Translate this blog to any language

செவ்வாய், 4 அக்டோபர், 2011

Correct Your children But Cripple-Not ever! குழந்தைகளை கண்டிக்கலாம்; தண்டிக்காதீர்கள்!


சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், 'சர்க்கஸ்' தான் நினைவிற்கு வருகிறது. 
மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் 'படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்'?என்று கேள்வி வேறு கேட்பார்கள்.


குழந்தைகளை கையாள்வது எப்படி: பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும்பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்டபடி திட்டுகிறோம். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம். அடுத்து குழந்தை தன்னையோ, மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்கலாம்.


அடிக்காமல் வளர்ப்பது எப்படி என்கிறீர்களா? குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதைஉணர்த்துவது. சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக,நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல்: மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமைஉண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது. உதாரணமாக 8 மாதக் குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி.
ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், 'பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு' என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்து விடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். 

ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு,சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.'இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்துவளர்க்கிறோம்' என்று நினைப்பார்கள். 

இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் (Khalil gibran) என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
 "குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால்,உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை" 
என்றவரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. 
நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக் குள்ளாகக் கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? 
பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாமே!

நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால்,வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா? குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக,விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசிப் பேசித்தான் வளர்க்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், "நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட்" என்று திட்டிக்கொண்டே இருந்தால், அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும். எனவே, மனதளவில்பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. 

இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். 
கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு. 

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது. 
தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக் குள்ளாக்குவது. 

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும். 

மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்து விடக்கூடாது. 
குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

-நன்றி: புதிய தென்றல்

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

Be Extremely Careful: Your child can be a target for Religious Conversion! மதம் மாற்றும் கயவர்கள் - உங்கள் குழந்தைகள் ஜாக்கிரதை!


உலகம் முழுவதும் இயற்கையாய் அமைந்த காடுகளையும் மனிதன் அமைத்த பூந்தோட்டங்களையும் நாம் காணுகிறோம். அதில் வித விதமான வண்ணங்கள் உடைய மலர்கள் மலர்கின்றன. மல்லிகை, முல்லை, சம்பங்கி,.ரோஜா இன்ன பிற ஆயிரம் வகை மலர்கள்! உலகில் ஆண்களை விட பெண்களுக்கு மலர்கள் என்றால் கொள்ளைப் பிரியமுண்டு. சிலருக்கு மல்லிகை பிடிக்கும் சிலருக்கு அது ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு எல்லா மலர்களையுமே பிடிக்கும். 

இதில் கவனிக்கப் பட வேண்டிய செய்தி என்னவென்றால், உலகின் எந்த நாட்டுத் தோட்டத்திலும் ஒரு மல்லிகை மலரை மட்டும் வைத்துக் கொண்டு பிற மலர்களை எல்லாம் அழித்து விடுவது அல்லது பிற மலர்களுக்கு மல்லிகை நிறத்துக்கு "வெள்ளை வண்ணம் பூசுவது" என்ற முட்டாள்தனத்தை எந்தத் தோட்டக் காரனும் செய்யமாட்டான்! ஒரு தோட்டம் என்பதே பல மலர்களின் வசிப்பிடம்!  இன்னும் மனிதக் கால்கள் படாத பல அடர்ந்த காடுகளிலும் பல ஆயிரம் வகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப்படித்தான் இறைவன் இந்த உலகைப் படைத்தான்! 

ஆனால், வலிமையையும் அற்ப புத்தியும் உள்ள ஒரு அரசன் தனக்கு மல்லிகை பிடிக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக தனது தோட்டத்தில் இருக்கும் பிற மலர்களை எல்லாம் ஒழித்து விடுகிறான். அதோடு தனது நாட்டில் வேறு மலர்களையே எங்கும் தான் காணக் கூடாது என்று சட்டமும் இயற்றுகிறான். அத்துடன் நிற்காமல், வேற்று நாடுகள் மீது படையெடுத்து அவற்றையும் வென்று அங்கும் மல்லிகை தவிர்த்த பிற மலர்களை அழித்து விடுகிறான்! 

இப்போது உலகம் முழுதும் வெண்மை நிறம், பசுமை நிறம் தவிர்த்த பிற வண்ணங்களை தோட்டங்களில் காண முடியவில்லை! முகத்தில் அறைவது போல் உலகம் எங்கும் மல்லிகை... மல்லிகை... "வெள்ளை" மல்லிகை! இப்போது மல்லிகையின் வாசம் தாங்காமல் பலர் மயங்கி விழுகிறார்கள்! பிற மலர்களை நம்பி வாழ்ந்த பூச்சிகளும் வண்டுகளும் பரிணாமத்தில் அம்மலர்களோடு சேர்ந்து காணாமல் போகின்றன! தேனீக்கள் பலவும் இறந்து படுகின்றன! உலகம் வெறுமையாகிப் போகிறது!

இதைத்தான் செய்ய விரும்புகிறார்கள் மதப் பித்தர்கள்!

தான் நம்பும் மதத்தை பிற மதத்தினரும் நம்ப வேண்டும் அந்த மதத்திற்கு அவர்கள் மாற வேண்டும் என்று மன மொழி செய்கைகளால் காரியம் ஆற்றுகிறார்கள்! அதற்காக. பிற மதத்து பிள்ளைகளை பெற்றோர்களின் சம்மதம் இன்றி பள்ளிகளிலும் வீடுகளிலும் வைத்து சிறுக சிறுக துர்போதனை செய்கிறார்கள்; மனமாற்றம் செய்கிறார்கள்! தக்க சமயம் பார்த்து அவர்களை "வெள்ளையடித்து" மதம் மாறத் தூண்டுகிறார்கள்! அதில் அவர்களுக்கு குரூர  இன்பம்!

இவ்வாறு ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளின் உள்ளத்தில் 
அவர்களின் பெற்றோர்கள் அறியாத வண்ணம் 
வேற்று மத நஞ்சு ஊற்றுவதும், 
பெற்றோர்கள் அறியாத வண்ணம்  அக்குழந்தைகளிடம் 
பாலியல் வன்முறையைத் தூண்டுவதும் இரண்டும் ஒன்றுதான்!

குழந்தைகள் தான் என்றில்லை பலவீன மனமுடைய பெண்கள் முதியவர்கள் என்று எவரையும் இவர்கள் சிறுக சிறுக இவ்வாறு வெள்ளையடித்து விடுகிறார்கள்! கரைப்பார் கரைத்தால் கல்லும்தான் கரையுமே!

இதன் பின்னர்தான் இருக்கிறது துன்பங்கள்! அப்படி மனம்/மதம் மாறிய குழந்தைகள்/பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது! உள்மனதில் ஒரு புதிய மதச் சிந்தனையும் வெளிமனதில் பெற்றோர்களுக்காக நடிப்பதுமாக அவர்கள் கொஞ்ச காலம் அல்லாடுவார்கள்! தக்க வயது/தருணம் வந்ததும் புறத் தூண்டுதல்களால் தனது மதத்தை உதறி விட்டு வேற்று மதத்தை தழுவார்கள்!
அதன் பிறகு இந்தக் கூட்டத்திலும் இருக்க முடியாமல் அந்தக் கூட்டத்திலும் இருக்க முடியாமல் கிடந்து தவிப்பார்கள்! ஒரு பண்டிகை ஒரு நல்ல நாள் என்று வரும் போது இங்கும் ஒட்ட முடியாமல் அங்கும் ஒட்ட முடியாமல் ஆகிவிடும்! இதையெல்லாம் நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்! 

தான் பிறந்து  வளர்ந்த ஒரு மதத்தை விட்டு வேறுமதம் மாறுகின்ற ஒரு பெண் அல்லது ஆணுக்கு காலப் போக்கில் பல்வேறு சங்கடங்கள் ஏற்படுகின்றன.
பிறந்த மதம் சார்ந்த மனிதர்கள் அவனை/அவளை விலக்கி விடுகிறார்கள்! எந்த நல்லது-கெட்டதுக்கும் அழைப்பதில்லை; சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை! இப்போது அவனுக்கு /அவளுக்கு புதிய மதம் மட்டும் கூட இருக்கிறதே ஒழிய பழகிய மனிதர்கள், உறவுகள் எவரும் கூட இருப்பதில்லை! மேற்படி நிலைமையின் தீவிரம் புரிய வரும் போது காலங்கள் பலவும் அப்போது கடந்து விட்டிருக்கும்!! வெறும் சித்தாந்தத்துக்கு மயங்கி உறவுகளைக் கோட்டை விட்ட கசப்பான உண்மையும் அங்கு தெரிய வரும்! மதமாற்றம் என்பது வெறும் அலங்கரிக்கப் பட்ட சிறைவாசம் தான் என்பது ஒருவருக்குத் தெரிய வந்தாலும் அதை வெளிப்பட சொல்ல இயலாது!

நான் கேட்கிறேன்! மல்லிகைப் பூ சூடியவருக்கு மரணமில்லையா என்ன??!! 
இன்ன மதத்தை சார்ந்தவர்களுக்கு நோய் வருவதில்லை என்றோ இறப்பு விகிதம் குறைவு, அவர்களுக்குள் சண்டை சச்சரவு இல்லை, முன்னேற்றம் அதிகம் என்றோ அறிவியல் பூர்வமாக எவரேனும் அறுதியிட்டுக் கூற முடியுமா? பின் ஏன் நம்மிடம் இந்த "வெள்ளையடிக்கும்" மும்முரமும் மூர்கத்தனமும்? நன்னீரில் வாழும் ஒரு உயிரை ஒரு சாக்கடைக்குப் பழக்கினால் கூட நாளடைவில் அவ்வுயிர்க்கு அந்த இடம் பிடித்துப் போகிறது! அதற்காக ஒரு கூட்டத்தில் வாழும் உயிரைப் பிரித்து வேறொரு சூழ்நிலையில் நிரந்தரமாகத் தள்ளும் வன்முறை நன்முறையா? அந்தப் பாவம் நல்லதா?

எது எப்படியோ, இதையெல்லாம் மூர்க்கக் குணம் கொண்ட "மத-மாற்ற பேர்வழிகள்" கேட்கவே மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்! எனவே உங்கள் குழந்தைகளை நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! அவர்களிடம் யாரும் பாலியல் வன்முறை நிகழ்த்த முயற்சிப்பதை கவனமாகத் தவிருங்கள்! அதைவிட கவனிக்க வேண்டியது மதமாற்ற-வன்முறை! எனது சமூகத்திலேயே அப்படி பல கசப்பான மத மாற்றங்கள் கடந்த 30 வருடங்களில் நடந்து வருகின்றன. அதனால் தான் சொல்கிறேன்! உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் சரிவர பராமரிக்க வேண்டும். 

குறிப்பு: கொசுக் கடியில் இருந்து தப்பிக்க எனது சமூகத்துக்கு கொசு வலை போர்த்திகொள்ள சொல்லி வலியுறுத்துவது என் கடமை! அதையே இங்கு செய்கிறேன்!


நண்பர்களே!

நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கடைபிடிக்க வேண்டியன:

1   உங்கள் மதப் புத்தங்கங்களை அவ்வப்போது படித்துக் காட்டுங்கள்!

2   தினமும்/வாரந்தோறும் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்!

3   நீங்கள் சார்ந்துள்ள மதத்துக்கு பத்தில் ஒரு பாகமாவது செலவழியுங்கள்!

3   வேற்று மதத்தவரோடு உங்கள் குழந்தைகள் பழகும் போது "ஒரு கண்"           வையுங்கள்!  நடவடிக்கைகளை கண்காணியுங்கள்!

4   அவர்களது கோவில்களுக்கு பிரசார மண்டபங்களுக்கு குழந்தைகளை அனுப்பாதீர்கள்! ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் விழுந்தாலும் அது வீணே! மீண்டும் அது பால் ஆகாது!

5  உங்கள் வீட்டில் நல்லது கெட்டது நிகழ்கையில், அல்லது வீட்டில் யாரேனும் நோய்வாய்ப் படும்போது  "அழையாத விருந்தாளியாய்" வந்து 
ஜெபம் செய்வது, அவர்களது மதப் புத்தகம் வாசிப்பது போன்றவற்றை தயவு செய்து அனுமதியாதீர்கள்! இனிப்பு தடவிய மயக்க மருந்துக்குப் பலியாகாதீர்கள்! உங்கள் குழந்தைகளும் பெற்றோர்களே 'பச்சை கொடி' காட்டிய தைரியத்தில் 'வேறு மார்க்கம்' போய்விடுவதற்கு நீங்களே ஒரு மூல காரணம் ஆகி விடாதீர்கள்!

6  நீங்கள் நீங்களாகவும் மற்ற மதத்தினர் அவர்களாகவே இருக்கட்டும்! ஒரு மல்லிகை ரோஜாவாகவும் மாற வேண்டாம்! அதே போன்று
ஒரு ரோஜா, மல்லிகையாகவும் ஆக வேண்டாம்! அது அதன் இடத்தில் அது-அது இருந்தால் போதும்! 

7  வேற்று மதப் பள்ளிகளில் உங்கள் குழந்தை படிக்கும் போது கவனமாய் இருங்கள்! முன்கூட்டியே உங்கள் குழந்தைகளிடம் 'அவர்கள் அப்படித்தான்!  ஒரே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு தற்பெருமை பேசுவார்கள்-கண்டு கொள்ளவேண்டாம்-நமக்கு அதைவிட பல ஆயிரம் புத்தகங்கள்/பெருமைகள்/கோவில்கள்/பொக்கிஷங்கள்  உண்டு!" என்று ஒரு வார்த்தை சொல்லி வையுங்கள்! 

8  ஈராயிரம் வருடங்கள் முன்பு கட்டிய ஆயிரக் கணக்கான கோவில்களில் சிலவிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன! அதற்காக நமது சிறப்பு வாய்ந்த கோவில்களை இடித்து விடாதீர்கள்-செப்பனிடுங்கள்! உங்கள் மதத்திலும் அக்கால சூழலுக்கு ஏற்ப சில-பல ஒவ்வாதன சேர்க்கப்பட்டிருக்கலாம்! அதை மட்டும் இக்காலத்தில் முனைந்து களைந்து விடுங்கள்! அதற்காக உங்கள் மதத்தை 'இதோ ஒழிக்கிறேன்' என்று புறப்படாதீர்கள்! நீங்கள் வசிக்கும் வீட்டில் கொசு இருந்தால் கொசு-வர்த்தி கொளுத்தி வையுங்கள்;குடியிருக்கும் வீட்டையே கொளுத்தாதீர்கள்!

9  உங்கள் மொழியை, இனக் கூறுகளை, பண்பாட்டு அடையாளக் குறியீடுகளை, கோவில்களை ஒரு போதும் ஒழித்து விடாதீர்கள்;நாடோடி சமூகம் ஆகி விடாதீர்கள்!

10 உங்கள் மூதாதையர்கள் மற்றும் நீங்கள் பிறந்து வளர்ந்த அந்த சூழ்நிலையை அடையாளக் குறியீடுகளை உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் நீங்கள் அப்படியே விட்டுச் செல்லுங்கள்! நாடோடிகள் போலின்றி விழுதுகள் பரப்பும் ஆல மரமாய் தழைத்து பெருகட்டும் உங்கள் குடும்பம்!  

முடிவாக, 
 மத-மாற்றப் பேர்வழிகளிடம் மிக்க கவனமாய் இருங்கள்!
அவர்கள் புதிய புதிய வழி முறைகளைக் கையாளுகிறார்கள்!
புதிய புதிய போர்வைகளில் திரிகிறார்கள்!
இரகசிய திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்கள்!

எல்லாமே, 
உங்கள் அடையாளங்களை அழிப்பதற்காகத்தான்!
உங்கள் குழந்தைகளைப் பிடிப்பதற்காகத்தான்!

கவனம்-கவனம் தோழர்களே!

yozenbalki