நான் இருந்த "வீட்டில்" கூட்டம் கூட்டமாய்
இன்று
யார் யாரோ!
நானும்
பெயருக்கு ஏதோ
ஓரமாய்...!
எனது தந்தை
"இவ்வீட்டைத்" தருகையில்
இந்தக் கும்பல்கள்
அன்றைக்கில்லை!
இன்றோ..
அரசியல் அண்ணன்கள்
மதம் முதிர்ந்த கிழடுகள்
கிரிக்கெட் மைத்துனர்
என்று
ஒரு ஊரே கிடந்து
என் "அறைகளில்"
சப்தமிடும்!
அது போதாதென்று
மூலைக்கு மூலை அமர்ந்து
சினிமா சீரியல்
அடுத்த வீட்டு கதை என்று
சிரித்தும் அழுதும்
அமைதி கெடுக்கும்
அக்காள் தங்கைகள்!
அதோடு நிற்காமல்
இவர்களைப் பார்க்க
எவர் எவர்களோ வந்து
அவர்களும் "உள்-நின்று"
ஓயாமல்
சப்தமிடுகிறார்கள் !
இடையிடையே
என் தந்தையும்
வந்து தங்கி
சப்தமிட்டுச் செல்கிறார்!
எப்படியோ!
சதா சப்தமிடும்
ஒரு
இயந்திரமாகிப் போனது-
என் "வீடு"!
என் தந்தையோடு
நான் மட்டுமே இருந்த நாளில்
கொஞ்சம் அமைதியும்
ஏகாந்தமும்
இருந்ததாய்
ஒரு ஞாபகம் !
ஒரு நாள்!
நான்
பெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;
அவரவர்களை
"அவரவர்களின்-சொந்த வீட்டிற்கு"
துரத்தியடிப்பது என்று!
ஒரு
சிம்ம கர்ஜனையில்
அவர்கள்
சிதறியோடினார்கள்!
அப்பா!
என்ன ஒரு ஆனந்தம்..
என்னவொரு ஏகாந்தம்!
இனி என் வீட்டில்
எனது "உள்-வீட்டில்"
அரசியல் மதம்
சினிமா கிரிக்கெட்
என்று
எதற்கும் இடம் இல்லை!
வெறேது பற்றியும்
உள்-வெளி
கூச்சல்கள் இல்லை!
இனி
எனது தலையும்
ஒரு
பஜனை மடம் அல்ல!
அது
சப்தமற்ற ஆகாயம்-
அலை நின்ற சமுத்திரம்!
ஆம்!
நான் இனி
என்னுடன் மட்டுமே
இருக்கப் போகிறேன்!
எனக்குள் இருந்து
என்னில் கரைந்து
அந்த ஏகாந்தத்தில் நான்
காணாமல் போவேன்!
எனவே - இறைவா !
என் - தந்தையே - நீயும்
வெளியேறு!
-மோகன் பால்கி