Translate this blog to any language

திங்கள், 27 அக்டோபர், 2008

இதுவே அதிகம் - இறைவா!


அய்யனே !

நீ என்
ஆழ்ந்த மையத்தில்
அமைதியாய் அமர்ந்தவன்!
என் மையம் உணர்ந்தவன் !
அது
ஒன்றே போதும்
எனக்கு!

நீ என்னில் இருந்து
என்னை ஆள்பவன் - எந்தன்
ஆண்டவன்!

என் உள்ளும்-புறமும்
யாவுமறிந்தவன் !
மையப் பகுதியில்
கோவில் கொண்டவன்!

போதும் இறைவா!
இதுவே அதிகம்!

இனி,
பிறவி-நூறையும்
பொறுமையாய்க் கடப்பேன்!

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

Rolling Stocks ! இரயில் பெட்டிகள்



எந்தக் குழந்தையும்
தன் தாய் தந்தையை
"அம்மா" "அப்பா"
என்றழைக்கும் போது
எனக்கு ஏனோ
அந்த
நெடிதுயர்ந்த ஆலமரத்தின்
விழுதுகளே நினைவுக்கு வரும்!

அதுகளே
"மம்மி" "டாடி"
என்று கத்தும் போது
அந்த
ஐரோப்பிய
இரயில் பெட்டிகளே
நினைவுக்கு வருகின்றன;

எப்போது வேண்டுமானாலும்
இறங்கிக் கொள்ள -
கழன்று செல்ல !

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி