Translate this blog to any language

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஊழல் தேசத்துரோகம் எனும் மாய்மால வித்தை!


ந்திய உயர் சாதி வர்க்கமும், ஆளும் பனியாக்களின் வர்க்கமும் உழைக்கும் இந்திய மக்களிடம் வைக்கும் நஞ்சுதடவிய வாதம் ஒன்றுண்டு! அது என்னவெனில், ஊழலுக்கும் தேசத் துரோகத்துக்கும் எதிரான போர் என்பதுதான்!

இந்த வாதம் மிக மிக அழகான பாம்பு போன்றது!

எதையாவது எதிர்ப்பது போல் பாவலா காட்டுவதும், ஒரு "உட்டோப்பியன்" சமூகம் காண மக்களை இழுத்துச் செல்லும் போலி நம்பிக்கையை ஊட்டி தங்களுக்கான தன்னல வேலைகளை முடித்துக்கொள்வதும் தான் இந்த மாயாவாதத்தின் நோக்கமாகும்.

ஊழலுக்கு எதிர்ப்பென்பது சின்ன சின்ன அரசுப் பணியாளர்களை எப்போதாவது ஒருமுறை, சின்னதாக தண்டிப்பது ஆகும்!

தேசத் துரோகம்  என்பதோ பார்ப்பனீய இந்துத்வ நெறிமுறைகளுக்கு  எதிராக இயங்குவது ஆகும்!

(இங்கு எவரும் ஊழலை ஆதரித்து ஊர்வலம் போகவில்லை. பிடிபட்டவர்களைப் பிடித்து தூக்கில் போடுங்களேன், யார் அழுதார்கள்? )

இது தவிர ஊழல் என்ற பெயரில் பெரிய பெரிய அரசியல் திமிங்கலங்களை கட்சிப் பாகுபாடின்றி ஜெயிலுக்கு அனுப்புவதோ, பெரிய பெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டு கொள்ளையடித்த, கொள்ளையடிக்கின்ற அரசு உயர் அதிகாரிகளை ஜெயிலில் தள்ளுகிற தூய்மை உள்ளம் இந்த நாட்டில் இருப்பதாக எனக்குப் படவில்லை. மேலும், சுவிஸ் வங்கி போன்ற வெளிநாட்டு வங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தை மீட்டு வரும் முயற்சிகளும் இங்கு தெரியவில்லை.

தேசத்து துரோகம் என்பதும், இந்த நாட்டில், இந்த பன்முகத்தவ மக்கள் புழங்கும் பெருநிலப் பரப்பில் வாழும், பல்வேறு இன, மொழி, சமய பண்பாடுள்ள அனைவரையும் ஒன்றே போல் கற்பனையாக கருதி வரையறை செய்வதாகும்!

இங்கு, அடக்குகின்ற இனம் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏமாறுகின்ற இனம் ஏற்பதே தேசப்பற்று என்ற அளவுகோலை வலிந்து திணிக்கிறது இந்திய ஒன்றியம்.

நான்கு பேர் சேர்ந்து பணம் போட்டு குடை வாங்கி அதனடியில் மழை வெயிலுக்கு நிற்கிறார்கள். ஒருநாள், வலிமை நிறைந்த ஒருவன் இந்த குடை முழுவதும் எனக்குச் சொந்தம்; நீங்களும் எனது அடிமைகள். எனது, மொழி,  பண்பாட்டையே இனி நீங்களும் பின்பற்ற வேண்டும் என்பது போன்றது, இந்த தேச பற்று பற்றி பார்ப்பனர்களும் வியாபார பனியாக்களும் பேசும் வஞ்சகப் பேச்சு ஆகும்.


ந்த வஞ்சக நோக்கத்தில் மண்சார்ந்த விவசாயிகளும் பழங்குடி மக்களும் அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த நிலங்கள் மீதான உரிமை குறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு, ஒரு  அரசிடமோ அல்லது திடீர் கையளிப்பு மூலம் ஒரு உள் நாட்டு வெளிநாட்டு நிறுவனத்திடமோ, ஒரு கிராமம் அல்லது காடு, தேச முன்னேற்றம் என்ற பெயரில் திருடப்பட்டு விடும்! அங்கு உண்டாக்கப்படும் (உள்ளபடியே பார்த்தால் மாசுண்டாக்கும்) ஏதோ ஒரு தொழிற்சாலையில் உயர்பணியில் சில பார்ப்பனர்களுக்கு மேலான்மைப் பணிகள் கிடைக்குமல்லவா?

சுருங்கச் சொன்னால், விவசாயம் அது சார்ந்த துணைத் தொழில்கள் என்பன உழைக்கும் வர்க்கத்தினரது ஆகும். அதில் பார்ப்பன பணியாக்களுக்கு கொள்ளையடிக்க பெரிதாக ஏதுமில்லை. எனவே நிலம் என்பதை, ஒரு தொழிற்சாலையாக மாற்றும் போது மேற்படி  இருவருக்கும் கொள்ளை இலாபம் உண்டாக எதுவாக இருக்கிறது அல்லவா? இதனால் தான், இந்தியாவை மாசு மருவற்ற ஒரு பசுமை தேசமாக மாற்றுவதை விட அம்பானிகளும், சாமியார்களும் இதை ஒரு ஒற்றை தொழிற்சாலைகளின் தேசமாக மாற்றுவதை தலையாயக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

இதை நிரூபிக்க என்ன வழி?

இருவருமே, அதாவது பார்ப்பனர்கள், பனியாக்கள் இருவருமே, அதனால்தான் விவசாய முன்னேற்றம், பசுமைப் புரட்சி, நதிகள் இணைப்பு, காடுகள் வளர்ப்பு, விவசாய இடுபொருள்கள் விலை குறைப்பு, நன்னீர் சேமிப்பு, ஏரிகள் குளங்கள் பராமரிப்பு, விவசாயிகள் தற்கொலை இதுபற்றியெல்லாம் பேசவே மாட்டார்கள். மாறாக, புதிய தொழிற்சாலைகள் துவங்குவது பற்றியே பேசிப் பேசி இந்தியக் காற்றை மேலும் மாசு படுத்துவார்கள்.

ஒரு தொழிற்சாலை என்பது, அது அமைந்த நிலம் மீதான சிலபேருக்கான வேலைவாய்ப்பு. அவ்வளவுதான்! ஆனால், அந்த தொழிற்சாலையின் கழிவுகள், சுற்றி உள்ள பத்து கிராமங்களின் அதன் ஆயிரக்கணக்கான மக்கள், ஆடு மாடுகள், மீன்கள், பறவைகள், பிற பூச்சி புழுக்கள், நுண்ணியிரிகளின் நீராதாரத்தைக் கெடுத்து, நீர், நிலம், காற்றில் ஏற்படுத்தும் நிரந்தர மாசு ஏற்படுத்துவது பற்றி பார்ப்பன பனியாக்களுக்கு எந்தக் கவலையும் எந்நாளும் இருந்ததில்லை. அது ஏனெனில், அவர்களுக்கு, மண் மீதான பற்று  இல்லாத நாடோடி குணமே ஆகும்!


என்னைக் கேட்டால், இந்த கலர் கலராக (வண்ணம் வண்ணமாக) விளையாடும் 'சொப்புகள்', (Be it anything, from simple toys to sophisticated cars and luxuries)  செய்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று 'டாலர்' பணத்துக்கு ஆசைப்பட்டு நமது மண்ணை மாசு படுத்தும் தொழில் அதிபர்கள் கால்களில் விழுந்தாவது ஒவ்வொரு தொழிற்சாலையாக மூடச் சொல்லுங்கள். அப்புறம் பாருங்கள், நமது, கிராமங்களை, அங்கு தன்னிறைவடைந்த பொருளாதாரத்தை!

கண்ணை விற்றுவிட்டு எவனாவது  சித்திரம் வாங்குவானா?

இன்றைக்கு, விவசாயத்தை மதிக்காத அரசுகளால் தவறான "தொழிற்சாலை வழி பொருளாதாரக் கொள்கைகளால்", விவசாய வாழ்க்கை ஏறத்தாழ அழிந்து விட்டது. அதன் விளைவு, நீராதாரம் பெருக்க, காக்க, நீர்வழிகளை முறைப்படுத்த அறியாத ஒரு அறிவீன மக்கள்  சமுதாயத்தை நாம் இன்று உண்டாக்கி வைத்திருக்கிறோம். இதனால் தான், சாதாரண மழைக்கு கூட தாங்காத கிராமங்கள், நகரங்களை இன்று அடிக்கடி காண நேரிடுகிறது.

சிறுமழைத் தண்ணீர் கூட, ஓடை, ஏரி, குளம், கால்வாய், குட்டைகள் எதிலும் நிரம்பாமல் நேரடியாக சாலைகள், வீடுகளில் நுழைந்து, நாசம் செய்து கடலை அடைந்து விடுகிற காட்சிகளை வருடம் தோறும் உலகம் முழுதும் பார்க்க முடிகிறது!

என்னவொரு கேவலமிது?

மீண்டும், மழைக்காலம் முடிந்த கையோடு, தண்ணீர் தேடி பிச்சையெடுக்க வேண்டும். தண்ணீரை வியாபாரம் செய்ய வெட்கமின்றி பலப்பல பகாசுர கம்பெனிகள் சந்தைக்கு வந்து விடும்.

என்னவோ போங்கள் !

எதிலோ ஆரம்பித்து, எங்கேயோ சென்றுவிட்டது. அதனாலென்ன? எனக்கா  இணைக்கத் தெரியாது!

ஆக, ஊழல் என்பது, விவசாயத்துக்கு எதிராக செய்யப்படும் அனைத்து வேலைகளும் பெரும் ஊழலே ஆகும்!

தேசத் துரோகம் என்பது, அந்தந்த மண் சார்ந்த மண்ணின் மைந்தர்களின், சொந்த மண்ணில் வாழும் உரிமையை பறிக்க, ஏதோ ஒரு சட்டம் எங்கிருந்தோ போட்டு ஏமாற்றுவதே ஆகும்!

இந்த வலி வேதனையை, உங்கள் ஊரில் பயிரிட என்று ஒரு பத்து சென்ட் நிலமோ, சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒரு கிராமமோ இல்லாத வரையில் புரிந்து கொள்ளவோ, நியாயம் பேசவோ முடியவே முடியாது!

நாடோடிகள், அதனால்தான், மண் குறித்த எந்த "சென்டிமென்டும்" இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுடன், உலகில் எந்த நிலம் மாசு படுவது பற்றியும் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களால், சுட்டிக்  காட்டப்படும், உட்டோப்பியன் ஆட்சி, எப்படி தன்னலம் நிறைந்ததாய் இருக்கும் என்பதும் இதிலிருந்தே உங்களுக்குத் புரியும்!

இன்னொரு முறை வேறொரு தலைப்பில் சந்திப்போம் நண்பர்களே!

-யோஜென் பால்கி

(Yozen Balki)
29th October 2017

சனி, 3 செப்டம்பர், 2016

ஜாதி ஒழிய என்ன வழி?

How to abolish #CasteSystem

என்ன பெரிய கஷ்டம்?

வெவ்வேறு சாதி சார்ந்த இருவர் மணம்புரிந்து பிறக்கும் குழந்தையை
"சாதி அற்றது" என்று அரசே அறிவி!

அக்குழந்தைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, எதிலும் முன்னுரிமை கொடு.

ஜாதி ஒழிந்து விடும்.

பெரியாரும் அம்பேத்கரும் அரும்பாடு பட்டு வளர்த்த ஒரு இந்திய சமூகம் இன்று பின்னோக்கி காட்டுமிராண்டி காலத்துக்குப் போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.

மொழிகள் அழிவது பற்றிய உணர்வின்றி இன்று நாம் ஜாதிகளை உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கே போய் முடியுமோ?

If there is a will; there is a way!

But, autocracy and elite segments wants to keep the caste system for their ulterior motives. So that the Caste survives on...

-Yozenbalki
https://www.facebook.com/yozenbalki