Translate this blog to any language

புதன், 29 அக்டோபர், 2008

பெருஞானம் இதுமுக்தி!

மனமென்ற ஒன்றில்லை மனமே அக்து தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்! உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ? துண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி மண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை! உறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும் தருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்! நகமின்றி விரல்வாழும் யாக்கை போலும் விரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்! இருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும் பெருங்குழுக்கள் கூடுவதை கூட்டம் என்பர்! மனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம் எண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம் பிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம் பொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே நீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும் வேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும் அவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று ஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று! மாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய் காயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம் வெறுமையென அறிகில்லாய் மனமே நீயே! பெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே! 
  - YozenBalki

செவ்வாய், 28 அக்டோபர், 2008

நாளையெனும் மூட- மனம் !


நாளை நாளையென நன்மைசெய நாள்பார்த்து
வேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது
காலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்
சோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்

இல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது
வில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்
தொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்
தில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்!

குளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி
களிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து
புளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு
தெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது!

சேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்
பார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை
கோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்
மூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென!

-மோகன் பால்கி