Translate this blog to any language

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

Universe - My Master ! இயற்கை - சத்குரு !

பொய்யை விரும்புவது போல
உண்மையை யாருமே
விரும்புவது இல்லை!

உண்மையைக் கண்டு நாம்
அஞ்சி நடுநடுங்குகின்றோம் !

ஏனென்றால்
உண்மை பாரபட்சம் அற்றது-

வேண்டியவர் - வேண்டாதவர்
இருவரையுமே அது
ஒரே தராசில் வைத்து
நிறுத்திப் பார்க்கிறது;
தீர்ப்பு சொல்கிறது!

பின் எப்படி நாம்
உண்மையை உண்மையாகவே
விரும்ப இயலும்?

பஞ்சபூத இயற்கையும்
பாரபட்சம் அற்றதே!
ஓரம் சாராததே!

தீயை தொட்டால்
புத்தர்களையும் அது சுடுகிறது!
பனிக்கட்டியோ
எவருக்குமே குளிர்கிறது!

ஆக,
உண்மையின் இன்னொரு பெயர்
"இயற்கை"!

அது சரி!
இயற்கைக்கு மற்றுமொரு
பெயரும் உண்டு!
அது என்ன தெரியுமா?

அதுதான் "சத்-குரு"!


- மோகன் பால்கி

எல்லையற்று விரிதலே - ஞானம்!


எல்லையற்று விரிதலே
ஞானமடைதல் ஆகும்-
சுருங்கி அடைபடுதல் அன்று!

காற்று அடைபட்டு நிற்பதில்லை-
அது
நிலங்களின் பெயர்களை
பொருட் படுத்துவதும் இல்லை!
ஐம்பூதங்களும் அவ்வாறே!

தத்துவ ஞான வார்த்தைகளில்
சிறை படாமல்
வாழ்வை
நடுவில் நின்று பார்த்தலே
தவம் எனப்படும்!

அப்படிப்பட்ட தவத்தின் பயனே
"ஞானம்" ஆகும்!

ஞானம் பிரிவுகள் அற்றது!

விழிப்பு, கனவு, உறக்கம் என்னும்
மூன்று நிலைகளிலும்
அதில்
ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்
"துரியம்" என்னும்
நிலையே அக் தாகும்!

அதனையே "துரிய மெய்ஞானம்"
என்று ஆன்றோர்கள்
குறிப்பால் உணர்த்துவர்!

-மோகன் பால்கி

புதன், 22 அக்டோபர், 2008

"கருத்துப் - பிழை"


என் நண்பனே !

எனது வலிகளை நீ
அறிந்திருக்க நியாயம் இல்லை தான்!

அம்மா கூட
ஆற்றுப் படுத்தலாம்
அவ்வளவே தவிர
உள்ளே கிடக்கும் இரணங்களை
உள்-நுழைந்து பார்க்க
யாரால்தான் இயலும்!

ஒருவர் வலியை
இன்னொருவர் அறிய
இங்கு
வழியே இல்லை!

காக்கையின்-பசி-வலியும்
எருதின்-புண்-வலியும் போல...!

எந்த வலி பெரிது
எது அதிக நியாயம் என்று
எந்த புத்தர் வந்து
உன்னிடம் விளக்கி
புரிய வைக்கப்போகிறார்!

இருப்பினும்,
நான்
இப்போது உணர்கிறேன்..

நீயும் நானும் ஒன்றே என்ற
சிறியதொரு
"கருத்துப் பிழையில்" தான்
வெடிக்கிறது என்
விவஸ்தையற்ற பெரும் கோபம்!

-மோகன் பால்கி

Riches - The Risker ! பணக்காரன்-ஒரு "பணயக்காரன்"!


பணக்காரன்
என்பவன்
ஒரு மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

அவன் தனது உயிரை
அதைவிட
தன்
மானத்தை...
"தன்-மானத்தை"
ஒரு மிகப் பெரும்
இலட்சியத்துக்காக
பணயம் வைக்கத் துணிகிறான்!

எதையும் இழக்காமல்
இங்கு
எதுவுமே கிடைப்பதில்லை!

ஆம்
பணக்காரன்
ஒரு
மிகச் சிறந்த
"பணயக்காரன்"!

-மோகன் பால்கி

செல் போன் "பிணி" போல் ....! ( Mobile phone a Dis-ease!)

இறுகி வரும் எனது வேலி!

சுகம் தரும் பாதுகாப்பு என்றும்
சுதந்திரம் என்றும்
பொய்யாய் கருதிய
போலி நினைப்புகள்..

முதன் முதல்
செல் போன் ஒலித்த போது..
அழைத்த போது
இருந்த ஆனந்தம்
இன்று இறந்தது!

கையடக்க கருவி வழி
வையகம் வாழ் யாரிடமும்
நினைத்த நேரத்தில்
நான் பேச முடிவது
சுதந்திரம்
என்று தவறாய்க் கருதிக்
கிடந்தேன்!

இன்றுதான் தெளிந்தேன்-
உலகின்
எந்த மூலையில் இருந்தும்
எந்த நொடியிலும்
யார் வேண்டுமானாலும்
காதுகளுக்குள்
கந்தகப் பொடி வீசி
என் சுதந்திரம்
கெடுக்கலாம் என்று!

எந்த ஒரு மையத்தில் இருந்தும்
புறப்படும் கயிறுகள்
ஒரு வழிப் பாதை அல்ல !

எல்லா இடங்களிலும்
விரல்கள் அல்ல-நண்பர்களே!

பொம்மைகளே கயிறுகளைப்
பிடித்து ஆட்டுகின்றன!

வாழ்க்கை வெறும்
பொம்மலாட்டம் அல்ல!

அது ஒரு பொம்மலாட்ட-
கயிறாட்டம்!

எந்த ஒரு சுதந்திரமும்
இன்னொரு-வகை
அடிமைத்தனமே!

-Mohan Balki

புதன், 15 அக்டோபர், 2008

Anger - A creative State! கோபம் - ஒரு ஆக்க நிலை!


கோபம்....

நமது இயலாமையின் வெளிப்பாடு
நம் மீது நாம் கொள்ளும் ஆத்திரம்!

கொசுவின் மீது யாரும்
ஆத்திரம் கொள்வது கிடையாது!

கொசு
தொல்லையே செய்கிறது !

புயல் காற்றின் மீதும்
யாரும் கோபம் கொள்வது இல்லை !

ஆனால்

நம்மால் இயலுமா இயலாதா
என்னும் கையறு நிலைகளில் தான்
கோபம் ஏற்படுகிறது!

அதாவது
கொசுத் தொல்லைக்கும்
புயல் காற்றிற்கும்
இடையிலான நமது சக்திக்குட்பட்ட
சந்தேகப் பிரதேசங்களில் தான்
ஆத்திரமானது
ஒரு அழையா விருந்தாளியாக வந்து
நம் தலைக்குள் அமர்கிறது!

கோபம் ஒரு தேக்கம் -
ஆத்திரம் ஒரு அவஸ்தை !
விழுங்கவும் இயலாமல்
துப்பவும் முடியாமல்
தவிக்கும் ஒரு தவிப்பு!

எந்தவொரு முயற்சியும்
இந்தத் தவிப்பில் இருந்தே
ஆரம்பம் ஆகி இருக்கிறது!

ஆம்!
தவிப்பு இல்லையேல்
முயற்சியும் இல்லை !

முயற்சியில் அவஸ்தை உண்டு
முயற்சியில் துன்பம் உண்டு!

உடல் பயிற்சியின் பொது கூட
நாம் பார்த்திருக்கிறோமே !

வலியும் வேதனையும்
தசைகளில் இருக்கும்;

மறுநாள் பயிற்சி தொடர
மனம் மறுக்கும் !

மனதை ஒதுக்கி வலியை பொறுத்தால்
விடாப் பயிற்சியில் வீரனாகலாம் !

வலியில்லாமல் வடிவம் உண்டா?
முயற்சியிலாத பரிசுதான் உண்டா?

ஒவ்வொரு வலியும் நீள நீட்சியே ;
துன்பம் யாவுமே மெய் வளர்ச்சியே !

எங்கே வலி இருக்கின்றதோ
அங்கே மௌனமாய் ஒரு
வளர்ச்சி நடைபெறுகின்றது
என்றே பொருள் !

ஆக
நம் சக்திக்குட்பட்ட கோபம்
நம் சாத்தியத்துக்கு உட்பட்ட வளர்ச்சி!

வளர்ச்சி - வலி!
தாங்கியே தீரவேண்டும்!

ஆயினும்
கோபம் தன்-வளர்ச்சி சார்ந்தது!
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க நினையாதது!

கோபம்
தேக்கி வைக்கப்பட்ட
அணைக்கட்டு-நீர்!

ஆக்க வேலைகள் பலவும்
அவனுக்கு
காத்துக் கிடக்கின்றன!

மாறாக
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க எண்ணும் கோபம்
'பொறாமை' ஆகிறது !

பொறாமைத் தீ - ஒரு பூமராங் போல!
புறப்பட்ட இடத்தையே வந்தடைந்து
அனுப்பியவனையே
அது அழித்து விடுகிறது!

கோபம் ஒரு ஆக்க நிலை!
பொறமையோ வெறும்
தேக்க நிலை மட்டுமே!

கோபத்துக்கு
ஒரு நதியின் குணம் உண்டு!

குட்டையின் குணமே பொறாமைக்கு!

மலையில் இருந்து
தலைக் குப்புற விழுந்த கோபத்தில்
புறப்படும் நதி
பாலை வனங்களில் பசுமை பரப்பி
நாடுகள் தாண்டி கடலைச் சேரும்!

நதியின் கோபமே-பூமியின் பூரிப்பு!

பசுமையின் அடர்த்தி என்பது
நதித்தலை படர்ந்த
கோபத்தின் அடர்த்தியே!

அடர்ந்த கோபம்-தொடர்ந்த பசுமை!

சீறிப் பாயும் நதி-சீரிய வளமை!

ஒரு காந்தியின் கோபமே
சுதந்திர பாரதம் !

கோபத்துக்குள் விகித முரண்கள்
ஆயிரம் இருக்கலாம்!

அகிம்சை கோபம்-அறிவுக் கோபம் !
ஆத்திரக் கோபம்-அவசரக் கோபம் !
வறுமை கோபம்-வாலிபக் கோபம் !
பொறுத்துப் பொங்கிய தீவிரக் கோபம் !
இப்படியாக எண்ணிலாக் கோபம்!

ஓடுகள் உடைத்து மண்ணைக் கிழித்து
வானம் பார்க்கும்
கோப விதையே விருட்சம்-சுபிட்சம் !

எழுச்சி இல்லையேல்
கருவிதை-கல்லைறை!

கதகதப்பூட்டி அடைகாக்கும் போதும்
குஞ்சுப் பறவையின்
சின்ன அலகே
முட்டைத் தடைகளை
முட்டி உடைக்கும்!

மனிதக் குழந்தையும் அவ்வாறே !
இருகால் முயற்சி
தாய்க்கென்றாலும்
மறுகால் தலைமை
சிசுவின் பணியே !

இயக்கம் என்பதே
இருகை கூட்டு!
நதியின் விரிவும்-பூமியின் சரிவும் போல்!

தலைக் குப்புற
மலை மீதிருந்து விழுந்த
கோப-நதி' போல்
வீரியத்தோடு
புறப்பட்டு போங்கள் !

சுற்றுப் புறங்களைப்
பசுமை ஆக்குங்கள் !

உங்கள் கோபம்
ஆக்க சக்தியின்
அற்புத வடிவம்!

அணைந்து விடாமல்
ஒளி பரவட்டும்!

- மோகன் பால்கி

செவ்வாய், 14 அக்டோபர், 2008

உட் குழிந்த குறைகள் !


குறை காணும் கண்கள்.....

உனது பார்வையில் நானும்
எனது பார்வையில் நீயுமாய்...!

அட !
குறை என்பதுதான் என்ன?

எனது இயலாமையை

உனது 'இயலுமையால்'
நிரவும் முயற்சியின்
பதட்டம் தானே !

உண்மையில்
என் குறை என்பதும்
உன் குறை என்பதும்
பார்வை கோண மாறுபாட்டில்
ஒளிரும்
'ஒரு-பரிமாண'
உரு வெளி பிம்பமே!

மேலும்
நீ காணும் எனது
'உட் குழிந்த' குறைகள்
'வெளிக் குவிந்த' நிறைகளாக
வேறொரு கோணத்தில்
வேற்றாரால் உணரப்படும் !

உனதும் அவ்வாறே !

ஆம்!
அறிவு காணும் குறைகள் என்பன
"ஒரு-பரிமாண"
தோற்ற மாயையே !

அன்பில் உணரும்
உச்ச உண்மையே
"பல்-பரிமாண"
வாழ்வின் இரகசியம் !

-மோகன் பால்கி