Translate this blog to any language

வியாழன், 1 ஜனவரி, 2009

"பனி மலர்கள்" காத்துநிற்போம்!



ஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை
பத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்!

புலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்
புண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்!

புவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்
புண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் !

தீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்
ஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை

ஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்
இன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்!

உயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்
இறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்!

மறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்
தருவோம் நம்இதயத்தை "பனி மலர்கள்" காத்துநிற்போம்!

-மோகன் பால்கி


புதன், 31 டிசம்பர், 2008

"மேற்க்காண்டைப்" பூரிப்போம்! 2009


காலமற்ற காலமிதில்
கணக்கொழிந்த விசும்பிதனில்

நொடிகளிது வருடமிது
எனநமது மனமிரையும்!

மனமற்ற 'மேற்பாழில்'
காலமிலை கணக்குமிலை!

மாற்றமொன்று தேவையென
தேறுகின்ற மாந்தமனம்

மாறிவிடும் தேறிவிடும்
வேறுவழி பார்த்துவிடும்!

ஊழ்தனையும் உட்பக்கம்
காண்டுவிடும் உள்வலியால்

மேதினியில் மேன்மைபல
"மெய்மையினால்" செய்திடுவோம் !

கடலுக்கு துவக்கமிலை
காற்றுக்கு முடிவுமிலை

காலத்தை அளப்பதற்கோ
"மின்மினிக்கு" வழியுமிலை!

நீளுகிறப் பெருவழியில்
இடைதோன்றி மறைமனுவின்

சிறுகணக்கு இதுவெனினும்
புத்தாண்டு வாழ்த்திநிற்போம் !

ஒன்றிரண்டு அச்சடித்த
பழந்தாள்கள் முடிவுபெற்று

புதுத்தாள்கள் புறப்படட்டும்
தவறில்லை முயற்சிக்கு-

ஆரம்பம் ஓரிடத்தில்
அமைத்திடுதல் அறிவுடைமை !

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
முதற்கல்வி குறள் சொல்லும் !

உலகத்தார் போற்றுகின்ற
"மேற்க்காண்டைப்" பூரிப்போம்!

-மோகன் பால்கி