Translate this blog to any language

வியாழன், 1 ஜனவரி, 2009

"பனி மலர்கள்" காத்துநிற்போம்!



ஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை
பத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்!

புலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்
புண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்!

புவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்
புண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் !

தீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்
ஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை

ஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்
இன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்!

உயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்
இறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்!

மறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்
தருவோம் நம்இதயத்தை "பனி மலர்கள்" காத்துநிற்போம்!

-மோகன் பால்கி


புதன், 31 டிசம்பர், 2008

"மேற்க்காண்டைப்" பூரிப்போம்! 2009


காலமற்ற காலமிதில்
கணக்கொழிந்த விசும்பிதனில்

நொடிகளிது வருடமிது
எனநமது மனமிரையும்!

மனமற்ற 'மேற்பாழில்'
காலமிலை கணக்குமிலை!

மாற்றமொன்று தேவையென
தேறுகின்ற மாந்தமனம்

மாறிவிடும் தேறிவிடும்
வேறுவழி பார்த்துவிடும்!

ஊழ்தனையும் உட்பக்கம்
காண்டுவிடும் உள்வலியால்

மேதினியில் மேன்மைபல
"மெய்மையினால்" செய்திடுவோம் !

கடலுக்கு துவக்கமிலை
காற்றுக்கு முடிவுமிலை

காலத்தை அளப்பதற்கோ
"மின்மினிக்கு" வழியுமிலை!

நீளுகிறப் பெருவழியில்
இடைதோன்றி மறைமனுவின்

சிறுகணக்கு இதுவெனினும்
புத்தாண்டு வாழ்த்திநிற்போம் !

ஒன்றிரண்டு அச்சடித்த
பழந்தாள்கள் முடிவுபெற்று

புதுத்தாள்கள் புறப்படட்டும்
தவறில்லை முயற்சிக்கு-

ஆரம்பம் ஓரிடத்தில்
அமைத்திடுதல் அறிவுடைமை !

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
முதற்கல்வி குறள் சொல்லும் !

உலகத்தார் போற்றுகின்ற
"மேற்க்காண்டைப்" பூரிப்போம்!

-மோகன் பால்கி

திங்கள், 22 டிசம்பர், 2008

"ப்ரூஸ் லீ" என்னும் ஒரு சகாப்தம் ! Watch Videos



"
ப்ரூஸ் லீ" என்னும் ஒரு சகாப்தம் !

Please visit this website for more details about Bruce lee.

The web site contains Bruce Lee’s fighting methods, his

Photos, videos and Bruce Lee's handwritten essays on

Kung Fu.

http://www.bruceleedivinewind.com


வெள்ளி, 28 நவம்பர், 2008

கடந்து வந்த கால-உச்சிகள்!



மாமலை இடையில்
சிறு மரம் மீதில்
வாழ்ந்திடும்
வாலிபக் குரங்கு!

கொள்கைக் கிளைகளை
'அப்படி' 'இப்படி'
அடிக்கடி மாற்றி
சிரித்தும் பழித்தும்
பேசிக் கழித்து
மகிழ்ந்து தான் கிடக்கும்!

"இதுவே உச்சி"
"முடிந்த முடிவென"
தளர்ந்த முதுமைக்
குரங்கிடம் சென்று
தவறாமல் நின்று
தம்பட்டம் அடித்திடும்!

வயோதிகக் குரங்கோ
தன்வாலிபம் முழுதும்
உச்சியை அறிய
தேடித் தேடி
உழைத்துக் களைத்த
சோர்வில் சிரிக்கும் !

அதன் தேடல் என்றோ
முற்றும் முடிந்தது!

இதை விடப் பெரிய
அரிய மரங்கள் !
ஒன்றை ஒன்று
விஞ்சிடும் மலைகள்!
முடிவேயற்ற உயர உச்சிகள்
கண்டு விண்டு
கடைசியில் சோர்ந்து
'கண்டது கண்மணி அளவு'
காணாதது கற்பனை அளவென'
உணர்ந்து உள்வாங்கி
சின்னப் புள்ளியாய்
அடங்கிக் கிடக்கும்!

இளைய குரங்கின்
இனிய பிரதாபமோ
இன்னும் இன்னும்
பின்னும் தொடரும்...

முதிர்ந்த மலைக் குரங்கோ
ஏதும் பேசாது
மவுனமாய்
நகைக்கும்-

தானும் கடந்து வந்த
'கால உச்சிகளை'
எண்ணி
எண்ணி !

-மோகன் பால்கி

15th July 2000

from MBK Diary



தேன் மலை-நாடு!


எழுது என்கிறை
எதை நான் எழுத?
தேன் என்று எழுதிட
இனிக்குமோ நாக்கு ?

தேனைப் பற்றி
ஆயிரம் நூல்கள்
ஓதியும் என்ன?
தேடல் உள்ளவர்
ஒருவருக்கேனும்
சொட்டுத் தேனை
சுவைக்கத் தருதலே
'இவனின்' ஆசை!

எத்தனை மலைகள்
எத்தனை இடர்கள்
அத்தனை தாண்டி
கொணர்ந்த தேனிது!
குறைவே எனினும்
நிறைவாய்த் தருவேன்!

இடர்களைப் பற்றி ...
அனுபவம் பற்றி ....
நெடுங்கதை பேசி
நெஞ்சு வலித்திட
நிற்க வைத்திடேன்-
ஒருபோதும் நான்!


இந்நாள் மட்டும்
வெறும் பேச்சினால்
மீண்டும் மீண்டும்
விளைந்தது பேச்சே!


தேனை சுவைத்தவர்
எவரோ ஒருவர்
நெருங்கி ஒரு நாள்
'இதனிடம்' வந்து

"அத்தனை ருசியாய்
அந்நாள் நீவிர்
அளித்தது என்ன-
எங்குஅது உளது-
என் கடன் என்னென"
தாகம் மீக்குற
ஆவல் கண்களை
விரித்திடு நாளில்.....

உவகை நெஞ்சுடன்
கைவிரல் பற்றி
ஆதரவோடு
அழைத்துப் போவேன்-
தெய்வமும் போற்றிடும்
"தேன் மலை- நாடு"!

- மோகன் பால்கி
20th March 1999
Kavidhai from MBK Diary





வெற்றி சத்தியம்!


முடியாதென்றவர்
முடங்கிப் போயினர்!

முடியும் என்றவர்
தடை பல தகர்த்தே
செய்து முடித்தனர்-

சரித்திரம் சொன்னது!

இலக்கை நோக்கி
செலுத்திய அம்பு
மீண்டும் கைக்குத்
திரும்பியதில்லை!

விரும்பிய நோக்கம்
உறுதி என்றாயின்
உள்மனம் முடிக்கும்-
வெற்றி சத்தியம்!

-மோகன் பால்கி
April 1999
MBK Kavidhai from

Hypnotic Circle-Chennai Bulletin


காலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்!


ஒவ்வொரு அணுவிலும்
தனித் தன்மை
இப் பிரபஞ்சம் முழுவதிலும்!

ஆதரவற்ற காட்டு மலரிலும்
அற்புதம் கசியும் ஏதோ ஒன்று!

அதை விட மேலாம்
ஏதோ ஒன்று
நமக்குள்ளும் இல்லையா?

நமது விதையிலும்
ஆயிரம் வாய்ப்புகள்...
காலம் காத்திருக்கிறது-மவுனம் சுமந்து !

நம் கற்பகத் தருவின்
பங்களிப்பிற்காக !

-மோகன் பால்கி
10th March 1999
MBK Kavidhai from

Hypnotic Circle-Chennai Bulletin