Translate this blog to any language

வியாழன், 22 ஜூலை, 2010

நினைவாற்றல் உங்களிடமும் மறைந்து கிடக்கிறது-அதை பயன்படுத்துங்கள்!


* நான் ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன்.

* படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை.*
* நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில்    
   பின்தங்கியுள்ளேன்.

இது போன்ற கருத்துகள் உங்களிடமும் இருக்கலாம்.
ஆம் எனில், ஓர் அறிவியல் பூர்வமான உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த மனிதனுக்கும் இவருக்கு குறைந்த அளவு ஞாபக சக்தி அதிக அளவு ஞாபக சக்தி என்று கூற இயலாது. ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்களோ அவ்வாறு தான் அவர்களுடைய நினைவாற்றல் அமைகிறது.
உதாரணமாக: நினைவாற்றலை ஒரு நூலகத்தோடு ஒப்பிடுவோம். அதில் எவ்வாறு குறிப்பிட்ட ஓர் இடத்தில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தாலும் நமக்குத் தேவையான ஒரு புத்தகத்தை எடுக்க முடியுமோ, அதுபோல் நம் நினைவாற்றலை தேவையான முறையில் பயன்படுத்த முடியும்.
எப்படி?
நூலகத்தில் ‘‘Index’’ என அழைக்கப்படும் முறையின் மூலமாக புத்தகங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோல் நம் நினைவில் உள்ள விஷயங்களை சரியாகப் பாகுபடுத்தினால் அவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள எளிதாய் இயலும்.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைப்பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.  

1. கற்றல் மற்றும் மனப்பாடம் செய்தல்: (Reading and Memorizing)

நாம் பாடங்களை படிக்கின்றபொழுது, அவற்றின் பொருளை நன்றாகப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். புரிந்து கொண்டு படிப்பதே நம் நினைவில் ஆழமாகப் பதியும். நமக்குத் தேர்விலும் பயன்படும். புரிந்து கொள்ளாமல் படித்தால் அது உடனே மறந்து போய்விடும். ஆகையால் பயனில்லை. அதேபோல் நாம் ஆர்வத்துடன் படித்தால் அவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் இருக்கும். ஆர்வமில்லாமல் படிப்பவையும் புரிந்துகொள்ளாமல் படிப்பதைப்போன்று மறந்து போய்விடும். எனவே படிப்பில் ஆர்வம் தேவை.

2. நினைவிலிருத்தல் (Retention):
நாம் படித்தவற்றை நம் நினைவில் ஆழப்படியும் படி நிறுத்தி வைத்தலே நினைவிலிருத்தல் ஆகும். நன்றாகப் பொருளுணர்ந்து படித்தால் நினைவிருத்தல் தானாக நிகழும்.

3. நினைவுக்கழைத்தல் (Recall):
நாம் படித்த பாடங்களை அவ்வப்பொழுது நாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். நாம் படித்தவை பதிந்து உள்ளதா என்பது இவ்வாறு செய்து பார்க்கும் பொழுது தெரிந்து விடும். இப்படிச் செய்தால் நாம் தேர்வில் நன்றாக எழுத முடியும்.

4. நினைவு கூர்தல் (Recognition):
நம் பாடங்களை நினைவுபடுத்திக் கொள்வது நினைவு கூர்தல் ஆகும். உதாரணமாக கணிதத் தேர்வு எழுதும்பொழுது அறிவியல் பாடம் நினைவில் வராமல் கணிதம் மட்டுமே நினைவில் வரும்படி குறுக்கீடுகள் இல்லாமல் நன்றாகப் படித்துக் கொள்ள வேண்டும்.

5. மீண்டும் கற்றல்: (Re-reading again and again)

தேர்வு சமயங்களில் புதியதாக ஒரு பாடத்தைப் படிப்பது கூடாது. நாம் ஏற்கெனவே படித்தவற்றை மீண்டும், மீண்டும் படித்தால் நம் நினைவில் நன்றாகப் பதிந்து விடும்.

திறமையுடன் மனப்பாடம் செய்யும் முறை:

இடைவிட்டு கற்றலும் மொத்தமாக கற்றலும் (Spaced and massed learning):
ஒரு பாடத்தைப் படிக்கும்போது அவற்றில் உள்ள வினா - விடைகளை தனித்தனிப் பிரிவாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பிரிவாகப் படித்து முடித்த பின்பும் சிறிது நேரம் இடைவெளி விட்டு பின்பு படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாகப் படித்தால் நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகும். உடனடித் தேவைக்கு மட்டும் மொத்தமாகப் படிக்கலாம். ஆனால் இவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் நிற்காது. ஆனால் இடைவெளிவிட்டுப் படித்தால் நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் பதிந்து இருக்கும்.

முழுமையாகக் கற்றலும், பகுதியாக கற்றலும் (Whole and part learning):
அதாவது நாம் சிறிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடையையோ முழுமையாகக் கற்க இதுவே சிறந்ததாகும். மனப்பாடம் செய்வதற்கு இவ்விரு முறைகள் பயன்படுகின்றன. ஆனால் பெரிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடைகளையோ பகுதி, பகுதியாகக் கற்றால் நன்றாக நினைவில் பதியும். மேலும் இவ்விரு முறைகளையும் சேர்த்துப் படித்தால் அதாவது முதலில் பகுதி, பகுதியாகப் படித்து விட்டுப் பிறகு முழுமையாகப் படித்தால் நன்றாக மனப்பாடம் செய்ய இயலும். அதாவது நன்றாக நம் நினைவில் நிற்கும்.

ஒப்பித்தல் முறை (Recitation method):
இம்முறையில் நாம் கற்றவற்றை நாமே தொடர்ந்து பார்க்காமல் சொல்லிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது பிழைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். தனக்குத்தானே ஒப்பித்துப் பார்த்துக் கொள்ளும் பொழுது கடினமானப் பகுதிகளை முதலிலேயே தெரிந்து கொண்டு அதற்குத் தனிக் கவனம் செலுத்திப் படித்துக் கொள்ளலாம்.

நினைவுக்குறிப்புகள் (Mnemonic Devices):
கற்பவற்றை நாம் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நாம் கற்கும் செய்திகளுக்கு அல்லது விடைகளுக்கு அவற்றோடு தொடர்புடைய ஒரு பொருளையோ அல்லது எண்களையோ நினைவுக்குறிப்புகளாக எடுத்துக் கொண்டு படித்தால் நன்றாக நினைவில் இருக்கும்.

உதாரணமாக Vibgyor என்ற சொல் தெரிந்தால் போதும் நிறமாலை (வானவில் நிறங்கள்) Violet, Indigo, Blue, Green. Yellow. Orange and Red  என்று நமக்குத் தெரிந்துவிடும்.

நினைவு என்பது நம்மிடம் உள்ள தனிச்சிறப்புத் தகுதியாகும். இதைச் சரியாக கைகொள்ளும்போது நம் குறையாய்த் தென்பட்ட பல விஷயங்கள் திருத்தப்பட்டு நினைவுத்திறன் சிறப்பாய் இருக்கும்.

நினைவாற்றல் உங்களிடமும் மறைந்து கிடக்கிறது-அதை
பயன்படுத்துங்கள்!

திங்கள், 19 ஜூலை, 2010

இரண்டது ஒன்றே!


பாறையில் கசியும் பெருமித அன்பு
ஒன்றது இரண்டோ- இரண்டும் ஒன்றோ?


மீண்டும்...

இரண்டொரு பிழையென 'இதயம்' சொன்னது!
இதயம் சொன்னதும்-சொல்வதும் உண்மை!

ஒன்றாய் பிறந்து ஒன்றாய் இருந்து
ஒன்றில் ஒன்றி ஒருமை கொள்வது...

என்றென என்றோ கேட்டது இன்றும்-என்றும்
நினைவில் உள்ளது - ஒன்றது அன்பு !

இதயம் விழைவது நடக்கும் - நட்பே!
அன்பில் நுழைபவர் காலம் அற்றவர்!

-மோகன் பால்கி