இந்தியாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது!
அதற்குள் இருக்கும் மாநில-அங்கங்களின் கதி அதோ கதி! குறிப்பாக உள்வட்டச் சாலைகள் பற்றிப் பேச வருகிறேன்! அது ஏன் நமக்கு நல்ல சாலைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லை என்று தெரியவில்லை. நம்மூர் தெருக்கள்/சாலைகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் 'சர்கஸ் காரர் ஓட்டுவதை விட லாவகமாக அடிக்கொரு தரம் வளைந்து நெளிந்து, ஏறி இறங்கி, எகிறி குதித்து, இடுப்பு சுளுக்கி படுக்கையில் படுத்தாலும், "ஐயோ! இது இப்படி இருக்கிறதே இது தகாதே", என்று எவரும் நினைப்பதே இல்லை. வயதானவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு எத்தனை கஷ்டம்? இந்த ஊர் மன்னனாய் இருந்தாலும் அவரது மனைவி மக்கள் உட்பட இந்த சாலைகளில் தானே எல்லாப் பயணங்களும் போக வேண்டும்! அட! திடீர் நோயாளி ஒருவரை காரில்/ஆட்டோவில் வைத்து அந்தப் பள்ளங்களில் ஏற்றி இறக்கி மருத்துவமனை செல்வதற்குள் அவர் பரலோகம் போய்விடுவாரே !
நானும் பார்க்கிறேன்! எனக்கும் 48 வயது நடக்கிறது. இதே சென்னையில் பிறந்து வளர்பவன் என்ற முறையில் சென்னையின் எல்லா தெருக்கள்-சாலைகளையும் நான் நன்றாக அறிவேன்! எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஆட்சிகள் பல மாறிய போதும் இந்த சிங்கார சென்னையின் அலங்கோல தெருக்கள்-சாலைகளின் காட்சி மட்டும் மாறவே இல்லை! எல்லா ஆட்சிகளும் இதில் ஓட்டு மொத்தமாக தோற்றுப் போயின என்றுதான் நான் சொல்வேன்!
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கிழவிக்கு மேக்-அப் போடுவது போல் தெருக்களுக்கு இங்கு ஒட்டு-வேலை போட்டு, அதன் மூலம் ஓட்டு வாங்க நினைப்பது. அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் யாராவ்து பொதுக் கூட்டம் பேசி ஓட்டு வாங்க வரும் போது மட்டும் குப்பை பெருக்கி, தெரு ஓரங்களில் வெள்ளை சுண்ணாம்பு மாவு தூவுவது! ஏற்கனவே நன்றாக இருக்கும் சாலைகள்/தெருக்களை மட்டும் செலக்ட் செய்து கொண்டு காண்ட்ராக்டர்கள் மீண்டும் அங்கேயே மாவரைப்பது! அரசு தரும் தார்-களில் குறைந்தது 40 முதல் 60 %-த்தை வெளி மார்கெட்டில் விற்று விடுவது! கால காலமாக இருக்கின்ற பள்ளம் மேடுகளை சமப்படுத்தாமல் இருந்தமேனிக்கு தோசை சுடுவது போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரம்/அளவு குறைந்த சரக்கை போட்டு ஒப்பேற்றுவது! (அதனால் தானே சென்னையில் குறிப்பிட்ட பல இடங்களில் மழை தூறும் !! காலங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்குகின்றது?)
தெருக்களை, ஏதேனும் பெயர் சொல்லி அடிக்கடி குத்திக் குடைவது! அந்தச் சமாதிப் பள்ளங்களின் மீது முதலில் தோண்டிய மண்ணையே எடுத்துப் பாதியைத் தூவி விட்டு மீதியை தெரு முழுதும் விநியோகம் செய்வது! வாகனங்கள் விழுந்து எழுந்து செல்லும் அந்தப் பிறை வடிவ பள்ளங்களில் குப்பைக் கூளங்களும்-மழை நீரும் சேர...கொசுப் பண்ணைகளை இலவசமாக உற்பத்தி செய்வது! தெருவில் பள்ளம் தோண்டியதால் இறைந்து கிடக்கும் மீதி மண் கெட்டி தட்டிப் போய், மேடு மேடாய், திட்டுத் திட்டாய் வருடக் கணக்கில் கிடக்க, முக்கால்வாசி தெருவை யாரும் உபயோகிக்க முடியாமல், ஒற்றையடிப் பாதை போல வளைந்து நெளிந்து இருசக்கர - பல சக்கர வாகனங்கள் 'சர்க்கஸ்" செய்வது சென்னையில் இங்கு கண்கொள்ளாக் காட்சி போங்கள்! இது போல ஒரு தெருவுக்கு பத்து இருபது பள்ளங்களும் அதற்க்குச் சப்பைக் கட்டுகளும், இது விரிந்து விரிந்து வட்டம்-வார்டு-மாவட்டம் என்று இந்த வியாதி ஒழிக்கவே முடியாத பெரு-நோயாய் போய்விட்டது போங்கள் !
நீங்கள் வேண்டுமானால் உங்களை ஒரு மனசாட்சியுள்ள பறவையாய் கற்பனை செய்து கொண்டு, வானத்தில் இருந்து இந்த சென்னை மாநகரைப் பாருங்களேன்! ஒரு அரை நூற்றாண்டுகால சீர்கேடு-அப்படியே கிடக்கிறதே! ஏன்?
தி-நகரை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்! நார்த் உஸ்மான் ரோடு மேம்பாலம் முடிந்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் அதன் இருபுறம் உள்ள கீழ் வழி சாலைகள் இன்னும் சீர்திருத்தம் இன்றி படு-கேவலமாக உள்ளனவே!
கோடிக்கணக்கில் மேம்பாலங்கள் கட்டுவது-ஆனால் சாலைகள்/தெருக்களை வருஷக் கணக்கில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது என்பது என்ன நியாயம்?
அது போக, மேற்படி உஸ்மான் சாலையின் இருபுறத் தெருக்களில் மழைக் காலங்களில், படகு விடும் அளவுக்குத் தண்ணீர் தேங்குவதை நாம் மாற்றவே முடியாதா? அதே போன்று, திருமலைப் பிள்ளை சாலையின் மேற்குப் பகுதி தெருக்களில், குறிப்பாக ஓட்டல் Breez அருகில், பெரிய வாகனங்கள் கூட நின்றுவிடும் அளவுக்கு மழைக்கால ஏரிகள் போன்ற நிலை தலைமுறையாக தொடர்வதை நாம் மாற்றவே முடியாதா? அதே போல, ஸ்டேர்லிங் ரோடு, வேலு மிலிடரி ஹோட்டல் அருகில், ..........வருடா வருடம் மழைக் காலத்தில் பேருந்து தவிர எந்த வண்டியும் போக முடியாத அளவுக்கு பள்ளம்-வெள்ளம்!
இது போன்ற சீர்கேடுகளை எந்த ஆட்சியும் கண்டு கொள்வதில்லை-அதன் நிரந்தரத் தீர்வுகள் பற்றி யோசிப்பதே இல்லை! ஆனால், இந்தியா ஒரு வல்லரசு நாடு -சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறோம் -அணுசக்தி- நானோ தொழில் நுட்பம்- இந்தியப் பொருளாதார வளர்ச்சி- அது இது என்று நாம் இங்கு மார் தட்டி என்ன பிரயோஜனம்? அடிப்படையே சரியின்றி ஆகாயத்தில் கோட்டை கட்டி என்ன பயன்? இங்கே வாழும் எவரும் தனது அழகிய மாளிகையை விட்டு இறங்கி நல்லது-கெட்டதுக்கு ஒரு நாள் தெருவுக்கு வரத்தானே வேண்டும்? ஒரு அரசு தான் நிர்வகிக்கும் தெருக்களை அழகு படுத்தாமல், தனி மனிதன் வைத்திருக்கும் கார்களையும் மாளிகைகளையும் அழகு படுத்தி என்ன பயன்? இது, இது வரை வந்த எல்லா அரசுகளுக்கும் பொருந்தும்-இதில் யாருமே மகாத்மா இல்லை என்பதே என் கருத்து! நம்மிடம் நல்ல தெருக்களை உருவாக்க, அவற்றைப் பராமரிக்கத் தேவையான அனைத்து வசதிகளும், மனித சக்தியும் நிறையவே உள்ளது. ஆனால், நம்மிடம் இல்லாதது "அழகுணர்ச்சிதான்" என்று தோன்றுகிறது!
இதன் நிரந்தரத் தீர்வு தான் என்ன?
1. தெருக்களை / சாலைகளை சரிவர நிர்வகிக்காத, பொறுப்பற்ற அரசுப் பணியாளர்களைஅதிகாரிகளை, கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும்!
2. அழகாக நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு பரிசுகள்-பதவி உயர்வு-மரியாதை தர வேண்டும்!
3. ஓரிடத்தில் ஒரு ரோல்-மாடல் தெரு/சாலை ஒன்றை உருவாக்கி, அதிகாரிகளுக்கு அவ்விடத்தைக் காட்டி 'இது போல' உங்கள் பகுதி இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக ஆணை இட வேண்டும்.
4. தெருவின் இருபுறங்களில், முப்பது அடிக்கு ஒரு இடம் வீதம், ஒரு மின்-இணைப்பு, ஒரு தண்ணீர் குழாய், ஒரு கழிவு நீர் குழாய்,ஒரு தொலைபேசி, ஒரு-பிற இணைப்புக்காக என்று நான்கைந்து கான்க்ரீட் பைப்புகளை சாலை போடும் முன்னரே பதித்து வைக்கவேண்டும்.
5. புதிய இணைப்புகள் தரும்போது சாலைகளில் பள்ளம் போடாமல் 99 % பார்த்துக் கொள்ளவேண்டும்.
6. இணைப்புகள் தருவது, வருடத்தில் சில மாதங்கள் என்று வரையறுக்க வேண்டும். மழைக்காலத்தில் இணைப்புகள் தருவது கூடவே கூடாது.
7. தவிர்க்க இயலாமல் பள்ளம் போட்டால், ஓரிரு நாளில் அதை மூடி, இருந்த இடம் தெரியாமல், மீண்டும் அதே போல தார் போட்டு சமப் படுத்துவதை சம்பந்தப் பட்ட ஒரு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். எஞ்சிய மண்ணை அன்றைக்கே அப்புறப் படுத்தி, தெருவை பெருக்கி விட வேண்டும்!
8. இப்படி எல்லாம் ஒரு அரசினால் செய்ய முடியாது என்றால், வரி வாங்குவதை நிறுத்திக் கொண்டு, தெருக்களை அவரவர்களே இனி பராமரித்துக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையாக சொல்லி விடலாமே.
முடிந்தவர்கள், தங்கள் வீதிகளுக்கு பழ மரங்கள் நட்டு வளர்த்து,கான்க்ரீட் சாலை போட்டு, தங்க முலாம் பூசி வைத்து மகிழ்வார்களே! தங்களுக்குள் எந்தத் தெருவுக்கு பரிசு என்று விழாக் கோலம் பூணுவார்களே! இப்படி மாறி மாறி வரும் அரசுகள், நானேதான் அந்த அநியாயத்தை செய்வேன் என்று தன்னால் முடியாத வேலைக்கு மல்லுக்கு நிற்க வேண்டாமே!
- அரசும் அரசு அதிகாரிகளும் இது பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்!
- நமது வருங்கால சந்ததிகள் நல்ல சுகாதாரமான தெருக்களில் விளையாட- நடமாட!
-மோகன் பால்கி