Translate this blog to any language

செவ்வாய், 28 அக்டோபர், 2008

நாளையெனும் மூட- மனம் !


நாளை நாளையென நன்மைசெய நாள்பார்த்து
வேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது
காலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்
சோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்

இல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது
வில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்
தொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்
தில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்!

குளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி
களிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து
புளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு
தெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது!

சேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்
பார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை
கோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்
மூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென!

-மோகன் பால்கி

உயிரின் நாடகம்!


பால்வெண்ணை தயிராகும் தயிர்பாலும் ஆகாதே
நால்வேடம் ஏற்றாலும் உயிர்ஒன்றின் நாடகமே
நானென்ப துடலன்று மனமன்று உணர்ந்தாரை
கொனேன்பர் மறையிலைநீர் அருளாளர் !

உள்ளுக்குள் உள்ளாக உள்ளமனம் ஆன்மாவது
உள்ளிருந்து வெளிப்போந்து விரிகையிலே மனமாம்
மனம்விரிய நானென்ற ஆணவமும் அதுதொடர
கன்மமலம் மாயமலம் தொடரும் தானே!

-மோகன் பால்கி