்னை மழையாதலால் சமாளிக்கிறோம்.)

நன்றி; வணக்கம்.

அன்பன், முரளி. "
___________________________________________________
முரளியின் மேற்படி கருத்துக்களில் நூறு சதவிகிதம் உடன்பாடு 
எனக்கு உண்டு!
இதனைப் படிக்கும் உங்களுக்கும் அப்படி இருக்கும் என்று நம்புகிறேன்!

திரு. முரளி அவர்களுக்கு - நன்றி!

-மோகன் பால்கி 

புதன், 7 ஏப்ரல், 2010

நம் முன்னோர்களின் கட்டிடக் கலை ! (Our forgotton past)

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது.​ முன்பெல்லாம் சில ஊர்களில் மட்டுமே வெயில் அதிகம் என்று பயந்த காலம் மாறி,​​ இப்போது எல்லா ஊர்களிலும் ஏறக்குறைய 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.​ கோடை வெயிலைவிடக் கொடுமை பகல்நேர மின்வெட்டு.​ அலுவலகம்,​​ வீடு எங்கே என்றாலும் உட்கார முடிவதில்லை.​ உடலும் சேர்ந்து கொதிக்கிற வேளையில்தான் நம் முன்னோர்களின் கட்டடக் கலை நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தின் கோயில்கள்,​​ அரண்மனைகள்,​​ பழமைவாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் இந்தியச் சுற்றுச்சூழல்,​​ தட்பவெப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு கட்டப்பட்டவை.​

பத்மநாபபுரம் அரண்மனை இன்றளவும் பொறியாளர்கள் சென்று பார்த்து வியக்கும் ஒரு கட்டடமாக இருந்து வருகிறது.​ காரணம்,​​ அந்த அரண்மனைக்குள் எப்போதும்,​​ எந்தப் பருவ காலத்திலும் தட்பவெப்பம் இதமாக இருப்பதால்தான்.​ திருமலை நாயக்கர் மகாலும் அப்படிப்பட்டதே.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட எந்தவொரு அலுவலகம் அல்லது வீட்டுக்குச் சென்றால்கூட,​​ வெளியே எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும்,​​ கட்டடத்துக்குள் ஒருவிதமான குளுமை எப்போதும் இருக்கும்.​ கூரையிலிருந்து 20 அடி நீளக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறிகள் சுழலாத போதும் இந்தக் குளுமை நீடிக்கவே செய்யும்.​ காரணம்,​​ அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அந்த அளவுக்கு உயரமாகவும்,​​ ஜன்னல்கள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தது.​

ஆனால் இன்றைய பொறியாளர்கள்,​​ வெளிநாடுகளில் உள்ள கட்டடங்களை அப்படியே ​ காப்பியடித்து இங்கு கட்டுகிறார்கள்.

பத்து ஆண்டுகள் முன்புவரை குடிசைகள் கட்டுவோர்,​​ ஓலையால் கூரை வேய்ந்து,​​ சுற்றுச் சுவரை மண்ணால் கட்டினார்கள்.​ அத்தகைய வீடுகள் மழையிலும்,​​ வெயிலிலும் குளுமையாகவே இருந்தன.​ இப்போது,​​ அதே அளவில்,​​ தாட்கோ நிதியுதவியுடன் கட்டப்படும் ஆதிதிராவிடர் நலக் குடியிருப்புகளில் பகல்நேரத்தில் வேறு வழியின்றி இருந்தாக வேண்டும்.​ இரவில் கான்கிரீட் வெப்பத்தைக் கக்கும்போது,​​ இந்த ஏழைகள்,​​ வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.​

கிராமங்களிலாவது வெளியே வாசலில்,​​ திண்ணையில் படுத்து உறங்க முடிகிறது.​
நகரத்தில் வசிக்கும் மக்கள் திருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே உடல் வெம்பிக் கிடக்க வேண்டியுள்ளது.​
இவ்வாறு உடல் வெம்புதல் காரணமாக,​​ நகர்வாழ் மக்களைப் பாலுணர்வு ​ சிக்கல்களில் கொண்டு சேர்க்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.​ ​

பழைய காலத்துக் கட்டடங்களில் பெரும்பாலானவை கருங்கற்களால் கட்டப்பட்டவை.​ கருங்கற்கள் வெயில் சூட்டை உள்வாங்கி,​​ அதே திசையில் வெளியேற்றிவிடும்.​ கட்டடத்துக்குள் இருப்பவர்களுக்கு வெயில் தெரியாது.​ 

ஆனால்,​​ இன்றைய கான்கிரீட் கட்டடங்கள்,​​ வெப்பத்தை வாங்கி வீட்டுக்குள் பரவச் செய்கின்றன.​ அதைத் தணிக்க மின்விசிறி,​​ வசதியிருப்பின் ஏர்-கண்டிஷன் ஆகியவை தேவையாக இருக்கிறது.​ இதனால் மின்சாரத் தேவையும் கூடுகிறது.​ ​

தற்போது கிரீன் பில்டிங் என்ற கருத்தாக்கம் பரவலாகி வருகிறது.​ இதன் நோக்கம் மின்சாரம் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டடங்களை வடிவமைப்பதுதான்.​ சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டடங்களை உருவாக்குவதுதான் இதன் அடிப்படைக் ​ கருத்து.​ கட்டடத்தைச் சுற்றி மரங்களை வளர்த்துவிட்டால்,​​ அதன் மூலம் பசுமைச் சூழலை ஏற்படுத்தலாமே தவிர,​​ எரிசக்தி இல்லாத கட்டடமாக அதை மாற்ற முடியாது.​ ​

மின்சாரம் மிகக் குறைவாகத் தேவைப்படும் வீடுகள்,​​ பங்களாக்கள்,​​ அலுவலகங்கள் ஆகியவற்றை வடிவமைப்பதுதான் இன்றைய அவசியத் தேவை.​
பெருநகரங்களில் உள்ள வீடுகளிலும் அலுவலகங்களிலும் பகல் நேரத்தில் எரியும் விளக்குகள்,​​ இயங்கும் குளிரூட்டு சாதனங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்து.​ இவர்கள் பகல் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்தை மட்டும் கணக்கிட்டால் மின் உற்பத்தியில் பாதியை நகரங்கள் விழுங்கிக் கொண்டிருப்பதை உணரலாம்.​
இந்த மின்தேவையைப் பாதியாகக் குறைத்தாலும்கூட,​​ சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா?​ நகரங்களில் மக்கள்தொகை பல கோடியாக அதிகரித்துவிட்ட நிலையில்,​​ அனைவருக்கும் வீட்டுவசதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டடங்கள் உருவாக்கப்படும்போது,​​ இத்தகைய கிரீன் பில்டிங் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.​ இருப்பினும்கூட,​​
நமது பாரம்பரியக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு,​​ அதற்கேற்ப கட்டடத்தின் உட்கூரையை உயரமாக அமைப்பதும்,​​ ஜன்னல்களை அதிக எண்ணிக்கையில் வைப்பதும்,​​ சிமென்ட் பயன்பாட்டைக் குறைப்பதும்,​​ கட்டடம் எந்தத் திசையில் இருந்தாலும் எப்போதும் வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கும் வகையில் வடிவமைப்பதும்தான் இன்றையத் தேவை.​ ​

இந்த மண்ணின் தட்பவெப்பம்,​​ சூழல் அறிந்து,​​ முன்னோர் காட்டிய வழியில்,​​ இன்றைய கட்டுமானப் பொருளைப் பயன்படுத்தும் பொறியாளர்கள் நமக்குத் தேவை.​ இப்போது படிக்கும் இந்த மாணவர்களில் 10 சதவீதம்பேரையாகிலும் மரபின் பொறியாளர்களாக இப்பல்கலைக்கழகங்கள் மாற்றும் என்றால்,​​ மக்கள் பயன்பெறுவர்,​​ நாடும் பயன்பெறும்

நன்றி நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=223206&SectionID